`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்' - புன்னகையால் வறுமையை வெல்லும் சம்...
நெல்லை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸாரை அதிரவைத்த சிறுவர்கள்! - என்ன நடந்தது?
ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் பெட்ரோல் குண்டு செய்வது எப்படி என்பதை சிறுவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர், பழிவாங்கும் நடவடிக்கையாக காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம், ராமையன்பட்டி பகுதியில் 18-ம் தேதி இரவு காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்தபடி அந்த வழியாக வந்திருக்கிறார்கள். 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்களும் போதையில் இருந்துள்ளனர். அதனால் அவர்களிடம் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் சஜி, வாகனத்தின் ஆர்.சி.புத்தகம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைக் கேட்டுள்ளார். ஆனால் அவர்களிடம் ஆவணம் எதுவும் இருக்கவில்லை.

சிறுவர்கள் மூவரும் மது போதையில் இருந்ததால் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தின் சாவியை வாங்கிக் கொண்ட காவல்துறையினர், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்திருக்கிறார்கள். நிறைய வாகனங்களை நிறுத்தி போலீஸார் சோதைனையிட்டு வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சிறுவர்கள், காவல்துறையினருக்குத் தெரியாமல் இரு சக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
போதையில் இருந்த சிறுவர்களுக்கு காவல்துறையினரின் செயல்பாடு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீஸாரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்துள்ளனர். பின்னர் அதே பைக்கில் மூவரும் ராமையன்பட்டி புறக்காவல் நிலையம் வந்து தாங்கள் தயாரித்த பெட்ரோல் வெடிகுண்டை வீசியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு காவல்துறையினர் வெளியில் வந்ததும் மூவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
புறக்காவல் நிலையத்தில் மீது சிறுவர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியதை காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டனர். அதனால் அவர்களை தேடும் நடவடிக்கையில் இறங்கினார்கள். அதை அறிந்த மூன்று சிறுவர்களும் தச்சநல்லூர் காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து மூவரையும் கைதுசெய்து சிறார் நீதிக் குழுமத்திடம் ஒப்படைத்தனர். 10-ம் வகுப்பு படிக்கும் இளஞ்சிறார் செய்த இந்தச் சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரான பிரசன்ன குமார் கூறுகையில், "பெட்ரோல் வெடிகுண்டு வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிறுவனுக்கு 17 வயதும் மற்ற இருவரும் 16 வயதும் கொண்டவர்கள். மூவரும் 10-ம் வகுப்புப் படித்துவிட்டு, விடுமுறையில் வேலைகளுக்குச் சென்றிருக்கிறார்கள். மூவரும் மது போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் மீது இதற்கு முன்பு எந்த வழக்கும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. திரைப்படங்களில் பார்த்து பெட்ரோல் பட்டி கொண்டு தயாரித்ததாக தெரிவித்திருக்கிறார்கள் மூவருமே நடந்த சம்பவத்தை நினைத்து வருத்தம் தெரிவித்தனர். இதுபோன்று ஆகும் என தெரியாது என்று சொல்லி அழுகிறார்கள். இருப்பினும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறார் நீதி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று சிறுவர்களும் மது போதையில் மட்டுமே இருந்துள்ளனர். கஞ்சா போதையில் இருந்ததாகத் தெரியவில்லை. மூவரில் ஒரு சிறுவன், தனக்கு மதுப்பழக்கம் கிடையாது எனத் தெரிவித்திருக்கிறார். வாகன சோதனையின் போது, பெற்றோரை அழைத்து வரச் சொன்னதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இது போன்று தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர். சிறுவர்களுக்கு மது எப்படி கிடைத்தது என்பதை விசாரித்து அவர்களுக்கு மது வாங்கி கொடுத்தவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு வேளை டாஸ்மாக் மது கடையில் சிறுவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டிருந்தால், அந்தக் கடையில் பணியாற்றுபவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வது சட்டப்படி தவறு. அப்படி விற்பனை செய்யப்பட்டிருந்தால் அந்தக் கடையின் விற்பனையாளரையும் கைதுசெய்வோம்" என்றார்.



















