செய்திகள் :

டான்ஸ் ஆடத் தெரியாதவர் என்று கிண்டல் செய்த நானே ரஜினி ரசிகை ஆன கதை! - பேரன்புக்கு சொந்தக்காரர்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ரஜினிகாந்த் அவர்களின் அதிதீவிர, தீவிர, சாதாரண என்று அனைத்து விதமான ரசிகர்களும் என் உறவு, நட்பு வட்டங்களில் இருக்கிறார்கள்.

அதிதீவிர ரசிகர்கள், அதாவது ரசிகர் மன்றத்தில் இருப்பது, போஸ்டர் ஓட்டுவது, என்ற செயல்களில் ஈடுபடுபவர்கள். ரஜினியை விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல் அவரை ரசிப்பதும், நேசிப்பதும் என்றிருக்கும் தீவிர ரசிகர்கள். இதைத் தாண்டி ரஜினியின் நல்ல படங்களை, நகைச்சுவையை, ஸ்டைலை குறை நிறையுடன் ரசிப்பவர்கள்.

ரஜினிகாந்த்

பள்ளி விடுமுறைக்கு துறையூரில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு செல்லும் போது தான் ரஜினி ரசிகர் மன்றம், தீவிர ரசிகர்கள், திரையரங்கு கொண்டாட்டங்கள், அவரின் பெயரைக் கூட உச்சரிக்காமல் எப்போதும் ‘தலைவர்’, ‘தலைவர்’ என்றே சொல்வது போன்றவை எல்லாம் எங்களுக்கு அறிமுகம்.

அண்ணன்களில் ஒருவர் வெகு தீவிரம். ரஜினியுடன் அவர் வெள்ளை உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் தான் சட்டமிட்டு வைத்திருப்பார்கள். துறையூரில் ரசிகர் மன்ற தலைவராகவும், மன்ற செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தவர். இன்னொரு அண்ணனும் தீவிரமான ரசிகர் தான். இவர்கள் மூலம்தான் ‘முதல் நாள் முதல் காட்சி’ கொண்டாட்டம் எல்லாம் தெரியவந்தது.

அப்போது அவர்களை பெரியம்மாவுடன் சேர்ந்து நாங்களும் திட்டியதுண்டு. ‘படம் பார்ப்பதற்காக இப்படி போறீங்களே’, ‘ரசிகர் மன்ற வேலை தான் முக்கியமா’ என்றெல்லாம் பேசியிருக்கிறோம்.

ரஜினியின் நடிப்பு, நடனத்தை, ‘ரஜினிக்கு டான்ஸ் ஆடவே தெரியல’ அப்படினெல்லாம் விளையாட்டிற்கு கிண்டல் செய்தால், ‘எங்க தலைவர் கஷ்டப்பட்டு எதுவுமே செய்ய வேண்டாம். அவர் வந்து நின்னாலே போதும் எங்களுக்கு.. அவர் காலைக் காட்டும்போதே கைதட்டல் எப்படி இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு? தலைவரோட பவர் தெரியாம பேசுறீங்க… சின்ன பிள்ளைங்கன்றதனால சும்மா விடுறேன்… இல்லன்னா இப்படி பேசுறதுக்கு நடக்குறதே வேற’ என்றெல்லாம் வம்பு சண்டை நடந்திருக்கிறது.

ரஜினிகாந்த்

முதுநிலை படிப்பின் போது அறிமுகமான ஒரு தோழனும் அதிதீவிர ரஜினி ரசிகன். ‘எங்க ஊர்ல பட ரிலீஸின் போது தலைவருக்கு போஸ்டர் எல்லாம் ஒட்டுவேன் தெரியுமா?’ என்று சொல்லும் ரகம்.

இளநிலை படிப்பில் அறிமுகமான ஒரு உற்ற தோழியும் தீவிர ரஜினி ரசிகர். ரஜினியை எந்த நிமிடமும், எந்த விதத்திலும், விளையாட்டுக்கு கூட விட்டுக் கொடுக்காமல், மூச்சு விடாமல் பேசும் ரகம்.

