`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்' - புன்னகையால் வறுமையை வெல்லும் சம்...
சடாரென வந்த `விஜய்’ போட்டோ; சபைக்குறிப்பில் நீக்கப்பட்ட ஊழல் உறுதிமொழி - புதுச்சேரி பதவியேற்பு கலகல
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான 16-வது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்றது. அதில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து மே 13-ம் தேதி ராஜ்நிவாசில் முதல்வராகப் பதவியேற்றார் ரங்கசாமி.
அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணராவும், பா.ஜ.க சார்பில் நமச்சிவாயமும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதன்பிறகு அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ அன்பழகன் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களின் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு, சபாநாயகர் அன்பழகன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். த.வெ.க கூட்டணியுடன் வெற்றிபெற்ற நேயம் மக்களின் கட்சியின் எம்.எல்.ஏ நேரு பதவிப் பிரமாணப் பத்திரத்தை வாசித்து முடித்ததும், `மேலும் நான் லஞ்சம் வாங்க மாட்டேன். லஞ்சம் ஊழலுக்கு துணைபோகமாட்டேன் என்றும் உறுதிகூறுகிறேன்' என்றார்.
அப்போது எம்.எல்.ஏ நேருவின் கையை இலேசாகத் தட்டிய சபாநாயகர் அன்பழகன், பத்திரத்தில் இருப்பதை மட்டும் படிக்குமாறு கூறினார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் உறுதிமொழியை முடித்தார் எம்.எல்.ஏ நேரு.
தொடர்ந்து சம்பந்தமில்லாதவற்றை இங்கு பேசக்கூடாது என்று நேருவிடம் கூறிய சபாநாயகர் அன்பழகன், ஊழல் குறித்து அவர் பேசியதை சபைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டார். அதற்கு நேரு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், `தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எப்படி பதவியேற்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுத்திருக்கிறது.
அதன்படிதான் பதவியேற்க முடியும். நீங்கள் மட்டும்தான் லஞ்சம் வாங்காதவர் போலவும், மற்ற அனைவரும் லஞ்சம் வாங்குவதற்கு தயாராக இருப்பதைப் போலவும் உங்கள் வார்த்தைகள் இருக்கிறது' என்றார் சபாநாயகர் அன்பழகன்.

அதேபோல பாகூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் மலையாள மொழியில் பதவியேற்றார். வழக்கமாக புதுச்சேரி ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ அந்த பிராந்திய மொழியான தெலுங்கிலும், மாஹே தொகுதியின் எம்.எல்.ஏ அந்த பிராந்திய மொழியான மலையாளத்திலும் பதவியேற்பார்கள்.
ஆனால் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.எல்.ஏ மலையாளத்தில் பதவியேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதையடுத்து, `புதுச்சேரி பாடத்திட்டத்தில் இருந்து பிரெஞ்சு மொழியை நீக்க மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் பாடத்திட்டத்தில் இருந்து பிரெஞ்சு மொழியை நீக்குவதற்கு எதிராக தி.மு.க போராடி வருகிறது. அதனடிப்படையில் பிரெஞ்சு மொழியில் பதவியேற்பதற்காக சட்டப்பேரவைச் செயலாளரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கவன ஈர்ப்புக்காக மலையாளத்தில் பதவியேற்றோம்' என்று செந்தில்குமார் எம்.எல்.ஏ தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது.
அதேபோல முதல்முறையாக வெற்றிபெற்ற மணவெளி தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ ராமு, என்னுடைய கடவுள் மீது ஆணையாக உறுதி கூறுகிறேன் என்று பாக்கெட்டில் வைத்திருந்த தமிழக முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை எடுத்து காண்பித்தார். அப்போது தலையை திருப்பி அந்தப் புகைப்படத்தைப் பார்த்த சபாநாயகர் அன்பழகன், அதை திருப்பிப் பார்த்தார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

அதேபோல ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ மோகன்தாஸ், கடவுள் என்.ஆர் அறிய (முதல்வர் ரங்கசாமி) உறுதி கூறுகிறேன் என்று பதவியேற்றுக்கொண்டார்.
அதேபோல திமுக சார்பில் பதவியேற்றுக் கொண்ட மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன், `தலைவர் கண்ணன் புகழ் ஓங்குக என்றார் சத்தமாக. அப்போது சபாநாயகர் அன்பழகன், ``ஆர்வ மிகுதி காரணமாக உறுப்பினர்கள் கூடுதலான வார்த்தைகளைக் கூறுகின்றனர். அவை அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து, `மணவெளி எம்.எல்.ஏ புதிதாக ஒரு அட்டையை காண்பித்தார் அல்லவா (தமிழக முதல்வர் விஜய் போட்டோ) அது தேவையில்லை. ஏற்கனவே இங்கு ஆயிரம் கடவுள்கள் இருக்கிறார்கள்’ என்றார்.













