பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?" - அண்ணாமலை ஒப்பன் ...
`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' - செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “100 நாள் வேலை திட்டத்தை 125 நாள்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. அனைத்தும் முடிவான பின்பே தெரியும்.
ஜாக்டோ ஜியோ பாராட்டு கூட்டங்கள் எல்லாம் நடைபெற்றது, ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் ஏமாற்று வேலை, அனைத்தும் பொய். அதற்குரிய விளக்கங்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சி வந்தவுடன் அவர்களுக்கு தேவையான நன்மைகள் செய்வோம்.

போராட்டங்களால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. துப்புரவு பணியாளர்களை கைது செய்தனர் பின் காலை உணவு வழங்கி வருகின்றனர்.
நான்கு வருடம் பத்து மாதத்திற்கு பின்பு அனைத்து அமைச்சர்களும் செயல்படுகின்றனர். ஏதோ அனைத்தையும் சரி செய்தது போன்று ஏமாற்று வேலையை திமுக செய்து வருகிறது.
மக்களுக்கு புரிய வேண்டும் என ’கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ‘ என ஹிந்தியில் பெயர் வைத்துள்ளனர். தெரியாதவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பல திட்டங்களுக்கு தற்போது மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர்.
பிள்ளைகள் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும்போது பாதியில் நிறுத்திவிட்டனர் என செய்திகள் பார்த்தேன். மோசமான ஆட்சிக்கு இது ஒரு உதாரணம். நிர்வாக திறமையற்ற மோசமான ஆட்சிக்கு இதுவே சாட்சி. யாராவது இப்படி செய்வார்களா?

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேசிய தலைமை தற்போது தேமுதிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தையை மாநில அளவில் முடிக்க முடியவில்லை என்பதால், அவர்கள் எடுத்துள்ளனர். நல்ல விதத்தில் முடியும்.
பாஜக எங்களது கூட்டணியில் தான் உள்ளனர். பாஜக கூப்பிட்டாலும் நாங்கள் கூப்பிட்டாலும் கூட்டணி எங்களுடன் தான். சிலர் அதிமுக-வை நம்பி வருவார்கள் சிலர் பாஜக-வை நம்பி வருவார்கள். பாஜக கூட்டினாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு தான் வருவார்கள்.
அதிமுக தான் கூட்டணி குறித்து பேசி வருகிறது. சில முரண்படாத தலைவர்கள் உள்ளனர். மத்திய அரசாங்கத்தில் பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை அங்கேயே பேச சொல்லி உள்ளோம். முடிவு அதிமுக-விற்கு சாதகமாக வரும். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என அமித்ஷா அறிவித்தார்.
சென்ற முறை ரூ.1500 அறிவித்தோம்.ஆனால் எங்களுக்கு முன்பே திமுக 1000 ரூபாய் அறிவித்தது எடுபட்டுவிட்டது. அதனால் இந்த முறை ரூ.2000 தருகிறோம் என முந்திக் கொண்டோம். இதற்கு வயிறு எரிந்தால் நாங்கள் என்ன செய்வது.
செங்கோட்டையனை நினைத்து கண்ணீர் விட தான் வேண்டும். எங்களுடன் இருந்த பெரிய மனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார். செங்கோட்டையன் அவர்களுக்கு என தனியாக தகுதிகள் உள்ளது.
சின்ன சின்ன தாளத்தில் அடிப்பார்கள், ஆனால் அண்ணன் செங்கோட்டையன் தாம்பலத்தில் டம் டம் என்று அடித்து வருகிறார். அப்போதும் செங்கோட்டையனை நாலாவது அல்லது ஐந்தாவது இடத்திலேயே உட்கார வைத்துள்ளனர். எங்களுடன் முதலிடத்தில் இருந்தார். கண்ணீர் வடிக்கின்றோம் எங்களுக்கும் அந்த நிலை வந்து விடக் கூடாது என்று, அவரது நிலை தாழ்ந்து விட்டது” என்றார்.