கல்லூரி காலங்களில், அவ்வப்போது மற்ற தோழிகள் ரஜினியை கிண்டல் செய்து, அவரை லேசாகத் தூண்டி விட்டால் போதும், ரஜினியைப் பற்றிய தகவல்களும், பெருமையும் மழையென பொழியத் துவங்கிவிடும். வேலைப் பார்க்கும் நாட்களிலும் கூட, ஒரு முறை தொலைபேசியில் பேசும்பொழுது ஏதோ கிண்டல் செய்து விட்டேன். அவ்வளவுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்பது போல, ரஜினி சேனல் ஆன் ஆயிடுச்சு.

இடைவெளியில்லாமல், ‘ஜப்பான்ல ரஜினி படம் எப்படி ஓடுச்சு தெரியுமா?’, ‘அந்த ஊர்ல எல்லாரும் எப்படி ரசிச்சாங்க தெரியுமா? மொழியே தெரியாம எப்படி அவரை கொண்டாடுறாங்க தெரியுமா?’ என்று அவ்வளவு புள்ளிவிவரங்கள். கூகுளுக்கே டேட்டா இங்கிருந்துதான் கொடுக்கணும் போலவே என்ற அளவிற்கு பேசியதை சிரித்துக் கொண்டே ரசித்திருக்கிறேன். அவரை ரசிப்பதும், ரசனை தாண்டிய நேசமும் என்று ஒரு தனி விதமான அன்பு, ஒரு உள்ளார்ந்த நேசம் அது. 

முத்து படத்தில் ரஜினி

இவர்களை எல்லாம் பார்த்தும், இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டதிலும், ரஜினி படத்தை ஒரு முறையாவது முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை என்னுள் துளிர் விட்டது. ‘சந்திரமுகி’ பட ரிலீஸின் போது சென்னையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆசையை தெரிந்த அந்த நண்பன் ‘ஃபர்ஸ்ட் டேக்கு டிக்கெட் வாங்கித் தரவா?’ என்று கேட்ட பொழுது தனியாக, அந்தக் கூட்ட நெரிசலில் செல்ல பயந்து வேண்டாம் என்று விட்டேன்.

 பின் திருமணம் முடிந்ததும், என்னுடைய இந்த ஆசையை அறிந்த கணவர் (அவரும் ரஜினி ரசிகர் தான்) 2014, டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆன “லிங்கா” படத்திற்கு அழைத்துச் சென்றார்.

தம்பி மற்றும் அவன் நண்பனிடம், அவர்களும் வருகிறார்களா என்று கேட்டதற்கு, “முதல் காட்சியில் படமே பார்க்க முடியாது. முழுக்க கரகோஷம் இருந்துகிட்டே இருக்கும். டயலாக் கூட காதுல விழாது. படத்த ரசிக்கவே முடியாது. அதனால நாங்க நைட் ஷோ போகிறோம்” என்று சொல்லிட்டாங்க. இப்படியும் சில ரசிகர்கள். நமக்கு அந்த உற்சாகத்தையும், ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் பார்ப்பது தான் பிரதானம். 

அதனால் உற்சாகமாக நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் ஆவலில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கணவருடன் திருச்சி ‘கலையரங்கம்’ திரையரங்கிற்கு சென்றேன்.

திரையரங்கின் முன் கூடியிருந்த கூட்டமும், மேள சத்தமும், ஆட்டமும், பாட்டமும் சற்று மிரளச் செய்தாலும் கணவருடன் இருக்கும் தைரியத்தில் அந்த கொண்டாட்டங்களை ரசிக்கத் தொடங்கினேன்.

