`யாரிடமும் கையேந்தக் கூடாதுங்கிற வைராக்கியம்' - புன்னகையால் வறுமையை வெல்லும் சம்...
``சி.வி.சண்முகம் சொல்வது 100% உண்மை!" - விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் சென்றிருக்கிறார்.
அங்கு விருதகிரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எனக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களுக்குத் தொகுதியின் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருக்கிறேன்.
சட்டமன்றத்தில் இன்னும் எனது கன்னிப் பேச்சு தொடங்கவில்லை. முதல்நாள் பேசியது அது வெறும் அறிமுக அமர்வாகவே இருந்தது. துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மற்றும் இலாக்காக்கள் தொடர்பான விவாதங்கள் வருகின்ற பொழுது, விருதாச்சலம் தொகுதிக்கான கோரிக்கைகளை உறுதியாக சட்டசபையில் முன்வைப்பேன்.
குறிப்பாக, எனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, விருதாச்சலத்தைத் தனி மாவட்டமாக மாற்றுவதுதான் தனது முதல் கோரிக்கையாக இருக்கும். இதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பேன்.
சட்டமன்றத்தில் ரத்தன் பண்டிட் விவகாரம் தொடர்பாகத் நான் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறேன். அத்துடன், தமிழக மக்களின் நலனுக்காக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை தே.மு.தி.க எப்போதும் ஆதரிக்கும்.
அந்த வகையில், 717 மதுபானக் கடைகளை உடனடியாக மூடியதற்கும், பள்ளி மற்றும் கோயில்களுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதற்கும் முதலமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். மேலும், பெண்களைப் பாதுகாக்க 'சிங்கப்படை' அமைத்ததற்கும் தமிழக அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
தவறுகள் நடக்கும் போது எதிர்க்கட்சியாக அதனைச் சுட்டிக்காட்டுவது கேப்டன் விஜயகாந்த் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம். அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து வந்தவர்கள் தற்போதைய ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் அதனை வரவேற்கலாம். அவ்வாறு இல்லாமல், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது தமிழகம் இதுவரை கண்டிராத 'குதிரை பேரத்திற்கு' வழிவகுத்துவிடும். இது குறித்து முதலமைச்சர் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும். இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை இந்த அரசு ஏற்படுத்திவிடக் கூடாது.
மத்திய, மாநில அரசுகளின் கீழ் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வால் நாடு கடுமையான பொருளாதாரச் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு லாக்டவுன் போன்றதொரு சூழல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்றைய சூழலில் அத்தகைய பொருளாதார நெருக்கடியைத் தாங்கும் வலிமை தமிழக மக்களிடம் இல்லை என்பதால், அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பெண்களுக்கு உரிமத் தொகையாக ரூ.2,500 வழங்காமல் ரூ.1,000 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகையை வழங்க முதலமைச்சர் கால அவகாசம் கேட்டுள்ளார். எதிர்க்கட்சியாக நாமும் மக்களுக்குச் சாதகமாக அதற்குரிய நேரத்தைக் கொடுப்போம்.

அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுகிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் தருவதாக அ.தி.மு.க தரப்பில் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்டது உண்மைதான். இதனை ஏற்கனவே நான் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் ஆதாரப்பூர்வமாக அந்த ஒப்பந்தப் பத்திரத்தைக் காண்பித்து விளக்கியுள்ளேன். இந்த நிலையில், எம்பி இடங்களை எடப்பாடி பழனிசாமி தர மறுத்தார் என்று சி.வி.சண்முகம் கூறியுள்ள குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் 'யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது' என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் யாருக்குமே உகந்ததாக இல்லை. இதையேதான் சி.வி.சண்முகமும் சுட்டிக்காட்டியுள்ளார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.













