செய்திகள் :

`ஒத்த தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே...' ஆணவக்கொலை செய்யப்பட்ட பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை 4

post image

வலுத்திலுத்தும் தங்கையவள்

வர மாட்டேனென்றதினால்

கழுத்தறுத்து வெட்டினார்கள் காரிகையை அன்னேரம்.

வெட்டுப்பட்ட அவள்தலைதான் வேகமாக உருண்டைதையா!…”

- பூச்சியம்மன் வில்லுப்பாட்டு

“ திருநவேலிக்கு மேக்க தென்காசிக்கு போறவழியில பாவூர் இருக்குல... அங்க ஏழு அண்ணமாருக்கு ஒத்தைக்கு தங்கச்சி ஒருத்தி இருந்திருக்கா. அவ பேரு பொயிலாம் பூச்சி. இவங்க பள்ளர் சமூகத்தை சேர்ந்தவங்க. அவ அம்மையும் அப்பனும் வரம் இருந்து பெத்தபிள்ளைங்கிறதுனால பெத்தவங்க செத்தப்பெறவு தங்கச்சி மேல பாசங்கொண்டு ஏழு அண்ணமாருங்க தான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி குடுத்து வளத்துட்டு வந்துருக்காங்க.

அவ அண்ணங்க ஆம்பிளையால மட்டும் பெண்பிள்ளையை வளக்க முடியாதுன்னு நினைச்சி ‘என் தங்கச்சியை நல்லா பாத்துக்கிடணும்ன்னு சொல்லி தான்’ கல்யாணமே முடிச்சிருக்காங்க. அதுக்கேத்த மாதிரி மையினி மாரும் கண்ணுக்கு கண்ணாதான் நாத்தனாரை பாத்திருக்காவ. பிள்ளையும் ஆளும் அழகுமா நல்லா வளந்திருக்கா.

உழக்குடியில் உள்ள பூச்சியம்மன் - பட்டபிரான்

ஒரு நாளைக்கு கூடச்சேர்ந்த பிள்ளைகளோட கிணத்துல இருந்து தண்ணீ எடுத்துட்டு வரேயில பட்டபிரான் மாட்டைப் பத்திட்டு போயிருக்கான். இவேன் யாருன்னு கேட்டா கிழக்க வல்லநாட்டுக்காரன். தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஆளு. இவன் தொழிலே மாட்டு வியாபாரந்தான். அவன் மாட்டைப்பத்திட்டு போவயில ரெண்டு பேரும் பேசுக்கிடுதாவ. அவனுக்கும் அந்தப் பிள்ளைய பாத்ததும் பிடிச்சிருக்கும் போல, கொஞ்ச நாளைக்கு அப்பறம் பொயிலாவோட மூத்த அண்ணனை பாத்து தன் வியாபாரத்துக்கு உதவிக்கு கேட்டு வர்றான்.

அப்படியே ரெண்டு பேருக்கும் பழக்கம் உண்டாகி விரும்ப ஆரம்பிச்சிடுதாவ. அடிக்கடி ரெண்டு பேரும் ஒண்ணா நின்னு பேச ஆரம்பிக்க ஒருநாள் பொயிலாவோட மூத்த மையினி இதைப் பாத்திட்டு ‘‘என்ன தம்பி, ஆம்பிள இல்லாத வீட்டில் சமஞ்ச புள்ளகிட்ட பேசிட்டு இருக்கேளே.’’ன்னு கேட்டிருக்கா. உடனே பொயிலா குறுக்க வந்து ‘‘மைனி, இவிய இப்பத்தான் வந்தாவ ’’ன்னு சொல்லிருக்கா. அவளுக்கு அப்போவே ஒரு சந்தேகம் வந்திருக்கு.

நம்ம ரெண்டு பேரும் வேத்து சாதி [ வேற வேற சாதி ] நம்ம ரெண்டு பேத்தையும் ஒண்ணா இந்த ஊருசனம் ஏத்துக்கிடுமான்னு பொயிலா கேட்க, 'யாருக்காகவும் உன்ன நா விடமாட்டேன்னு இப்பயே வா நம்ம இந்த ஊரைவிட்டு போயிறலாம்ன்னு சொல்லிருக்கான்'. அப்போ ரெண்டு பேரும் ஊரைவிட்டு போக முடிவு செய்தாவ.

