Mask Review: கவின் vs ஆண்ட்ரியா யுத்தம்; தேவையான த்ரில்லையும் சுவாரஸ்யத்தையும் த...
சேலம்: புது பொலிவுடன் அரசு அருங்காட்சியகம்; என்ன ஸ்பெஷல், பார்க்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள் என்ன?
சேலம் மாவட்டம் மணக்காடு அருகில் ரூ.4.91 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்துடன் புது பொலிவில் மக்கள் பார்வைக்கு தயாராகி வருகிறது அரசு அருங்காட்சியகம் என்ற தகவலோடும், ஆர்வத்தோடும் என்ன நடக்கிறது அரசு அருங்காட்சியகத்தில் என்று பார்வையிட்டோம்.
சேலம் அரசு அருங்காட்சியகம்.
ஃபேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அரசு அருங்காட்சியகம் தற்போது சுமார் 4.91 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்துடன், நவீன வசதிகள் மற்றும் மக்கள் பார்வைக்கு உகந்த வகையில் மணக்காடு பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் சில மாதங்களில் புதுக் கட்டிடத்தில் திறப்பு விழாவை எதிர்நோக்கி உள்ளது அரசு அருங்காட்சியகம்.
அரியவகை பொருட்கள்
சேலத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் பட்டியலிடச் சுவாரஸ்யமான வகையில் வரலாற்று ஆவணங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள், மானுடவியல் சின்னங்கள், அரிய அஞ்சல் தலைகள், பழங்கால நாணயங்கள், தாவரவியல், விலங்கியல், புவியியல் உள்ளிட்ட அரியவகை பொருட்கள், ஓவியங்கள், பழங்கால வீரர்களின் துணிச்சலான செயல்களை சித்தரிக்கும் வீரக் கற்கள், பல்லவ, சோழ மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் ஆகியவை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் காட்சிப் பெட்டி
நட்சத்திர ஆமை, பச்சோந்தி, முழு நீர்நாய் உடல், பவள கோத்தி மற்றும் பாம்புகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன.
காட்டெருமை தலை, கொம்பு, மான் கொம்பு, பல்வேறு பறவைகளின் உடல்கள், பெரிய ஆமை ஓடு மற்றும் கோட்டான் போன்றவை தத்ரூபமாக பதப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு மரச்சிற்பங்கள், ஓவியங்களும் நம்மை மேலும் ஆச்சரியமான வரலாற்று உலகிற்குள் அழைத்து செல்லும் அளவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழமையான பொருட்களும் பாரம்பர்யமும்
20 மில்லியன் ஆண்டு பழமையான மரப் படிமம், 10 அடி நீளமான மலைப்பாம்பின் தோல், சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் குருக்கம்பட்டி கிராமத்தில் 1977-ல் சுட்டுக்கொல்லப்பட்ட புலியின் தோல் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாமக்கல் கவிஞர் பயன்படுத்திய சட்டைத்துணி, மூக்குக் கண்ணாடி, பணப்பை மற்றும் அவர் ஓவியம் வரைய பயன்படுத்திய தூரிகைகள் தனியாக காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய இரண்டு பீரங்கிகள், சுதந்தரத்திற்கு முன்பான மூவேந்தர் கால நாணயங்கள், பிரெஞ்சு–ஆங்கில–டச்சு–கிழக்கு இந்திய கும்பிளி காசுகள், கொங்கு பாண்டிய–பல்லவ மன்னர் காலத்து நாணயங்கள் ஆகியவை புதிய கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன என அருங்காட்சியக பொறுப்பு அலுவலர் தெரிவித்தார்.

பழங்கால சிற்பங்கள், ஓலைச்சுவடிகள், நடுகல்
சேலம் மாவட்டத்தில் 12ஆம் நூற்றாண்டில் சமண மதத்தின் பரவலை எடுத்துக்கூறும் சிற்பங்களும், சேவ்வராயன் மற்றும் கொல்லிமலை பகுதிகளில் இருந்து பெறப்பட்ட பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், முத்திரைகள், கருவிகள் போன்ற பல்வேறு கலைப்பொருட்களும், ஏறு தழுவுதல் நடுகலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சேலம் காடையாம்பட்டி வட்டத்தில், நீர்ப்பாசனத்திற்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சோழ பேரரசன் இராசராசன் காலத்தில் வெட்டப்பட்ட தாச சமுத்திரம் ஏரியைச் குறிக்கும் இரண்டு கல்வெட்டுச் சான்றுகளும் சேலம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நுழைவு கட்டணம்:
பெரியவர்களுக்கு ₹10, சிறியவர்களுக்கு ₹5. பள்ளி மாணவர்கள் குழுவாக தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதத்துடன் வரும் போது, அவர்கள் கட்டணமின்றி பார்வையிடலாம். காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அருங்காட்சியக பொறுப்பு அலுவலர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவரிடம் பேசும் போது, பழைய கட்டிடத்தை விட புதிய கட்டிடம் பார்வையாளர்களை மேலும் கவரும் விதமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அரசின் புதிய முயற்சி நிச்சயம் மக்களிடம் வரலாறு–பாரம்பரியம் தொடர்பான புதிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.












மனிதச் சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு வரலாற்றை பாதுகாக்கும் சேலம் அரசு அருங்காட்சியகத்திற்கு நாமும் நம் ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.
இது எப்போது மக்கள் பார்வைக்கு?
ஃபேர்லாண்ட்ஸ் பகுதியில் இருந்து அனைத்து பொருட்களும் மணக்காடு பகுதியில் உள்ள புதிய அரசு அருங்காட்சியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும், கூடிய விரைவில் சிறுசிறு கட்டுமான பணிகள் முடிந்தவுடன், மக்கள் பார்வைக்கு புது பொலிவுடன், கூடுதல் இடவசதி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பான அருங்காட்சியகமாக பெருவாரியான வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.


















