'சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்; அவருக்காகத் தான் தலைவர் விஜய் கொளத்தூரில்.!'-...
ஒரே ஓவியம்... ₹1,600 கோடிக்கு ஏலம்! வான் கோவின் ஓவியம் படைத்த புதிய சாதனை!
உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் வின்சென்ட் வான் கோ வரைந்த 'Blossoming Chestnut Trees' ஓவியம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள Sotheby's ஏல நிறுவனத்தில் 190.4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ₹1,600 கோடிக்கும் மேல்) ஏலம் போயுள்ளது. இதன் மூலம் ஏலத்தில் விற்பனையான வான் கோவின் ஓவியங்களிலேயே அதிக விலை பெற்ற படைப்பு என்ற சாதனையைப் படைத்துள்ளது.
1890-ம் ஆண்டு மே மாதம் வரையப்பட்ட இந்த ஓவியம், மலர்களால் நிறைந்த செஸ்ட்நட் மரங்களையும் அவற்றின் கீழே குடை பிடித்தபடி நிற்கும் மூன்று பெண்களையும், அருகே நடந்து செல்லும் ஒருவரையும் சித்திரிக்கிறது. வான் கோவின் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உருவான முக்கியமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
நவம்பர் 18-ம் தேதி நடைபெற்ற ஏலத்தில், ஓவியத்தின் இறுதி ஏலத்தொகை 165 மில்லியன் டாலராக இருந்தது. ஏலக் கட்டணங்களையும் சேர்த்தபோது மொத்த விலை 190.4 மில்லியன் டாலராக உயர்ந்தது.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு வான் கோவின் 'Orchard with Cypresses' ஓவியம் 117.2 மில்லியன் டாலருக்கு விற்பனையானதே அவரது முந்தைய சாதனையாக இருந்தது. புதிய ஏல விலை அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
இந்த ஓவியத்தின் உரிமை தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. ஜெர்மன் யூத வெளியீட்டாளர் சாமுவேல் ஃபிஷரின் குடும்பத்தினர், நாஜி ஆட்சிக் காலத்தில் 1936-ல் தங்கள் குடும்பம் கட்டாயச் சூழலில் ஓவியத்தை விற்றதாகக் கூறினர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏலம் நடைபெற்றது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கலை வரலாற்றைக் கொண்ட இந்த ஓவியம், தற்போது உலக ஏல வரலாற்றிலும் புதிய மைல்கல்லைப் பதித்துள்ளது.

















