Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்
தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் மேற்கொண்டு, பாதயாத்திரையாகச் செல்வார்கள்.
தென் மாவட்டங்களைப் பொறுத்த வரையில் பழனி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்வார்கள். இந்த நிலையில், நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அருகிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் கிறிஸ்தவ தேவாலயத்தில் முருக பக்தர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதயாத்திரை முருக பக்தர்களிடம் பேசினோம், “வைகாசி விசாகத் திருவிழாவை விட தைப்பூசத் திருவிழாவிற்கு முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பாதயாத்திரையாக நடந்து செல்வோம். நாங்கள், பாபநாசம், அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஊர்களில் இருந்து குடும்பமாக, குழுக்களாக இணைந்து நடந்து வருகிறோம். தினமும் காலை 6 மணிக்கு நடக்கத் தொடங்கினால் மதியம் 12 மணி வரை நடந்துவிட்டு வெயில் தணியும் வரை ஆங்காங்கே உள்ள மரத்தடிகள், சாவடிகள், மண்டபங்களில் ஓய்வெடுப்போம்.
உணவுக்குப் பிறகு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடப்போம். இரவு 8 மணிக்கு மீண்டும் ஏதாவது ஒரு இடத்தில் தங்கிவிடுவோம். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் தங்குவது சற்று சவாலாக இருக்கும். சில இடங்களில் மின் விளக்கு வெளிச்சம் இருக்காது. குளிரும் இருக்கும். எங்கள் குழுக்களில் பெண் பக்தர்களும், குழந்தைகளும் பாதயாத்திரையாக வருவதால் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பல இடங்களில் மண்டபங்களை நாங்கள் ஓய்வெடுக்க அனுமதிப்பார்கள்.

ஆனால், இந்தாண்டு நாங்கள் பாளையங்கோட்டை பகுதியில் பாதயாத்திரையாக நடந்து சென்ற போது புனித மிக்கேல் அதிதூதர் ஆலய நிர்வாகத்தினர் இரவில் தங்கிக் கொள்ள அனுமதி அளித்தனர். தேவாலயத்தின் வளாகத்தில் மட்டுமின்றி ஆலயத்திற்குள்ளும் தங்கிக் கொள்ள அனுமதித்தது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தனர். இரவில் பாதுகாப்பாக தங்கிட அனுமதி அளித்த தேவாலய நிர்வாகத்தினருக்கு எங்களின் பாதயாத்திரை குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

















