Bangladesh-இல் Tarique Rahman அரசு | Indiaவுக்கு சாதகமா பாதகமா? | Decode | Vikat...
கமுதி: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களது மகன் சோலைசெல்வம்(30), இவரது மனைவி கோகிலா(32) மற்றும் இவர்களது இரு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் விருதுநகர் மாவட்டம் தும்முசினம்பட்டி கிராமத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு தங்களது குலதெய்வ கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.
குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்ட பின் திங்கள்கிழமை காலை ராமநாதபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பரளச்சி அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த இவர்களது கார், அய்யனார்குளம் கிராமம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரினை ஓட்டிய சோலை செல்வம் காரினை திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது சோலையப்பன் குடும்பத்தினர் சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.

இதில் சோலையப்பன் மற்றும் காரை ஓட்டி வந்த அவரது மகன் சோலை செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த கமுதி காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த விஜயலட்சுமி, கோகிலா மற்றும் இரு குழந்தைகளையும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த இருவரின் உடல்களை கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்து குறித்து கமுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.









.png)









