செய்திகள் :

செட்டிநாட்டின் 'டைம் மெஷின்' : 200 வருட பாரம்பரியத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம்!

post image

கண்ணைப் பறிக்கும் பிரம்மாண்ட காரை வீடுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் செட்டிநாட்டுச் சமையல், கணக்கு வழக்கில் கறாரான வணிகப் பாரம்பரியம்... இவைதான் செட்டிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை. ஆனால், கால ஓட்டத்தில் அந்தப் பாரம்பரியத்தின் மிச்சங்கள் பலவும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

அவற்றை அழியாமல் பாதுகாத்து, ஒரு அழகிய மாளிகைக்குள் அருங்காட்சியகமாக்கி இருக்கிறார் சா.லெ.சு.பழனியப்பன்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி - பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்திருக்கிறது இந்த ‘செட்டியார் பாரம்பர்ய அருங்காட்சியகம்’. இதன் கதவைத் திறந்தாலே நம்மை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்தக் கால இயந்திரம், மே 8, 2022 அன்று திறக்கப்பட்டது.

கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த கம்பலை சாத்தப்ப செட்டியாரின் பேரனான சா.லெ.சு.பழனியப்பன், தன் முன்னோர்களின் வியக்கவைக்கும் வாழ்வியலைத் திரட்டி, இந்த வைரவன்பட்டி மண்ணில் ஒரு மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமாக மாற்றிப் பாதுகாத்து வருகிறார்.

நான்கு தலைமுறை உழைப்பு:

"வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நமது பாரம்பரியத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, சுமார் 4000 சதுர அடியில், மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தை நான்கு வருட உழைப்பில் உருவாக்கியுள்ளோம்.

செட்டிநாட்டுப் பாணியில், ஐரோப்பிய மற்றும் இந்தோ-சாரசெனிக் கட்டிடக் கலையின் தாக்கத்தோடு இந்த அரண்மனை போன்ற அருங்காட்சியகம் உருப்பெற்றது. தற்போது தரைத்தளத்திலும், முதல் தளத்திலும் நாங்கள் நான்கு தலைமுறைகளாகச் சேகரித்த அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என்கிறார் பழனியப்பன்.

பழனியப்பன்

இவருடைய பாட்டையா இலங்கையில் பெரிய வணிகராக இருந்தவர். இலங்கை உலக வணிகத்தின் மையப்புள்ளியாக இருந்ததால், கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த அரிய பொருட்கள் பலவற்றை அவர் வாங்கி வந்துள்ளார். அவர்கள் எழுதிய கடிதங்கள், ஓலைச்சுவடிகள் என 1000-க்கும் மேற்பட்ட கடிதங்கள், 1922-ம் ஆண்டைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், வருமான வரி சீல் வைக்கப்பட்ட கணக்குப் புத்தகங்கள் என அனைத்தும் இங்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாக உள்ளன.

நகரத்தார் சமூகத்துத் திருமணங்களில் அக்னி சாட்சியாகக் கட்டப்படும் மிக முக்கிய மாங்கல்யம் 'கழுத்திரு'. "அந்தக் காலத்துல குறைஞ்சபட்சம் 100 முதல் 120 பவுன் வரைக்கும் கழுத்திரு செய்வாங்க. அப்போ பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாததால், திருமணத்தப்ப சீதனமா நகையா குடுத்துடுவாங்க. இன்னைக்கு அது குறைஞ்சு 16 பவுன், ஏன்... 3 பவுன்லகூட செய்றாங்க. மக்களுக்கு விழிப்புணர்வு வரணும்னு 16 பவுன்ல செஞ்ச கழுத்திருவை இங்க காட்சிப்படுத்தியிருக்கோம்" என்கிறார் அவர்.

தமிழர் சமையலறையின் பரிணாம வளர்ச்சியைச் சொல்லும் வகையில், பாரம்பரியமான அம்மி, ஆட்டுக்கல், திருகை, குந்தாணி, சோறு வடிக்கும் மாறு எனத் தொடங்கி, நவீன மிக்ஸி வரையிலான அரவைக் கருவிகளின் அணிவகுப்பும் இங்கே வியக்க வைக்கிறது.

