சனாதனம்: "இந்து மதத்தை இழிவுபடுத்திய பாவத்தால்தான்..." - முதல்வர் விஜய்க்கு நயின...
’செங்கோட்டையன் வேண்டுகோளை ஏற்று.!’ - தவெகவுக்கு தாவும் கோவை அதிமுக நிர்வாகிகள்!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து இருப்பதோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளரும், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான வி.பி. கந்தவேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பளிக்காவிட்டாலும், கட்சி வேட்பாளர் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தேன். ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடக்கின்ற நிகழ்வுகள்களினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி வழிதெரியாமல் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்.
தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களின் பாதைக்கு கழகம் ஒருபோதும் திரும்ப போவதில்லை. எனவே பெரும் மன அழுத்தத்துடனும் வேதனையுடனும் கட்சி தொண்டர்களுக்கு கண்ணிர் மல்க நன்றி தெரிவித்து, கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

’செங்கோட்டையன் வேண்டுகோள்’
இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் வி.பி. கந்தவேல் த.வெ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் தெளிவான தொலைநோக்கு பார்வையும், மாற்றத்திற்கான உறுதியான அரசியல் அணுகுமுறையும் என்னை பெரிதும் ஈர்த்துள்ளது. செங்கோட்டையனின் அன்பான வேண்டுகோளை ஏற்றும், என் ஊராட்சி மற்றும் ஒன்றிய மக்களின் விருப்பத்தையும் உணர்வுகளையும் மதித்து, த.வெ.க-வில் இணைந்துள்ளேன். நான் ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்தில் கடைப்பிடித்த நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் தொடர்ந்து நிலைநிறுத்தி, இனி மக்கள் சேவையை மேலும் தீவிரமாக மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.
அ.தி.மு.க-வில் இருந்து விலகியுள்ள இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட துணைத் தலைவர் விணீத் த.வெ.க-வில் இணைய உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ”ஒரு அரசியல் இயக்கத்தில் கருத்து வேறுபாடுகளும், பல்வேறு சூழ்நிலைகளும் இயல்பானவை. அதே நேரத்தில், அண்மைக் காலமாக கட்சிக்குள் நிலவி வரும் சில உள்கட்சிப் பிரச்சினைகள், தொடர்ச்சியான மனக்கசப்புகள் என்னை மிகவும் பாதித்துள்ளன. பல முறை என்னுடைய தனிப்பட்ட மனவேதனைகளை கூட வெளிப்படுத்தாமல் கட்சியின் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்பட்டேன். ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக மனஅமைதியுடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கட்சியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். த.வெ.க-வில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் த.வெ.க-வில் இணைந்து செயல்பட உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

காரணம் என்ன?
இதேபோல கருமத்தம்பட்டி அ.தி.மு.க நகர செயலாளர் ஆதவன் பிரகாஷ், செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அ.தி.மு.க-வில் இருந்து விலகியுள்ள சூலூர் நகர அவைத்தலைவர் பரணன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. த.வெ.க-வை பலப்படுத்தும் வகையில் மாற்றுக்கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை கட்சியில் இணைக்கும் பணியை செங்கோட்டையன் தேர்தலுக்கு முன்பிருந்தே செய்து வந்ததாகவும், த.வெ.க வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தில் பலர் கட்சியில் இணைய தயக்கம் காட்டினர். தற்போது த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பதாலும், அ.தி.மு.க-வில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளாலும் த.வெ.க-வில் இணைந்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.