வீட்டு வெளியில மூத்த அண்ணன் மக ஒயிலாவோட விளையாண்டுட்டு இருக்கேன் சொல்லி வெளிய வந்து அந்தப்பிள்ளையோட கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாண்டுருக்கா. கண்ணைக்கெட்டிவிட்ட ஒயிலா தான் அத்தையைக் கண்டுப்பிடிச்சதும் பக்கத்துல நின்ன நாயுருவி செடியை எடுத்து அந்தப்பிள்ளை மேல அடிச்சிருக்கா.

அந்தச் சின்னப்பிள்ளை சட்டை, பாவடை முழுக்க நாயுருவி ஓட்டிக்கிச்சு. அந்த ஒயிலாப்பிள்ளையோ ‘‘என்ன, அத்தே. நாயுருவி காய், என் பாவாடை மேல முழுசா ஒட்டிகிட்டு.’’ன்னு சிணுங்க, ‘‘ஒயிலா இதை ஒவ்வொண்ணா எடுத்து முடிச்சிட்டு, என்னைய கண்டு பிடிக்கணும். அதுவரை அத்தை ஒளிஞ்சிருக்கேன்’’ன்னு சொல்லி கிணத்துப்பக்கம் நின்ன பட்டப்பிரன் கூடச் சேர்ந்து போயிருக்கா. அவ கூட அவ வளத்த பூச்சி நாயும் சேர்ந்தே போயிருக்கு.

அந்தச் சின்னப்பிள்ளை நாயுருவியை எடுக்க முடியாம அவ அம்மைக்கிட்டே அழுதுக்கிட்டே போய் நின்னுருக்கா. அவ அம்மை அத்தைய எங்க? நீ மட்டும் வாரன்னு கேட்க, அத்தை அங்க ஒளிஞ்சிருக்காவன்னு கை காமிச்சிருக்கா. உடனே அவ ஒளிஞ்சிருந்த நாத்தனாரை தேட அங்க எங்கயும் பொயிலாளையும் பூச்சி நாயையும் காணும். விசயம் புரிஞ்சி தான் புருசங்கிட்ட சொல்ல, அவங்க ஆசைக்கு ஆசையா வளத்த பிள்ளை வேத்து சாதியவனோடு ஓடிப்போச்சேங்கிற ஆத்திரத்துல ஒவ்வொரு இடமா தேடுதானுங்க அண்ணமாரு ஏழு பேரும்.

" உடன் போக்கா வந்த பொயிலாளும் பட்டபிரானும் வல்லநாட்டுக்கு கிழக்க இருக்க உழக்குடி காட்டுக்குள்ள ஒளிஞ்சி வாழ்ந்துட்டு இருக்காவ. சாப்பாட்டுக்கு எதுவும் வழியில்லாதனால அங்க மேய்ந்திட்டு இருந்த ஆட்டை பிடிச்சி சமைச்சி சாப்பிட்டு வந்திருக்காவ. அங்க ஆடு மேய்க்கிற கோனாருங்களுக்கும் ரொம்ப நாளா ஆடு காணாம போறது ஒண்ணும் புரியாம இருந்திருக்கு.

ஒரு நாளைக்கு மத்தியனம் நேரத்துல புகை வர்றதை பார்க்கவும் நம்ம ஆட்டை தான் களவாண்டு சாப்பிடுதாங்களோங்கிற எண்ணம் வருது. அந்த நேரத்துல பொயிலா அண்ணங்க வேத்தாள் ரெண்டுபேத்தை பாத்தீங்களான்னு கேட்கவும், இப்படி இந்தக்காட்டுல இருந்து புகை வருது, அடிக்கடி எங்க ஆடும் காணம போவுதுன்னு கோனக்கமாரு சொல்லிருக்காவ.

இதைக்கேட்ட அண்ணமாருங்க குன்றுல ஏறி உடைமரக்காட்டுக்கு போறாங்க. அங்க பொயிலா மடியில பட்டபிரான் தலை வச்சி உறங்கிட்டுருந்திருக்கான். இதைப்பாத்த அண்ணங்க பொறுக்கமுடியாம கொண்டு வந்த ஈட்டியை வச்சி குத்தி கொன்னுருதானுங்க. அவளை எங்க கூட வான்னு கூப்பிட அவ என்னையும் இங்கயே கொன்னுருங்கன்னு அழுதுக்கிட்டே மன்றாடிருக்கா. அவ கடைசி அண்ணன் மட்டும் வேண்டாம் அவளைக் கொல்ல வேண்டாம்ன்னு சொல்லிருக்கான். ஆனா பொம்பளைக்கு அவ்வளவு வீறாப்புன்னு மத்த ஆறுபேரும் அவளையும் வெட்டிக்கொன்னுடுதாங்க.