பிளாஸ்டிக் இல்லாத உலகம்

யானைக் கழிவுகளால் (Elephant dung) செய்யப்பட்ட பழங்காலப் பொம்மைகள், மரப்பாச்சிப் பொம்மைகள், தாத்தா-பாட்டிகள் பயன்படுத்திய நுணுக்கமான சித்திர வேலைப்பாடு கொண்ட சுண்ணாம்பு மற்றும் மருந்து டப்பாக்கள் இங்குள்ளன.

யானைக் கழிவுப் பொம்மைகள் முதல் 16 அடுக்கு சீர்வரிசை பாத்திரங்கள் வரை இங்குள்ள எந்தவொரு பொருளிலும் ஒரு துளிகூட 'பிளாஸ்டிக்' கிடையாது என்பது தனிச் சிறப்பு.

காலத்தின் குரலும் ஓலைச்சுவடிகளும்!

பெரிய மரப்பெட்டிகளில் அலங்காரமாக வீற்றிருந்த பழங்கால ரேடியோக்கள், கொஞ்சம் கொஞ்சமாக அளவு சுருங்கி நவீன ட்ரான்சிஸ்டர்களாக மாறிய வானொலியின் பரிணாம வளர்ச்சிப் படிநிலைகள் இங்கே காட்சியாக விரிகின்றன.

பிரிட்டிஷ் காலத்து நாணயங்கள், புதுக்கோட்டை அம்மன் காசுகள், செட்டிநாட்டுக்கே உரித்தான 16 அடுக்கு வெண்கலப் பாத்திர சீர்வரிசைகள், வெளியூர் பயணங்களுக்குப் பயன்படுத்திய ‘டிரங்க்’ பெட்டிகள், சிவகங்கையின் புவிசார் குறியீடு பெற்ற ஓலைக் கொட்டான்கள், கண்டாங்கி கைத்தறிச் சேலைகளின் சிறப்பு தபால் உறைகள், செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் 'எனாமல் வெர்ஸ்' மங்கு பாத்திரங்கள் எனப் பல பொருட்கள் கண்ணைக் கவருகின்றன.

காகிதப் புழக்கம் வந்த பிறகும், 1967-ஆம் ஆண்டுவரை செட்டிநாட்டில் ஓலைச்சுவடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்!

பழனியப்பனின் தந்தையார் ஜாதகம் (1924), பாட்டனார்களின் பங்காளி ஒப்பந்தப் பத்திரங்கள், வணிகத் திருமண ஒப்பந்தங்கள் என அனைத்தும் ஓலைச்சுவடிகளிலேயே இங்கிருக்கின்றன. ஒருமுனையில் எழுத்தாணியும், மறுமுனையில் ஓலையைச் சீவும் கத்தியும் கொண்ட கருவியும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

வங்கியியலின் முன்னோடிகள்:

உலகப்போரின் அசல் ஆவணம்!

செட்டிநாட்டு மக்களின் கணக்கு வழக்குகள் உலகப்பிரசித்தி பெற்றவை. அதை நிரூபிக்கும் வகையில் 1920-களின் வரவு-செலவு கணக்கு புத்தகங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. "100 வருடங்களுக்கு முன்பே, ஒரு லட்ச ரூபாய்க்கு இருப்பு வைத்திருந்தவர்கள் எம் பாட்டன்மார்கள். இன்று நாம் பயன்படுத்தும் இரட்டைப் பதிவேட்டு முறை (Double Entry System) உள்ளிட்ட பல கணக்கியல் நடைமுறைகளைக் கண்டறிந்ததே நகரத்தார்கள் தான். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகளைத் தொடங்கிய வங்கியியலின் முன்னோடிகள் அவர்கள்தான்" என்று பெருமையோடு கூறுகிறார் பழனியப்பன்.

இங்குள்ள முதலாம் உலகப்போர் காலத்து (1914 -1918) 900 பக்கங்கள் கொண்ட அசல் கணக்கு புத்தக ஆவணத்தைக் கண்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் உறைந்துபோய், அதைத் தன் ஆய்விற்காக டிஜிட்டல் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் 2 ஆம் உலகப்போரின்போது பர்மாவிலிருந்து நடந்தே தாயகம் திரும்பிய ஒருவர் எழுதி வைத்த டைரி புத்தகம் வடிவம் பெற்றுள்ளதும் அதன் பிரதியும் இங்குள்ளது.

அதேபோல் 1950 காலகட்டங்களில் ஆனந்த விகடன் இதழ் அப்போதிருந்த தமிழகத்தின் 13 மாவட்டங்களின் மேப் ஒன்றையும் தனித்தனியாக வெளியிட்டுள்ளது. அதனைத் தனித்தனியாக எடுத்து அப்போதே பழனியப்பனின் பாட்டையா சேகரித்து வைத்துள்ளார். அந்த வரைபடங்களின் நகல்களும் இங்குள்ளன.