லிங்கா

அப்போது வரை பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை. திரையரங்கில் எங்களை அழைத்து உள்ளே உட்கார வைத்து விட்டார்கள். உள்ளிருந்து ரசிகர் கொண்டாட்டத்தை, கண்ணாடித் தடுப்பின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என் தோழி அப்போது அங்கு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தினமுமே அழைத்து விடும் வழக்கத்தில் அன்றும் அழைக்க ‘நான் எங்கிருக்கிறேன்’ என்று சொன்னதைக் கேட்டு, ஒரே பரவசம். ‘நிஜமாவா சொல்ற’ ன்னு திரும்பத் திரும்ப கேட்டு ஆனந்தப்பட்டு ஒரே உற்சாகம் தான். 

திரையரங்கின் கடைசி வரிசையில் எங்களை அமர வைத்ததால் என்னால் ரசிகர்களின் முழு கொண்டாட்டத்தையும் ஓரளவு காண முடிந்தது. ரஜினி அறிமுகமாகும் பாடல் முழுவதும் எழுந்து ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள். நிறைய வயதானவர்களையும், அவர்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்பையும் காணும் போது ஆச்சரியமாக இருந்தது.

அமர்ந்த நிலையில் திரையே தெரியாததால் எழுந்து நின்று ரசிகர்களின் கொண்டாட்டத்தை தான் அதிகம் வேடிக்கை பார்த்தேன்.

இடைவேளையின்போது இன்னும் சில பெண்கள் கண்ணில் பட்டார்கள். ‘ஹப்பா நம்ம மட்டும் இல்லை’ என்று ஒரு நிம்மதி. படம் முடிந்து வெளியில் வந்தால், யாரோ மைக்கை முன்னாடி நீட்டி கருத்தெல்லாம் கேட்டாங்க.

வண்டியில் வீடு வந்து சேரும் வரை கூட பொறுக்க முடியாமல், உடனே என் தங்கைக்கு அழைத்து (தங்கையின் கணவரும் ரஜினி ரசிகரே), 

“ஹேய் நான் இப்போ எங்க போயிட்டு வரேன்னு சொல்லு பார்க்கலாம்”  என் குரலின் உற்சாகத்தை உணர்ந்து அதுவும் உற்சாகமாக,

“சொல்லு… சொல்லு.. நீயே சொல்லிடு”

“ ‘லிங்கா’ படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வரேன்”

 “ஹேய்ய்ய்ய் நிஜமாவா? சூப்பர்.. ஹய்யோ.. இதுங்க(அண்ணன்கள்) கிட்ட சொன்னா திட்டுவாங்களே… நாங்க போனப்ப எங்களை எப்படி திட்டினீங்க… இப்ப நீங்களே போறீங்கன்னு பேசுவாங்களே.. (ஒரு காலத்தில், காலை வேளையிலேயே அண்ணன்கள் படம் பார்க்கப் போவதற்கு அவ்வளவு பேசியிருக்கிறோம்) சரி விடு பார்த்துக்கலாம்.. நீ சொல்லு எப்படி இருந்துச்சுனு” என்று சொல்ல அந்த உற்சாகத்தை விவரித்து கொண்டே வீடு போய் சேர்ந்தேன்.

லிங்கா

மாலை நேர பத்திரிகையில் புகைப்படத்துடன், சொன்ன கருத்தும் வெளிவந்ததைப் பார்த்து என் தோழி, “பாத்தியா.. இதெல்லாம் உனக்கு யாரால கெடச்சது? எங்க தலைவரால.. இந்த பேப்பரைப்  பத்திரமா வச்சுக்கோ” என்று சொல்லி படத்தைப் பற்றி ரசிகர்களைப் பற்றி கேட்டு என்று ஒரே உற்சாகம்தான். 

 மாலை எங்கள் ‘அதிதீவிர ரசிகர்’ அண்ணனுக்கு முதலில் அழைத்தேன். இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன் என்று சொன்னவுடன், ஆச்சரியப்பட்டு விவரம் எல்லாம் கேட்டுவிட்டு, இதை உங்க அக்காவுக்கு(பெரிய அக்கா) கூப்பிட்டு சொல்லு என்று சொல்லி வச்சிட்டாங்க. உடனே எங்க அக்காவிற்கு அழைத்து உற்சாகமாக சொன்னால், அது அதிர்ச்சியாகிவிட்டது. 

