Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன...
``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்த புகாரில் மாணவர்களின் நலன் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மாலை பள்ளியிலிருந்து சக மாணவர்களுடன் வீட்டுக்குச் சென்ற கவியரசனை 11-ம் வகுப்பு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.
மேலும் கவியரசன் தலையில் கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த கவியரசன் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கவியரசனை தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
கவியரசன் தாய் ராஜலெட்சுமி, என் மகனை 25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்று விட்டனர். ஆனால், அரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என யாரும் வந்து எங்களுக்கு ஆறுதலாக நிற்கவில்லை என கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கஞ்சா விற்பனை தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும் உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து கவியரசனை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கவியரசன் கொலை தொடர்பாக, வருவாய் துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, பள்ளியில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, விரைவில் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் வருகிறது. மாணவர்கள் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாக கூடாது.
எந்த பிரச்னைகளிலும் ஈடுபடக்கூடாது. முழுமையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது, மூன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரகசியமாக பேபியிடம் பள்ளியில் நடக்கும் குறைகளை சொன்னதாக சொல்கிறார்கள்.
இந்நிலையில், பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளரான ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ம.க.ஸ்டாலின், நிர்வாகிகளுடன் பள்ளி தலைமை ஆசிரியரை, சந்திப்பதற்கு ஊர்வலமாக பட்டீஸ்வரம் வந்தார்.
இதனை அறிந்த போலீசார், அவரை, கடைவீதியில் நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி, திருப்பி அனுப்பினர். பின்னர் ம.க.ஸ்டாலின் இனாம்கிளியூர் சென்று கவியரசன் பெற்றோரை சந்திந்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, ம.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: "பள்ளியில், உள்ளூர் மாணவர்கள், ஃபேவர் பிளாக் கொண்ட நடைபாதையிலும், வெளியூர் மாணவர்கள் மண் பாதையிலும் நடக்க வேண்டும் என பல மாதங்களாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தபிரச்னையை, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கத் தவறி விட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் உடலுக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் என ஒருவர் கூட அஞ்சலி செலுத்த செல்லவில்லை.
கரூர் சம்பவத்தில் கலங்கி குலுங்கி அழுத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி சீருடையில், ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இதுவரை வரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, கொலை செய்த மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த வெளிநபர்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்த மாணவனின் குடும்பத்தினர் பா.ம.க.,வை சேர்ந்தவர் என்பதால் யாரும் சென்று அறுதல் கூறவில்லையா, இதிலும் அரசியல் உள்ளதா என தெரியவில்லை.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தமிழக முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்.
பள்ளிக்கூடத்தின் உள்ளேயே உள்ளூர் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லையென்றால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, விரைவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

















