'The Paradise படத்தில் தண்ணீருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி இருக்கிறதா?' - நானி ...
"ஏன் வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்கள்" - லாரி டிரைவராகப் பணியாற்றும் 25 வயது விமானப் பணிப்பெண்
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் விமான பணிப்பெண் வேலைக்குப் படித்து விட்டு லாரி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான நேஹா தாக்கூருக்கு, சிறுவயதிலிருந்தே லாரி அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
அவரது தந்தை ஒரு லாரி டிரைவராகப் பணிபுரிந்தார். மேலும் சில சமயம் தனது தந்தையின் லாரியில் நேஹா பள்ளிக்குச் செல்வார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் குழந்தைப் பருவ மோகம் எதிர்பாராதவிதமாக அவரது வேலையாகவே மாறிவிட்டது.
பட்டப்படிப்பை முடித்த பிறகு சண்டிகரில் விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற தாக்கூர், இறுதியில் தனது சொந்த ஊரான மண்டிக்குத் திரும்பினார். அவர் மண்டிக்குத் திரும்பிய பிறகு தனது தந்தையின் தொழிலான லாரி டிரைவர் வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளர்.

இமாச்சலப் பிரதேசத்தின் முதல் பெண் லாரி டிரைவராக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பயணம் குறித்து வெளியிட்டுள்ள காணொயில் விரிவாகப் பேசி இருக்கிறார்.
அதில், "சிறுவயதில் இருந்தே என் தந்தை லாரி ஓட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் அவர் எங்களை லாரியில் பள்ளியில் இறக்கி விடுவார். இப்போது நானும் என் தந்தையைப் போலவே லாரி ஓட்டுகிறேன். நான் இமாச்சல பிரதேசத்தின் முதல் பெண் லாரி டிரைவர். நான் 22 வயதில் லாரி ஓட்ட ஆரம்பித்தேன்.
காலையில், லாரி ஓட்ட தொடங்கும்போது, எனது கேமராவும் ஸ்டார்ட் ஆகும். மலைகள், மழை, மூடுபனி, சுமைகள், இறக்குதல், ஏற்றுதல், இவை அனைத்தும் எனது கேமராவில் வீடியோவாக மாறும். எனது அன்றாட வாழ்க்கையே எனது காணொலியாக இருக்கும்.
ஏன் லாரி ஓட்டுகிறாய்? ஏன் வேறு ஏதாவது வேலை இல்லையா? என மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், ஆனால் எனது எளிய பதில், 'ஏன் லாரி ஓட்டுவது வேலை இல்லையா ?' என்பதுதான். சிறுவயது முதல் இப்போது வரை, நான் மக்களின் அணுகுமுறைகளைப் பார்த்திருக்கிறேன். மேலும் மக்கள் பெரும்பாலும் ஓட்டுநர்களைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசுகிறார்கள். ஆனால் அதே மக்கள் நினைக்கும் விதத்தை நான் மாற்ற விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
இந்தக் காணொலி வைரலாகி இருக்கிறது. ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆஹா-பெண்கள் தங்கள் அச்சங்களைத் தோற்கடிப்பதற்கும், அவர்கள் விரும்புவதைச் செய்வதற்கும் வழி காட்டுகிறார். நேஹா ஜொலித்துக்கொண்டே இருங்கள்" என்று எழுதியுள்ளார்.
மற்றொருவர், "நீங்கள் மிகவும் வலிமையான பெண், உங்களுக்குப் பாராட்டுகள்! உங்கள் பயணத்தைப் பார்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. உங்களுக்கு அதிக சக்தி, அதிக வெற்றி மற்றும் முடிவில்லாத பிரகாசம்" என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.
நேஹா தனது 22 வயதில் இருந்தே லாரி ஓட்டி காணொலிகளை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் லாரி ஓட்டுநர்களைப் பற்றியும், அவர்களின் கஷ்டங்களைப் பற்றியும் தனது காணொலிகளில் அவர் பேசி இருக்கிறார். மேலும் தனது இந்தப் பணி ஓட்டுநர்களின் நிலையை மாற்ற உதவும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


















