தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி ...
ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி; கரூரில் இருந்து 71 நிறுவனங்கள்! - ஏன், எதற்கு?முழு தகவல்
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் உலகின் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கான கண்காட்சி ஹெய்ம் டெக்ஸ்டைல் என்ற பெயரில் மெஸ்ஸே என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 1971 -ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கண்காட்சி, வீட்டு உபயோக பொருட்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த கண்காட்சியாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2026 -ம் வருடத்தின் கண்காட்சி வரும் 13-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பேசும், கரூர் ஜவுளி உற்ப்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ப.கோபாலகிருக்ஷ்ணன்,
"வருடத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், பார்வையாளர்களும் வருடம் முழுவதற்கும் தேவையான ஒப்பந்தங்களை நிறைவேற்றும் நோக்கோடு இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.

தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கும், புதிய மாதிரிகளை பார்வையிடுவதற்கும், வீட்டு உபயோக பொருட்களில் உலகத்தில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்வதற்கும் இந்த கண்காட்சி மிக முக்கிய பங்களிக்கிறது. இந்த கண்காட்சியில் 3000 - க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் / நிறுவனங்கள், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை புரிந்து தங்களது பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். சுமார் 50,000 - க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்து கண்காட்சியை பார்வையிடுகிறார்கள். இந்தியாவிலிருந்து 364 நிறுவனங்களும், இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீன நாட்டிலிருந்து 322 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. கரூர் மாநகரிலிருந்து 71 நிறுவனங்களும், பானிபட் மாநகரிலிருந்து 162 நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. கரூர் மாநகரில் இருந்து 71 நிறுவனங்களின் சார்பில் தொழிலதிபர்கள், வடிவமைப்பாளர்கள், விற்பனையாளர்கள், வணிகர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஜெர்மனி நாட்டிற்கு பயணிக்கிறார்கள். இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகின்றன. அமெரிக்காவின் அதிகப்படியான இறக்குமதி வரி கொள்கையின் காரணமாக தொய்வடைந்திருக்கும் கரூர் மற்றும் இந்திய ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதன் மூலம் மற்ற நாடுகளின் வாடிக்கையாளர்களை கவர்ந்து புதிய ஒப்பந்தங்களை பெற்று வரும் கனவோடு இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.





