அரசுக்கு கோரிக்கைகள்!

சா.லெ.சு.பழனியப்பன். சுற்றுலாத் துறைக்கும் அரசுக்கும் இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்:

பராமரிப்பற்ற வீடுகளை அரசு தத்தெடுக்க வேண்டும்: பங்காளி சண்டையாலும் கூட்டுக்குடும்பப் பிரிவாலும் முடங்கிக் கிடக்கும் பிரம்மாண்ட வீடுகளை, அரசாங்கம் உரிய தொகை கொடுத்து சுற்றுலாத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

'ஒரு நாள் பேருந்து சுற்றுலா': செட்டிநாடு என்பது 76 ஊர்கள் சேர்ந்தது. காரைக்குடி புதிய பேருந்து நிலையத் தமிழ்நாடு சுற்றுலாக் கழக அலுவலகத்திலிருந்து 'ஒரு நாள் பேருந்து சுற்றுலா’ (One Day Tourist Bus) வசதி செய்து தந்தால், குறைந்த செலவில் பயணிகள் அனைத்து இடங்களையும் பார்க்க எளிதாக இருக்கும்.

365 நாட்களும் இயங்கும் பொக்கிஷம்!

"மருந்து வணிகனான எனக்கு இயல்பாகவே பாரம்பரியப் பாதுகாப்பில் ஆர்வம் அதிகம். மதிப்பு தெரியாமல் பலர் தங்கள் வீட்டு அரிய பொருட்களை விற்றுவிடுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்களை நாங்கள் விலைக்கு வாங்கி, அவர்களின் பெயரிலேயே இங்கு காட்சிப்படுத்துகிறோம். அவர்கள் மீண்டும் கேட்டால், திருப்பிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்" என்கிறார் பழனியப்பன்.

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பண்டிகைகள் என எந்த நாளும் விடுமுறை இல்லாமல் ஆண்டின் 365 நாள்களும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை செயல்படும் இந்த அருங்காட்சியகத்திற்கான நுழைவுக்கட்டணம் 50 ரூபாய் மட்டுமே!

செட்டிநாட்டின் வரலாற்றையும், மண்ணின் மணம் மாறாத பாரம்பரியத்தையும் நேரில் கண்டு வியக்க விரும்புபவர்கள், காரைக்குடி மற்றும் பிள்ளையார்பட்டிப் பகுதிக்குச் செல்லும்போது தவறவிடக் கூடாத ஆகச்சிறந்த பொக்கிஷம் இந்த அருங்காட்சியகம்!

`ஆண்டுக்கு ரூ.7,769 கோடி' - எலானிற்கு அடுத்து அதிக ஊதியம் வாங்கும் CEO!- யார் இந்த ஷங்க் மித்ரா?

உலக அளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஷங்க் மித்ரா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இதனை 'The Wall Stree... மேலும் பார்க்க

16 பாஸ்போர்ட்டுகள், 245 நாடுகள்.! தற்கொலை விளிம்பிலிருந்து மொத்த உலகை சுற்றி வந்த இந்திய இசை கலைஞர்!

ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம்16 இந்திய பாஸ்போர்ட்டுகள். ஒவ்வொன்றிலும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குத்தப்பட்ட முத்திரைகள், விசாக்கள். அண்டார்டிகா உட்பட 245 நாடுகளுக்கும் பயணித்து, ஒரு மனிதன் சாதிக்... மேலும் பார்க்க

Lingam: 'பூவே காதல் பூக்கும் பூவே' - நடிகை திவ்ய பாரதி க்யூட் கிளிக்ஸ் | Photo Album

Lingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya BharathiLingam - Divya B... மேலும் பார்க்க

வாளேந்திய ஆக்ரோஷம்; கஞ்சா பயன்பாடு சர்ச்சை - குருத்வாராவை முற்றுகையிட்ட நிஹாங்க் சீக்கியர்கள் யார்?

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா ஒன்றை 6 நிஹாங்க் சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். அவர்கள் குருத்வாராவின் மேல் தளத்திற்கு சென்று தடுப்பு அமைத்துக்கொண்டு இருந்தனர். பார்க்கிங்... மேலும் பார்க்க