நிதி அமைச்சர் செங்கோட்டையன்; பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் - யார் யாருக்கு எந்த...
காரைக்குடி: பாரம்பர்ய கண்டாங்கி சேலை `டு' அரிய வகை ஆன்டிக் பொருள்கள்; களைகட்டும் செட்டிநாட்டு சந்தை!
"பழையதன் பெருமை உணர்ந்து அதைப் போற்றுதல்" என்பதே செட்டிநாட்டுத் தாரக மந்திரம். அந்த மந்திரத்தை நிலைநிறுத்தும் வகையில், காரைக்குடி நகரத்தார் மகளிர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'செட்டிநாட்டுச் சந்தை' இன்று (மே 16) கோலாகலமாகத் தொடங்கியது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.கே.பிரபு, முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் இதை தொடங்கி வைத்தனர்.

மே 16 மற்றும் 17 என இரு நாட்கள் நடைபெறும் இந்த விழா வெறும் வணிகச் சந்தையல்ல — செட்டிநாட்டின் கலாச்சாரப் பெட்டகம். இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்திலும், ஆன்லைன் ஷாப்பிங் உலகிலும் மறைந்துவரும் கைவினைஞர்களின் உழைப்பையும் பாரம்பரிய தொழில்களையும் மீட்டெடுப்பதே இந்தச் சந்தையின் முதன்மை நோக்கம்.

மூன்று மாதத் திட்டமிடலுக்குப் பிறகு, தமிழகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்து கைவினைஞர்களையும் பெண் தொழில் முனைவோரையும் தேடி அழைத்து, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி விற்பனைக்கான மேடையை மகளிர் சங்கம் உருவாக்கியுள்ளது. இதனால் உழைப்பின் முழுப் பலனும் நேரடியாக விற்பனையாளர்களுக்கே சென்றடைகிறது.
செட்டிநாடு கண்டாங்கி காட்டன் சேலைகள், நவீன சிந்தட்டிக் சேலைகள், அணிகலன்கள், கலைநயமிக்க மரச்சாமான்கள், பூஜைப் பொருட்கள் என பெண்களை ஈர்க்கும் ஸ்டால்கள் நிறைந்துள்ளன. சேலத்தில் தறி நடத்தி நெசவு செய்த சேலைகளை விற்கும் விசாலாட்சி, "எவ்வளவுதான் நவீனம் வந்தாலும் பாரம்பரியத்துக்கு என்று ஒரு தனி மரியாதை எப்போதும் உண்டு" என்கிறார்.

பர்மா தேக்கு மரத்தில் செய்த நுணுக்கமான மரச்சாமான்கள், ஜப்பான் மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து அக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கலைநயம் மிக்க பீங்கான் பொருட்கள், விளக்குகள் என அரிய ஆன்ட்டிக் சாமான்களும் இடம்பெற்றுள்ளன. 10 ரூபாய் ஓலைக் கொட்டான் முதல் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரிய பொருட்கள் வரை நியாயமான விலையில் கிடைக்கின்றன. "பாரம்பரியம் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல; பாமரர்களுக்கும் சென்றடைய வேண்டும்" என்று ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் வள்ளிக்கண்ணு நாகராஜன் தெரிவிக்கிறார்.










ஏற்காட்டில் 100 ஏக்கர் தோட்டத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த அவகோடா, மலைவாழை, ஏலக்காய், காபி போன்றவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்துள்ளனர்.
கை முறுக்கு, வெள்ளைப் பணியாரம், கவுனி அரிசி சாதம், உக்காரம் என பாரம்பரிய உணவு வகைகளும் தனி ஸ்டால்களில் கிடைக்கின்றன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.















