'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' - கொந்தளிக்கும...
கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லியாக இருந்தது எப்படி தெரியுமா? | ‘வாவ்’ வியூகம் 11
தேர்தல் அரசியலில் கட்சிகள் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியை இழப்பதும் கூட்டணியால்தான். சரியான கூட்டணி என்பது மக்கள் விரும்பும் கூட்டணியாகவும் இருக்க வேண்டும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிக்கு தோதுபார்த்து வளைந்து, நிமிரும் நாகரிகம் தெரிந்த கட்சிகள் அதில் இருக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும், ஏன் தேசிய அளவிலும் கூட இப்படியான கூட்டணிகள் தான் சோபித்திருக்கின்றன என்பது தேர்தல் வரலாறு.
இப்படியான தேர்தல் வியூக வரலாற்றுப் பக்கங்களில் தமிழக அரசியலில் எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் வரை எப்படிக் காய் நகர்த்தி இடம் பிடித்திருக்கிறார்கள், அரசியல் டீலில் அடையாளம் பதித்திருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்ப்போம்.
எம்ஜிஆர், 1972 அக்டோபர் 18-ம் தேதி அதிமுகவை தொடங்கினார். அந்த வேகத்தோடு, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய புகாரை ஆளுநரிடமும், குடியரசுத் தலைவரிடமும் அளித்தார். தொடர்ந்து, திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவரை களமிறக்கி பெரும் வெற்றிபெறச் செய்ததோடு, திமுகவின் வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படவும் செய்தார். புதிய கட்சியின் வீரியம் களத்தில் வலுவாக இருந்த திமுகவை அதிர்ச்சிகொள்ள வைத்தது.

எம்ஜிஆரின் திரை வசீகரமும், ஏற்கெனவே திமுகவில் தன்னை அரசியல் ரீதியாக நிறுவியிருந்ததும், அங்கிருந்து வந்தபோது அங்கே தன் மீது தனிப்பட்ட அபிமானம் கொண்டவர்களை அப்படியே தன் தொண்டர்களாக அதிமுகவில் வரவு வைத்ததும் அவருக்கு அசுர பலமாகிவிட, அவர் தொடங்கிய புதுக்கட்சி சட்டென ஓஹோ வேகமெடுத்தது. அதன்பின்னர், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் எம்ஜிஆரின் கூட்டணி வியூகம் ஒரு தனி ரகம்.
1977-ல் எம்ஜிஆர் சந்தித்த தேர்தல் களத்தில் நாடாளுமன்ற தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தலையும் சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வரும் முன்னர் ஆரம்பித்து கடைசியாக வென்ற தேர்தல் வரையிலும் அமைத்துக் கொண்ட கூட்டணிகள் மிகவும் நுட்பமான ‘அரசியல் வியூகம்’ என்றே இன்றளவும் சில விமர்சகர்களால் வர்ணிக்கப்படுகிறது. எம்ஜிஆர் எப்படி வாவ் சொல்ல வைத்தார் என்று பார்ப்போம்.
1977 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது அதிமுக. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தமிழகத்தில் 39 தொகுதிகளில் 34 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனாலும், மத்தியில் அந்தத் தேர்தலில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும், அதிமுக முதல் தேர்தலிலேயே வலுவாக நாடாளுமன்ற ரெப்ரசன்டேஷனைப் பெற்றது. அதுவே சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குக் கட்டியங்கூறுவதாகவும் இருந்தது.
அதே ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவியது. களத்தில் ஏற்கெனவே திமுக, ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சிகள் இருக்க, அதிமுகவும் மக்கள் முன் புதிய முறுக்கலோடு களமிறங்கியது. மாநிலத் தேர்தலில் அதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கைகோத்தது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 144 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 30 ஜூன் 1977-ல் எம்ஜிஆர் முதல்வரானார்.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டிருந்தாலும் கூட, ஜனதா கட்சி ஆட்சியமைத்த பின்னர் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்தார். சரண் சிங் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்த பின்னரும் கூட எம்ஜிஆர் தனது ஆதரவை அக்கட்சிக்கு நீட்டித்தார்.
தமிழகத்தின் நலனுக்காக, டெல்லியில் உள்ள மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதே சிறந்தது என்ற கொள்கையை எம்ஜிஆர் கொண்டிருந்தார். 1979-ல் அவரது ஆதரவுக்குப் பலனாக மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 அமைச்சர்களும் கிடைத்தனர்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல், மத்தியில் ஜனதா கட்சி கவிழ்ந்த பின்னர், 1980-ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.
அந்தத் தேர்தலில் எம்ஜிஆர், ஜனதா கட்சியுடன் கூட்டணியை தொடர, திமுக இந்த முறை இந்திரா காங்கிரஸுடன் கைகோத்தது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் எம்ஜிஆர் இட ஒதுக்கீட்டு முறையில் முன்மொழிந்த மாற்றமும் அதற்கு திமுக தெரிவித்த எதிர்ப்பும் அந்தத் தேர்தலில் பிரதிபலித்தன. முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற பலே வெற்றியானது, 1980 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2 தொகுதிகள் என்று பாதாளத்தில் படுத்தது.
