15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `ஓட்ஸ் அண்டு டேட்ஸ் லட்டு' - வீட்டிலேயே செய...
`குடும்பத்தை நாசமாக்கியவர்' - பா.ஜ.க எம்.எல்.ஏ-வான மனைவியை விவாகரத்து செய்கிறாரா முலாயம் சிங் மகன்?
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் இப்போது கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். மற்றொரு மகனான பிரதீக் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியான சாத்னா குப்தாவின் மகனான பிரதீக், அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். அபர்ணா பா.ஜ.க சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் பிரதீக்கிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் உட்பட ஏராளமான கார்கள் உட்பட பல வசதிகள் இருக்கிறது.
இது தவிர லக்னோவில் மிகவும் பிரபலமான ஜிம் ஒன்று இருக்கிறது. அபர்ணா தேர்தலில் போட்டியிட்ட போது தங்களுக்கு ரூ.15 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பிரதீக் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறார்.

அவர் தனது பதிவில், ``உறவுகளை அவர் நாசப்படுத்திவிட்டார். அவர் புகழையும் செல்வாக்கையும் தேடுகிறார். விளம்பரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் மீதான அவரது கவனம் குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆத்மாவை நான் பார்த்ததே இல்லை. ஆனால் நான் மனதளவில் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறேன். என் மனைவி எனது நிலை குறித்து அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாள். அவள் ஒரு கெட்ட குணம் கொண்டவள். அவளைத் திருமணம் செய்துகொண்டது எனது துரதிர்ஷ்டம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. மேலும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதீக் குற்றச்சாட்டு குறித்து அவரது மனைவியிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. அதோடு பிரதீக் விவாகரத்துக்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளாரா என்பது குறித்தும் தெரியவில்லை. அபர்ணா யாதவ் கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.





















