டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்...
காசாவை மீட்கும் முயற்சி; ட்ரம்பின் 'அமைதி வாரியம்'; மெலோனி முதல் மோடி வரை; யார் யாருக்கு அழைப்பு?
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.
அதற்காக உயர்மட்ட 'அமைதி வாரியம் - Board Of Peace' என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த அமைதி வாரியம் மூன்று கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
1. நிதி திரட்டுதல், முதலீடு, பிராந்திய உறவுகளைக் கவனிக்கும் பொருப்பை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குழு கவனிக்கும்.
இந்த முதல் அமைப்பில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க நபர்களும், உலகளாவிய நிதி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
மேலும், இந்த அமைப்பில் சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும், காசாவின் பொதுச் சேவைகளைக் கண்காணிக்கப் போகும் தேசியக் குழுவிற்குப் பாலஸ்தீனிய அதிகார சபையின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தொழிற்நுட்ப வல்லுநர் குழு காசாவின் அன்றாட சிவில் நிர்வாகத்தைக் கவனிக்கும். இந்தப் பொறுப்புகளில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
3. ஆலோசனை மற்றும் வழிகாட்டும் அமைப்பாக 'காசா நிர்வாக வாரியம்' செயல்படும் எனத் திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியின் அமைச்சர்கள், தூதர்கள், ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக், அதன் தூதர் நிக்கோலே மிலாடெனோவ், இஸ்ரேலிய கோடீஸ்வரர் யாகிர் கபாய் உள்ளிட்ட வணிகப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.
எனவே, இந்த அமைதி வாரியத்தில் இணைந்து கொள்வதற்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் இந்தியாவும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ``காசாவிற்கு நீடித்த அமைதியைக் கொண்டுவரும் இந்த முயற்சியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதில் பெருமை கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் சேர்த்து, துருக்கி அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் மெலோனி, எகிப்து அதிபர் அல்-சிசி மற்றும் ஜோர்டான் மன்னர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது காசா விவகாரத்தில் ஒரு சர்வதேச கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் காசா பகுதி ஒரு புதிய பொருளாதார மையமாக மாற்றப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
எனினும், அங்குள்ள ஆயுதக் குழுக்களைக் களைவதும், மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகாமல் தடுப்பதும் இந்த வாரியத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.














