ஆண்தாய் ஆனந்த் `டு' பிஸி ஆனந்த் - தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ...
எச்சரித்த எ.வ.வேலு; தட்டிக்கொடுத்த விஜய் - வேலூர் TVK வேட்பாளர் ரேஸில் முந்தும் வினோத் கண்ணன்!
வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், வினோத் கண்ணன் என்பவர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகவும் மாறியிருக்கிறார். விஜய் பேசி முடித்தப் பிறகு அவருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் வேலூரின் அடையாளங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற பொற்கோயில் காட்சி மாதிரியை பரிசாக வழங்கினார் வினோத் கண்ணன்.
அப்போது, வினோத் கண்ணனை அழைத்த விஜய் அவரின் தோள்மீது கைப்போட்டு தட்டிக்கொடுத்தது, அனைவரிடமும் மிகுந்த கவனம் பெற்றது. போர் யானை பரிசுப் பொருளில் வினோத் கண்ணன் பெயருக்குக் கீழே `வேலூர் சட்டமன்றத் தொகுதி’ எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த பரிசுப்பொருளை விஜய் கையில் வாங்கியபோது, `இது வெள்ளி யானை மட்டுமல்ல, வேலூரின் வெற்றி யானை’ எனவும் முழங்கினர் த.வெ.க-வினர்.

யார் இந்த வினோத் கண்ணன்..?
த.வெ.க செயற்குழு உறுப்பினராக கட்சிப் பொறுப்பு வகிக்கும் வினோத் கண்ணன், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராகக் களமிறங்க ஆயத்தமாகியிருக்கிறார். வேலூரில், `ஶ்ரீ மெமன்டோஸ்’ என்கிற பெயரில், விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் விற்பனையகம் நடத்தி வரும் வினோத் கண்ணன், மாவட்டத்தைத் தாண்டி பெங்களூர் வரையிலும் டிராபி பிசினஸில் வேகம் காட்டுகிறார்.
அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மனக்கணக்குப் பயிற்சி அளிக்கும் `அலமா அபாகஸ்’ கல்வி நிறுவனத்தையும் 2009-ல் இருந்து நடத்தி வருகிறார் வினோத் கண்ணன். அவரின் அலமா அபாகஸ் பயிற்சி நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கிக்கொண்டிருக்கிறார் வினோத் கண்ணன்.
பொற்கோயிலுடன்கூடிய நாராயணி பீடத்தை நிறுவிய மடாதிபதி சக்தி அம்மாவின் ஆசி, அரவணைப்பும் வினோத் கண்ணனுக்கு இருக்கிறது என்கிறார்கள். வணிக நிர்வாகம் சார்ந்த பி.பி.ஏ இளங்கலை பட்டப்படிப்புப் படித்திருக்கும் வினோத் கண்ணனுக்கு எழிலரசி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

தி.மு.க அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான எ.வ.வேலு, கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி வேலூர் உட்பட 9 தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய எ.வ.வேலு, `வேலூர் சட்டமன்றத் தொகுதியில் கணிசமாக இருக்கும் முதலியார்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளை நடிகர் விஜய்யின் கட்சி டார்கெட் செய்திருக்கிறது.
இதனால், தி.மு.க அடிசறுக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நிர்வாகிகளை எச்சரித்திருந்தார். எ.வ.வேலு அப்படிச் சொன்னதற்குப் பின்னால் 2 காரணங்கள் இருக்கின்றன. த.வெ.க-வில் சீட் கிடைக்க வாய்ப்பிருக்கும் வினோத் கண்ணனும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். பொருளாதாரத்திலும் வலுவாக இருக்கிறார்.
தி.மு.க தலைமையிடம் `பென்’ டீமும், உளவுத்துறையும் கொடுத்த ரிப்போர்ட்டிலும் வேலூர் தொகுதி த.வெ.க வேட்பாளராக வினோத் கண்ணனின் பெயரே அடிபட்டிருந்தது. இதை மனதில் வைத்தே `சமூக ரீதியான வாக்குகள் சிதறும்’ என வெளிப்படையாகப் போட்டுடைத்திருந்தார் அமைச்சர் எ.வ.வேலு. இந்த நிலையில்தான் வினோத் கண்ணன் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணியிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். விஜய் நிகழ்ச்சியையொட்டி, கடந்த ஒன்றரை மாதமாக மாவட்ட தலைமையுடன் இணைந்து ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்தார்.
நிகழ்ச்சி நடைபெற்ற 33 ஏக்கர் மைதானமும் கரடு முரடாகத்தான் இருந்தது. அவற்றை ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்து சமன்படுத்திய செலவுகளை ஏற்றுக்கொண்டதோடு, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் குடிநீர் மற்றும் உணவு வழங்கியிருக்கிறார். அதாவது, 6 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் 35 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார் வினோத் கண்ணன்.

சாலை மார்க்கமாக வந்த விஜய்யின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற அகரம்சேரி வரை வரவேற்பு பேனர்களையும், போஸ்டர்களையும் ஒட்டி அமர்க்களப்படுத்தியிருந்தார் வினோத் கண்ணன். இதுபற்றி, அவரிடம் கேட்டபோது, ``இன்று, தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தலைவராக மாறியிருக்கிறார் தலைவர் தளபதி விஜய். அவர் வழியில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற ஆசையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிக்கிறேன். வேலூருக்குத் தளபதி வந்துசென்ற பிறகு அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மக்களிடமும் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. வெற்றி நிச்சயம்’’ என்றார்.
____________
வேலூர் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும் பதிவிட வேண்டுமா? - link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.!













