செய்திகள் :

ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? IT-ன் கேள்விக்கு ரெடியா இருங்க!

post image

வங்கியில் 10 லட்சத்திற்கு மேல் பணம் போடக்கூடாது என்கிற பொது பேச்சு உண்டு.

'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம்... ஆனால் 'இந்த' ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தயாராக இருக்க வேண்டும்!' என்று விளக்குகிறார் ஆடிட்டர் கிரி பாபு.

“வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்; அதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

ஆனால், ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யப்படும்போது, அந்தத் தகவலை வங்கி தானாகவே வருமான வரித்துறைக்கு அனுப்பிவிடும்.

ஆடிட்டர் கிரி பாபு
ஆடிட்டர் கிரி பாபு

வங்கிகள் மற்றும் வருமான வரித்துறையைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களின் பான் எண்ணின் அடிப்படையிலேயே அனைத்துப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன.

இ-ஃபைலிங்கின் போது...

வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள AIS மற்றும் 26AS ஆகிய ஆவணங்களில், ஒருவர் அந்த ஆண்டில் மேற்கொண்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் பதிவாகியிருக்கும்.

குறிப்பாக, 2026-27 நிதியாண்டைப் பொறுத்தவரை, வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாடுகளில் செய்த முதலீடுகள் மற்றும் செலவுகள் வரை அனைத்தும் இதில் துல்லியமாகப் பதிவாகியிருக்கும்.

நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்யும்போது குறிப்பிடும் வருமானமும், AIS-ல் பதிவாகியுள்ள பரிவர்த்தனைகளும் ஒத்துப்போகிறதா என்பதை வருமான வரித்துறை சரிபார்க்கும்.

இதில் முரண்பாடுகள் இருந்தால் மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.

கேள்விக்கான பதில் தான்...

ஒருவேளை அந்தக் கூடுதல் பணம் தொழில் வருமானம் இல்லாமல், நண்பர்களோ அல்லது உறவினர்களோ கொடுத்ததாகவோ, அல்லது குடும்ப விசேஷங்களின்போது கிடைத்ததாகவோ இருந்தால், அதற்கான சரியான ஆதாரங்களை வைத்திருந்தால் போதுமானது.

மொத்தத்தில், வருமான வரித்துறைக்குத் தேவைப்படுவது ஒரே ஒரு கேள்விக்கான பதில்தான்: ‘இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?’.

அது உங்களுடைய சொந்த வருமானமாக இருந்தால் அதற்கான கணக்கும், மற்றவர்களிடமிருந்து வந்திருந்தால் அதைக் கொடுத்தவர்கள் தங்களது வருமான வரித் தாக்கலில் அதைக் குறிப்பிட்டுள்ளார்களா என்பதும் மட்டுமே பார்க்கப்படும்.

எனவே, பணத்திற்கான சரியான ஆதாரம் உங்களிடம் இருக்கும்பட்சத்தில், வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்துப் பயப்படத் தேவையில்லை.”