Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
உங்கள் பயத்தை ஆசிரியராக மாற்றும் ரகசியம்! - மறந்துபோன பண்புகள் - 7
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
துணிவு என்றால் என்ன?
துணிவு என்பது பயம் இல்லாமல் இருப்பதல்ல, பயம் இருந்தபோதிலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாம் எடுக்கும் முடிவே துணிவு.
இன்று தோல்வி அடைந்தாலும் நாளை நான் மீண்டும் முயற்சிப்பேன் என்று சொல்லும் அந்த அமைதியான உள் குரல் தான் அது.
நாம் பெரும்பாலும் துணிவு என்றால் போரில் போராடுவது, யாரையாவது ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற வீரச் செயல்களுடன் ஒப்பிடுகிறோம் ஆனால் அன்றாட வாழ்வில் துணிவு என்பது உண்மையை பேசுவது, நேர்மையாக நடந்து கொள்வது, புதிய வாய்ப்புகளை கண்டு அஞ்சாமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முயற்சிப்பது.

துணிவின் முக்கியத்துவம்:
துணிவு இருந்தால் தான் நம்மிடம் இருக்கும் மற்ற அனைத்து நற்குணங்களும் ஒளிர்ந்து வெளிப்படும்.
உங்கள் வாழ்வில் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்படும் போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது துணிவு.
மனதளவிலான உறுதியையும், சுயமரியாதையையும் அது வளர்க்கிறது.
ஒரு துணிவான செயல் பலரையும் ஊக்குவிக்கிறது.
துணிவு இருந்தால், பயம் உங்கள் எதிரியாக இல்லாமல், ஒரு ஆசிரியராக மாறும்.
இன்றைய காலத்தில் ஏன் மக்கள் துணிவை இழக்கிறார்கள்?
நாம் ஏதாவது துணிச்சலாக செய்து அது தவராகிவிட்டால் என்ன செய்வது என்ற தோல்வியின் பயம் பலரிடம் இருக்கிறது.
நாம் செய்கின்ற செயல்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நம்மை எப்படி மதிப்பிடுவார்கள் என்ற மதிப்பீட்டின் பயம்.
அதீத சிந்தனை, எப்போதும் இதை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து கொண்டு காலத்தை கடத்துவது, அது மட்டுமல்லாமல் நடக்கவே நடக்காத எதிர்மறை முடிவுகளை மனதில் உருவாக்கி கொண்டு வருந்துவது.
தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, இது என்னால் முடியாது, இந்த துணிச்சல் என்னிடம் இல்லை என்ற எண்ணம் ஒருபோதும் நம்மை முன்னேற விடுவதில்லை.
சரி எப்படி துணிவை வளர்ப்பது?

துணிவை வளர்க்கும் வழிகள்:
உங்களுடைய சிறிய சிறிய பயங்களை கண்டறியுங்கள், சிலருக்கு கூட்டத்தில் பேசுவதற்கு பயமாக இருக்கலாம், புதிதாக ஒன்றை முயற்சிக்க பயம் இருக்கலாம், சில நேரங்களில் இல்லை, இப்போது என்னால் அது முடியாது என்று சொல்வதற்கு பயமாக இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் சரி, துணிவாக அவற்றை எதிர்கொள்ளுங்கள்.
எப்படி எதிர்கொள்வது என்று கேட்கிறீர்களா?
உதாரணத்திற்கு, மேடை பேச்சு என்றாலே எனக்கு பயம் என்று கூறுபவர்கள் அதை பயிற்றுவிக்கும் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம், அதை முறையாக கற்றுக் கொள்ளலாம். அங்கே கொடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளில் நீங்கள் பயந்தாலும் உங்களை மேடையில் ஏற்றி விடுவார்கள் நீங்கள் பேசி தான் ஆக வேண்டும்.
யோசித்து பாருங்கள் முதல் முறை உங்கள் பயத்தை தாண்டி துணிவுடன் நீங்கள் விரும்பும் செயலை செய்வது எத்தகைய உணர்வை உங்களுக்குள் ஏற்படுத்தும். துணிவின் பாதையில் நீங்கள் பயணிக்க எடுத்து வைக்கும் முதல் படி பயத்தை எதிர்கொள்வது தான்.
உங்கள் தோல்வியை ஏற்று கொள்ளுங்கள், எப்போதுமே ஒருவரால் வெற்றியை மட்டுமே அனுபவிக்க முடியாது, நீங்கள் தோல்வி அடையவில்லை என்றால் எப்படி ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். தொடக்கம் எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆம், நான் இந்த முறை தோற்றுவிட்டேன் நான் என்ன தவறு செய்தேன் ஏன் இப்படி நடந்தது என்று ஆராய்ந்து தவறுகளை சரி செய்து முன்னேறுங்கள்.
இன்று செயற்கை நுண்ணறிவு பாதையில் உலகம் நுழைந்துவிட்டது, அட இது என்ன புதிதாக இருக்கிறதே இதை எப்படி கற்றுக்கொள்ள முடியும் என்று அச்சப்பட்டு அதை கற்றுக்கொள்ளவோ, பயன்படுத்தவோ மறுப்பவர்கள் இருக்கும் இடத்திலேயே தேங்கி விடுவார்கள் ஆனால், இந்த புதிய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதை கற்றுக் கொண்டு சரியாக பயன்படுத்துபவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள்.
உடல் வலிமையாக இல்லை அதனால் என்மீதே எனக்கு நம்பிக்கை இல்லை, எப்போதுமே ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தேவையற்ற பயம் என்று தான் உங்களுக்கு நான் சொல்லுவேன். உடல் வலிமையை விட மனவலிமை அதிகமாக உள்ளவர்களே வெற்றியை சுவைக்கிறார்கள்.
நீங்கள் எப்போதெல்லாம் பயம் கொள்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை தாண்டி வெற்றி அடைவதுபோல சிந்தனை செய்து பாருங்கள், இது நீங்கள் பயத்தை மீறி செயலில் இறங்க உங்களை ஊக்குவிக்கும்.
துணிவு என்பது நேர்மை, வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்தின் அடித்தளம். ஒரு துணிவான நபர் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதோடு, மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வலிமையை கடைபிடிக்க உதவுகிறார்.

செய்முறை பயிற்சி:
உங்களின் பயம் என்ன ?
பயத்தின் காரணம் என்ன ?
அதை எப்படி எதிர்கொள்ளலாம் ?
மேலே இருக்கும் கேள்விகளுக்கு சிந்தித்து உங்கள் பதிலை எழுதுங்கள், பின் உடனே செயலில் இறங்குங்கள்.
வெற்றி பெறுங்கள்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்.





