இதனால், எப்படி முதன்முறை (அதாவது 1977-ல்), அதிமுக நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே ஸ்ட்ரோக்கில் வெற்றி பெற்றதோ, இந்த முறை (1980-ல்) ஒரே ஸ்ட்ரோக்கில் சட்டப்பேரவையிலும் தோற்கும் என்று பேசப்பட்டது. ஆனால் எம்ஜிஆர் வேறொரு ஆயுதத்தைக் கையில் எடுத்தார். 1980 சட்டப்பேரவைத் தேர்தலில், அவர் சம்பாதித்தது மக்களின் அனுதாபம். தனது அரசு அபாண்டமாக கலைக்கப்பட்டதாக செல்லுமிடமெல்லாம் கூறினார். ‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்’ என்று எம்ஜிஆர் முன்னெடுத்த பிரச்சாரப் பேரலை அனுதாப அலையாக மாறி மீண்டும் 1980-ல் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது.
மேலும், 3 ஆண்டு கால ஆட்சியில் எம்ஜிஆருக்கு பெண் வாக்காளர்கள் மத்தியில் அபிமானம் கூடியிருந்தது. மதிய உணவுத் திட்டத்தை அவர் வலுப்படுத்தியிருந்தது அவருக்கு ஏழைகளுக்கான தலைவர் என்ற அடையாளத்தை தந்திருந்தது. மகளிர்க்கு சிறப்புப் பேருந்து, மதுவிலக்கு என்று அவர் கொண்டுவந்த திட்டங்கள் கிராமங்கள் வரை அவருக்கு ஆதரவைப் பெற்றுத் தந்திருந்தது.

1980 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக முன்னணி கூட்டணியில் சிபிஐ, சிபிஎம், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், அனைத்திந்திய ஃபார்வர்டு ப்ளாக் மற்றும் எம்ஜிஆர் ஆதரவில் களமிறங்கிய 11 சுயேட்சைகள் இருந்தனர். இத்தனை கட்சிகளை அரவணைத்து எம்ஜிஆர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பார்த்துக் கொண்டார். அப்போது எம்ஜிஆர் பேசிய மேடைகளில் எல்லாம், எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி என்று பந்தை மக்கள் பக்கம் உருட்டிவிடத் தவறியதில்லை என்று அந்தக்கால பிரச்சாரங்களை பார்த்து, கேட்டவர்கள் சொல்கின்றனர்.
பலமாக அதிமுக மின்னிக் கொண்டிருக்க, காங்கிரஸ் - திமுக கூட்டணியில் அந்த இரு கட்சிகளோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகையில் முதல்வர் வேட்பாளர் யார், தொகுதிப் பங்கீடு என்று திமுக - காங்கிரஸ் இடையே சிக்கல்கள் நிலவியது.
கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஜிகே மூப்பனார் முயற்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் கூட, தேர்தல் களத்தில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை விட திமுக அதிக வாக்குகளைப் பெற்று கருணாநிதிக்கு பலம் சேர்க்க வேண்டும் என்று திமுகவினர் கடும் முனைப்பு காட்டினர்.
கூட்டணியில் கோட்டை விட்டதாலும், அமைத்தக் கூட்டணியில் முழு நம்பிக்கையை வைக்காததாலும் தான் திமுக கூட்டணி தோற்றது என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன. காற்று எம்ஜிஆர் பக்கம் வீச அவர் வெற்றி கண்டார்.
இரண்டு முறை முதல்வராக இருந்துவிட்டார். மக்களுக்குப் பால் புளித்துப் போயிருக்கும் என்று 1984 தேர்தலை எதிர்க்கட்சிகள் அணுக நினைக்க, மத்தியிலும், ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரு மிகப் பெரிய அனுதாப அலை வீசியது. 1984-ம் அக்டோபர் மாதம் 31-ம் தேதி இந்திரா காந்தி படுகொலை நடந்தது.
அப்போது ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் தனது பலத்தை நிரூபிக்க விரும்பியதால், நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி என்ற மிகப் பெரிய ஆளுமை அவரது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட அனுதாப அலை, ராஜீவ் காந்திக்கு மக்கள் அங்கீகாரத்தைத் தந்தது.
கூட்டணியில் துல்லிய கணிப்பு
1984 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அப்போது தமிழகத்திலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்று அதிமுக முக்கியப் புள்ளிகள் விரும்ப, அப்போது அதிமுகவுடன் நட்பு பாராட்டிய ராஜீவ் காந்திக்கு தகவல் சென்றது. ராஜீவ் காந்தியும் அதற்கு ஆவன செய்ய, ஆட்சி கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிட்டார். முதல்வர் மாநிலத்தில் இல்லாதபோது, வேறு ஏதும் சட்டம் - ஒழுங்கு இல்லாதபோது ஆட்சி கலைக்கப்பட்டதற்காக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், எல்லாவற்றையும் மீறி தமிழக சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. 1984 டிசம்பர் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக - காங்கிரஸ் கட்சி இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்த எம்ஜிஆர் இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. அனுதாப அலை இருக்கட்டும், அதை அறுவடை செய்ய நான் அமைக்கிறேன் பாருங்க ஒரு கூட்டணி என எம்ஜிஆர் செய்த அரசியல்தான் அந்தத் தேர்தலின் ஹைலைட்.
இப்படியாக, எம்ஜிஆரின் கூட்டணி வியூகம் 1977 தொடங்கி 1984 வரை ரொம்பத் தெளிவாக, துல்லியமாக பக்கா உத்தியாக ஒர்க் அவுட் ஆனது என்றே சொல்லலாம். தேசியக் கட்சியும் வேண்டும், மாநிலக் கட்சிகளும் வேண்டும் என்பதே அவரது அரசியல் வாழ்க்கை காலத்தின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.!













