செய்திகள் :

சரிவை நோக்கி மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம்? – போர்க்கொடி தூக்கும் மூத்த தலைவர்கள்!

post image

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி சந்தித்த எதிர்பாராத தோல்வி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் அடங்கிக்கிடந்த அதிருப்தியை வெளிக்கொண்டுவந்திருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சுகேந்து சேகர் ராய், மம்தா பானர்ஜிக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ``திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்னும் சில நாட்களில் முழுமையாக அழியப்போகிறது. தேசிய அரசியலிலும் கட்சி தன் நம்பிக்கையை இழந்துவிட்டதால், இனி எந்தவொரு கட்சியும் கூட்டணி வைக்கப் போவதில்லை.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு. குற்றவாளிகளைக் காப்பாற்றத் திரைமறைவில் தெளிவான முயற்சிகள் நடந்தன. அதற்கு காவல்துறையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த விவகாரத்தில் மக்கள் கொதித்தெழுந்தபோதே, பொதுமக்களின் செல்வாக்கை நாம் இழந்துவிட்டோம் என்பது எனக்குப் புரிந்தது. ஆனால், கட்சித் தலைமை அதை உணராமல் கண்மூடித்தனமாக இருந்தது. கட்சித் தலைவர்கள் சிலர் சேர்த்துள்ள ஊழல் பணம், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மலைபோல் குவிந்துள்ளது.

அதைத் தடுத்து நிறுத்த மம்தா பானர்ஜி தவறிவிட்டார். இதுமட்டுமன்றி, மும்மத நல்லிணக்கம் பேச வேண்டிய மம்தா, இந்து மதத்தை விமர்சித்ததும், குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்துப் பேசியதும் பெரும் தவறு. இது நம் அரசியல் கோட்பாட்டிற்கே எதிரானது. இந்தத் தோல்விக்கு அடிமட்டத் தொண்டர்கள் முதல் டெல்லி வரை இருக்கும் உச்சக்கட்டத் தலைமை வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸின் இந்தத் தரைமட்ட வீழ்ச்சிக்கு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனமே முக்கியக் காரணம் என்ற குமுறலும் கட்சிக்குள் பலமாக ஒலித்து வருகிறது.

சுகேந்து சேகர் ராய்
சுகேந்து சேகர் ராய்

மம்தாவின் மருமகனும், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவருமான எம்.பி அபிஷேக் பானர்ஜியின் சிபாரிசின் பேரில்தான், கடந்த 2018-ல் ஐபேக் நிறுவனம் கட்சியின் பிரச்சாரங்களை வழிநடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது மூத்த தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டாலும், 2021 தேர்தலில் கட்சி பெற்ற இமாலய வெற்றி மூத்தவர்களின் வாயை அடைத்தது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கட்சியை வேரோடு அழிப்பதற்காகவே ஐபேக் நிறுவனத்திற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறார்கள். தலைமைகளின் தலைக்கனம், பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சிப் பதவிகளை விற்பனை செய்தது என ஐபேக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, மம்தா பானர்ஜியை யாரும் எளிதில் சந்திக்க முடியாதபடி, அவரைச் சுற்றி ஒரு பெரும் சுவரை எழுப்பித் தனிமைப்படுத்தியதே இந்த ஐபேக் நிறுவனம்தான் என்று தலைவர்கள் குமுறுகின்றனர்." என்றார்.

இதற்கிடையில் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகிய எம்.பி ககோலி கோஷ், தனது ராஜினாமா கடிதத்தில், ``கட்சியின் பாரம்பரியத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத, வெளிப்படைத்தன்மையற்ற ஒரு வெளி நிறுவனத்தின் (I-PAC) ஆதிக்கம், கட்சியின் ஜனநாயக அமைப்பையே குலைத்துவிட்டது. ரேஷன் விநியோகம், ஆசிரியர் நியமனம் ஆகியவற்றில் நடந்த ஊழல்களும், பெண் மருத்துவர் கொலை வழக்கை மூடிமறைக்க நடந்த முயற்சிகளும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தலைவராக என் மனசாட்சி உறுத்தியதால்தான் நான் பதவிகளை ராஜினாமா செய்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி

முன்னாள் அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி, ``கட்சியில் நடந்த அத்தனை ஊழல்களையும் மம்தா பானர்ஜி கண்டும் காணாமல் கண்மூடி வேடிக்கை பார்த்தார். இந்த படுதோல்விக்கு மம்தாவும், அபிஷேக் பானர்ஜியும்தான் முழுப் பொறுப்பு. கட்சி இப்போது மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டு நிற்கிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிக்குள்ளேயே மம்தாவுக்கு எதிராகத் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது திரிணாமுல் காங்கிரஸை நிலைகுலையச் செய்துள்ளது. இதையடுத்து, தங்களைப் பகிரங்கமாக விமர்சிக்கும் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை கட்சித் தலைமை அமைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா கட்சியை விட்டு 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம் சரிவை நோக்கிச் செல்வதைத்தான் இந்த உட்கட்சி மோதல்கள் காட்டுகின்றன என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்...'- அமைச்சர் சம்பத்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ கட்டமைப்புகள், மருந்து கையிருப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நிலை, நோயாளிகளு... மேலும் பார்க்க

'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!' - நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க- வில் இணைந்து வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில், அ.தி.மு.க நீலகிரி மாவட்டச் செய... மேலும் பார்க்க

'பழைய பதவியை பயன்படுத்தக்கூடாது'- எடப்பாடி போட்ட கண்டிஷன்; மீண்டும் அதிமுகவில் பிளவை உண்டாக்குமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத சரிவைச் சந்தித்து, 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல்களு... மேலும் பார்க்க

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

``பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்" என தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் அதிரடி உத்தரவு பிற... மேலும் பார்க்க

"மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசுகிறார்"- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு பெருமளவு குறையும். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால் கர்நா... மேலும் பார்க்க