மழை வேண்டியும் காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும் வேள்வி யாகம்; முக்கொம்பில் குவி...
ஈரோடு மாவட்டம், பண்ணாரி அம்மன் திருக்கோயில்: தரிசித்தாலே புண்ணியம்... திருமண வரம் தேடிவரும்!
ஆடி மாதம் அம்மன் மாதம். இந்த மாதத்தில் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாலோ அம்மன் புகழைப் பாடினாலோ கேட்டாலோ புண்ணியங்கள் பெருகும்.
நம் கவலைகள் விலகும். அதிலும் அம்பிகை பெரும் சக்தியோடு கோயில்கொண்ட தலங்கள் செல்வதும் தரிசிப்பதும் மிகவும் விசேஷம். அப்படி ஒரு தலம்தான் பண்ணாரி அம்மன் கோயில்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது பண்ணாரி. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியான இங்கு அமைந்துள்ள இந்த ஆலயம், இயற்கை அழகோடு விளங்கிவருகிறது. இங்கே அன்னை காக்கும் கடவுளாக காவல் தெய்வமாக விளங்குகிறாள்.
யாருக்குக் காவல்... அன்னையின் ரூபமாக விளங்கும் அந்த வனத்துக்கு... வனத்தில் வாழும் உயிர்களுக்கு... அவற்றோடு இணைந்து வாழும் மலைவாழ் மக்களுக்கு... அவர்களுக்கு மட்டுமா... அவளை அன்போடு 'அம்மா' என்று அழைத்து வேண்டும் பக்தர்கள் இந்த பிரபஞ்சத்தில் எங்கிருந்தாலும் அவர்களையும் ஓடிவந்து காக்கும் தாய் அவள்.

இத்தல வரலாறு மிகவும் தொன்மையானது. ஜமதக்கினி முனிவரின் கோபத்துக்கு ஆளான ரேணுகா தேவி, மகன் பரசுராமரால் சிரம் வெட்டப்பட்டாள். பிறகு, பரசுராமரின் வேண்டுகோளால் மீண்டெழுந்த ரேணுகா பரமேஸ்வரி... இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் குடிபுகுந்தாள்.
ஆரம்பத்தில் ஆவேச ரூபமாக இருந்த அன்னை, இங்கிருந்த வெள்ளந்தியான மக்களின் அன்பைக் கண்டு குளிர்ந்த மேகமாக மாரியாக மாறினாள் என்கிறது தலபுராணம்.
மற்றுமொரு புராணம், பல ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் பண்ணார்க்காடு என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தவள்தான் இந்தத் தாய். அதனாலேயே பண்ணாரி அன்னை எனப் பெயர்பெற்றாள் என்கிறது.
மனதை உருக வைக்கும் மற்றொரு சம்பவத்தையும் சொல்கிறது தலபுராணம். `வனப்பகுதிக்குள் வசித்த சலவைத் தொழிலாள தம்பதி, காட்டாற்றில் துணி துவைத்துக்கொண்டிருந்தார்கள். நிறை மாத கர்ப்பிணியான அந்தப் பெண், அங்கேயே பிரசவ வலி உண்டாகி இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
ஒரு குழந்தையை கணவன் தூக்கிக்கொள்ள, மற்றொரு குழந்தையைத் தூக்க முடியாமல் இருவருமே தவித்தார்கள். குழந்தை கனத்துக்கொண்டே செல்ல, ஒருவழியாக அங்கிருந்த கல் பதுக்கையில் குழந்தையை வைத்துவிட்டு, ஊருக்குள் வந்து விஷயத்தைச் சொன்னார்கள்.

ஊர் கூடி வந்து குழந்தையை மீட்பதற்காக, இரும்புக் கடப்பாரை கொண்டு கல் பதுக்கையைத் தூக்க முயல, கடப்பாரை பட்டு குழந்தையின் வல மார்பில் ரத்தம் வடிந்தது (அந்தக் காயம் இன்றும் அம்மனின் வல மார்பில் இருப்பதைக் காணலாம்). குழந்தை உருமாறி அம்மனின் சிலையாக மாறிவிட, அங்கிருந்த சிறுமிமீது அம்மன் வந்து, `எனக்குக் கோயில் கட்டி, விழா எடுங்கள்!' என்று ஆணையிட்டாள். அப்படியே கோயில் கட்டப்பட்டு, திருவிழாவும் தொடங்கியது.
விழாவன்று கொங்கு நாட்டு வழக்கப்படி மக்கள் எல்லோரும் பச்சைத் தினை மாவு எடுத்து வடக்குத் திசை நோக்கிச் சென்றனர். பிள்ளையை ஈன்ற சலவைத் தொழிலாளி பெண் மட்டும் வறுமை காரணமாக பச்சைத் தினை மாவுக்குப் பதில் புளியங்கொட்டையை இடித்து மாவு செய்து அச்சத்தோடு தெற்கு நோக்கிச் சென்றாள்; அவள் பக்திக்கு மனமிரங்கி அம்மனே தெற்கு நோக்கிக் காட்சி அளித்தாள்.'
சலவைத் தொழிலாளிகளுக்காக அம்மன் தோன்றியதால் அவர்களின் சமுதாயக் கடவுளாக வணங்கப்பட்டவள், தற்போது அனைவரின் தெய்வமாக விளங்கி வருகிறாள். இங்கு வந்தாலே எல்லோரின் குறைகளும் நீங்கிவிடும் என்பது பலரின் நம்பிக்கை. ஆந்திர, கர்நாடக, தமிழ்நாட்டு மக்களின் இஷ்ட தேவதையாக இந்த மாரியம்மன் விளங்கிவருகிறாள்.
ஆடி, பங்குனி மாதங்கள் இவளுக்கு விசேஷ விழாக்கள் நடைபெறுவது வழக்கம். பங்குனி மாதத்தில் இத்திருக்கோயிலில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு குண்டம் இறங்கி, பண்ணாரி அம்மனின் பூரண அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். பண்ணாரி அம்மனை வழிபட்டால் குழந்தை வரம், திருமண வரம் போன்ற பல வரங்கள் கிடைக்கின்றன.

பண்ணாரி அம்மன் தெற்கை நோக்கி சுயம்பு தேவியாக அருள்பாலிக்கின்றாள். இந்தக் கோயிலில் விபூதி கிடையாது. புற்று மண்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயிலுக்கு தெற்கே 9 கி.மீ தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது.
இதன் குறுக்கே பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு 5 கி.மீ தொலைவில் மாதேசுரசாமி கோயிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. சுற்றிலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை இந்த அன்னையின் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.



