கூட நின்ன பூச்சி நாயையும் வெட்டிக்கொன்னு மூணு பேத்தையும் ஒண்ணா எரிச்சி எரியாத எலும்பையும், எரிஞ்ச சாம்பலையும் ஆத்துல கரைச்சிட்டு பாவூருக்கு போயிருக்காங்க. போற வழியில அவளை கொல்ல வேண்டான்னு சொன்ன அண்ணனை தவிர மத்த ஆறுபேரும் அப்படி அப்படி விழுந்து சாவுறாங்க. இதைப்பாத்த கடைசி அண்ணன் தான் ஊர்ல போய் கோயில்கட்டி சாமி கும்பிடுறேன்னு சொல்லி வந்திருக்கான்.

இங்க இன்னொரு பக்கம் அவ ரெண்டு பேரும் இருக்க இடத்தை காட்டுக்குடுத்த கோனக்கமாருங்க ஆடுக ஒவ்வொன்னும் செத்துட்டே இருந்திருக்கு. என்ன விசயம்ன்னு கேடாங்கிட்ட கேக்க, உங்க ஊருக்கு அடைக்கலம் வந்த பிள்ளைகளை காட்டிக்குடுத்து கொன்னுருக்கீங்க. அந்தப்பாவம் தான் உங்களைச் சுத்தி சுத்தி வருது. அவங்களுக்கு கோவில் கட்டி கும்பிடுதேன்னு சொல்லுங்கன்னு கோடாங்கி சொல்லிருக்காரு.

அந்த பொயிலாள், பட்டாபிரான், பூச்சி நாயுக்கும் கோவில்கட்டி கும்பிட்ட அப்பறந்தான் கோனார்வீட்டு ஆடுகள் சாவம இருந்திருக்கு. இந்தக்கோயிலு அவங்களை கொன்ன இடத்துல உழக்குடில இருக்கு. இங்க கோனார்கள் தான் வழிபட்டுட்டு வர்றாங்க. சில இடங்கள்ல பள்ளர்களும் இவங்கள வழிபடுதாங்க"

பூச்சியம்மன் பட்டபிரான் கோவில்:

திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் வழியில் உழக்குடி கிராமத்தில் உள்ளது. இந்தக் கோவிலை கோனார் சமூகத்தினர் வழிபட்டு வருகின்றனர்.

உழக்குடியின் கிழக்குப் பகுதியில் உள்ள சவலாப்பேரி கிராமத்திலும் பட்டபிரான் பூச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு உரியது. சவலாப்பேரி கிராமத்தில் உள்ள பட்டபிரானுக்கும் பூச்சியம்மனுக்கும் சித்திரை மாதம் 4 ஆம் செவ்வாய் அன்று கோவில் கொடை கொடுக்கப்படுகிறது.

சடங்கியல் முறைகளும் தோற்றக்கதைச் சார்பும் :

இது சாதி மீறி காதலித்ததற்காக கொல்லப்பட்ட ஓர் ஆணவக்கொலைச் சம்பவம். பட்டபிரான் - பூச்சியம்மன் பற்றி சொல்லப்படும் கதைகளில் பெயர் மாற்றங்கள், ஊர்ப்பெயர் மாற்றங்கள் இருக்குதே தவிர சம்பவம் பற்றிய மாற்று வடிவம் இல்லை.

இக்கதையில் பட்டப்பிரானோடு பொயிலாள் உடன்போக்கும் செல்லும் போது தன் அண்ணன் மகளின் மீது நாயுருவி கொண்டு அடிக்கிறாள்.அதன் குறியீடாக சடங்கியல் பொருளாக நாயுருவி படையல் பொருளாக சிறு பனைப்பெட்டியில் வைக்கப்படுகிறது.

அதைப்போல் கொடையின் போது நடைபெறும் கிடாய் வெட்டு சடங்கில் முதல்நாள் கிடாய் தலை வெட்டப்பட்டும், மறுநாள் வெட்டப்படும் கிடாய் நெஞ்சுக்கூறாய் அறுக்கும் முறை இங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலே சொன்ன கொலைச் சம்பவத்தை போலச் செய்தல் முறையவே இது பிரதிபலிக்கிறது.

