"இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை" - இபிஎஸ் குறித்து டிடி...
கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?
கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தளங்களிலும் தீ பரவியது.

சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் தீ பரவத் தொடங்கியது. அந்த நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.
சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆனாலும் கரும்புகை வானம் முழுவதும் பரவியது. இதையடுத்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்றது.

தீயணைப்புத்துறையினர் மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகப் பணியாளர்கள், போக்குவரத்து மற்றும் காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
கூடுதலாக விமானப்படை, ஐஎன்எஸ் அக்ரானி கப்பற்படை ஆகியோரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மக்கள் வெளியேற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சுமார் 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம், “தண்ணீருடன் ரசாயனம் கலந்த தெளிப்பான்களும் பயன்படுத்தப்பட்டன. இதில் உயிர்ப்பாதிப்பு ஏற்படவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.



















