``திருமாவளவன்: பாலுக்கும் காவல் - பூனைக்கும் காவல் என்கிறார்" - நயினார் நாகேந்தி...
சென்னை: நட்சத்திர ஹோட்டலில் இருந்த ரௌடி எண்ணூர் தனசேகரன்; துப்பாக்கி முனையில் கைதுசெய்த போலீஸ் டீம்!
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது, ஏழு கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வழக்கு ஒன்றில் கைதான தனசேகரன் கடலூர் மத்தியச் சிறையில் 2023-ம் ஆண்டு அடைக்கப்பட்டிருந்தார். அப்போது 20-க்கும் மேற்பட்ட பி.பி மாத்திரைகளைச் சாப்பிட்டு தனசேகரன், தற்கொலைக்கு முயன்றார். இந்தச் சம்பவத்தில் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். ஜாமீனில் வெளியில் வந்த ரௌடி தனசேகரன், எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்தகாரர் ஒருவரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் மாமூல் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டில் தனசேகரனின் கூட்டாளிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஆனால் தனசேகரன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார். அவர், தலைமறைவாக உள்ள ரௌடிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த எண்ணூர் தனசேகரனை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், துப்பாக்கி முனையில் எண்ணூர் தனசேகரனை கைது செய்தனர். அப்போது தனசேகரன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் போலீஸார் சுதாரித்துக் கொண்டு தனசேகரனை மடக்கிப் பிடித்து காட்டூர் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடமிருந்து துப்பாக்கி, சொகுசு கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

