காதலர் இருவரின் காட்டிக்கொடுத்து அவர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாகிவிட்டோம் என்கிற இதனால் தங்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் மற்றும் குற்றவுணர்வின் அடிப்படையிலே கோனார் சமூக மக்கள் பூச்சியம்மனையும் பட்டாபிரானையும் வழிபடுவதை அறிய முடிகிறது.

சவலாப்பேரியில் உள்ள பூச்சியம்மன் - பட்டபிரான்

அதைப்போல் தான் கொன்ற கொலை குற்றச் செயலுக்கு அஞ்சி அருகிலேயே தேவேந்திரகுல மக்களும் வழிபடத் தொடங்கியிருக்கின்றனர். உழக்குடி, சவலாப்பேரி கிராமங்களுக்கு அடுத்து உள்ள மறுகால்தலை கிராமப்பகுதியில் தேவர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பூச்சியம்மனையும், பட்டபிரானையும் வழிபடுவதாக தெரிவதில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவளை ஏன் வழிபடவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தும் வழிபடாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் ஒரு சாரார்.

இந்த தோற்றகதையில் பொயிலாம் பூச்சியின் கடைசி அண்ணன் ஊருக்கு சென்று கோவில் கட்டி வழிபடுவதாக சொல்கிறான். ஆனால் பாவூர் பகுதியில் பூச்சியம்மன் வழிபாடு இருப்பதை அறிய முடியவில்லை. அங்கு யாருக்கும் பூச்சியம்மன் பெயரும் இடப்படவில்லை என்றே சொல்கிறார்கள்.

இது கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்.

"பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் தன்னுடைய 'பூச்சியம்மன் வில்லுப்பாட்டு' புத்தகத்தில் பாவூர் பகுதியில் பூச்சியம்மன் கதை குறித்தோ, பூச்சியம்மனின் குடும்பம் குறித்தோ அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் மண்ணில் புதையுண்ட சிலையை காட்டி இது பூச்சியம்மன். இவ்வம்மனுக்கு மரிக்கொழுந்து மாலை அணிவிப்போம் என்று இசக்கி என்ற தகவலாளி சொன்னதாக பதிவு செய்துள்ளார். "

இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகமான கருதப்படும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை விட உயர் சாதியினராக கருதப்படும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவரையும் ஆணவக்கொலை செய்திருக்கின்றனர். இங்கு எல்லாவற்றிற்கும் சாதிய பெருமிதமும், சாதிய நியதிகளை மீறினால் குற்றமாக கருதி கொலை நிகழ்த்துவது அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

இத்தகைய சாதிய மீறலினால் ஏற்படும் கொலைகளை முன்வைத்து காதலித்தால் கொல்லப்படுவாய் என வெளிப்படையாக எச்சரிக்கையும் செய்கின்றனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், சாதிய கொடூரத்திற்கான சாட்சியங்களாகவே இவ்வாறான ஆங்காரிகள் நிற்கிறார்கள்.

(ஆங்காரிகள் வருவார்கள்)

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டி... மேலும் பார்க்க

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? மேலும் பார்க்க

வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார்... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்

தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை... மேலும் பார்க்க

ஆங்காரிகளின் கதை 03 : அண்ணன்களால் அடித்துக்கொல்லப்பட்ட பொண்ணு - முத்தாரம்மன் தெய்வமான கதை!

முத்தாரம்மன்!ஆங்காரிகளின் கதை 03‘கிட்டத்தட்ட ஒரு 150 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது'``புதுப்பட்டிக்கு தெக்க இருக்க சீத்தார்க்குளத்துல கவுண்டர் ஜமீன்தாரு ஒருத்தர் இருந்தாரு. அந்த ஊருக்கிட்ட கொ... மேலும் பார்க்க

பெரிய மந்து: 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தோடர் பழங்குடியினரின் கூரை வேயும் திருவிழா!

ஊட்டி முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.தோடர்களின் தலைமையிடமான முத்தநாடு மந்துவில் பாரம்பர்ய கோயிலான "முன்போ தேக்சி அம்மன்" கோயில் உள்ளது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை,... மேலும் பார்க்க