“என்ன சொல்ற?? அந்த கூட்டத்துல எப்படி போயிட்டு வந்த? யாரு உனக்கு டிக்கட் வாங்கி குடுத்தா? உன் வீட்டுக்காரர் எப்படி உன்னை விட்டார்??”

“ அவங்க தான் என்னை கூட்டிட்டு போனாங்க”

 “ஹய்யோ இந்தப் புள்ள அங்க உக்காந்துகிட்டு என்னென்ன வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு… அவங்க வீட்டுக்காரர சொல்லணும்” என்று தன் போக்கில் புலம்பி 

“சாயந்திரம் தான் அண்ணன திட்டினேன்.. இப்ப நீயும் இந்த வேலை பார்த்து இருக்க..”

 “ஏன்? அவங்க வழக்கமா போறது தானே”

“நேத்து பைக்ல போகும்போது கீழே விழுந்து காலில் கட்டு போட்டு இருக்கு. அதோட இன்னைக்கு பசங்களோட படம் பாக்க போயிருக்கு.. அதான்… அப்படி என்ன அந்த படத்த இன்னிக்கே பாக்கணும்னு திட்டினேன்..”

 ஓஹோ….. ‘உங்க அக்காவுக்கு கால் பண்ணு’ என்று சொன்னதன் பின்னணி இதுதானா என்று புரிந்து, மீண்டும் அவங்களுக்கு கால் செயதவுடனே, 

“என்ன வாங்கி முடிச்சிட்டியா?? நான் மட்டும் திட்டு வாங்கினா எப்படி?”

 என்று சொல்லி ஒரே சிரிப்பு. சந்தோஷமா திட்டு வாங்குறதுங்கறது இதுதான். ஆனால் அன்று என் அக்கா பயந்தது போல எந்த ஒரு கசப்பான அனுபவமும் ஏற்படவில்லை.

பின், அடுத்த அண்ணனுக்கு அழைத்து 

“படம் பாத்திட்டியா” என்று கேட்க 

“இல்லப்பா.. நைட் ஷோ தான் போறேன்” என்று சோகமாக சொன்னது.

 “என்னாது……. படம் பாக்கலையா?? ஹா ஹா ஹா.. ரஜினி ரசிகருக்கு வந்த சோதனை…. ஆனா நான் பாத்துட்டேனே” 

“அடப்பாவி.. எப்படி?? எங்கள மட்டும் அப்படி திட்டுனீங்க” என்று தொடங்கி என் தங்கை சொன்ன அதே விதத்தில்… திட்டி முடித்தவுடன், 

“எப்படியோ உனக்கு முன்னாடி நான் பாத்துட்டனே” என்று சொல்லி அதை வம்பு இழுத்தது, என்று அந்த நாளின் நினைவுகள் மறக்க முடியாத சந்தோஷங்கள்.

 பெரிய அண்ணன் அங்கு துறையூரில் மற்றவர்களிடமும் இதை சொல்லி, பேப்பரில் வந்த விஷயத்தையும் சொல்ல, அதில் வேறு ஒரு பஞ்சாயத்தாகிவிட்டது. அடுத்த சில தினங்களில் என் பெரியம்மாவை சந்தித்தபோது, 

“நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? தெரு சனமே எங்கிட்ட வந்து கேக்குது.. ஆனா எனக்குத் தெரியவேயில்ல.. ஒரு ஃபோன் பண்ணுனியா நீ படம் பார்த்தேன்னு?” 

 “அது பெரிம்மா… நான் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் கால் பண்ணினேன்” என்று சமாளித்ததெல்லாம் சந்தோஷ நினைவுகள்.

 “கபாலி”, “காலா”, “எந்திரன் 2.0”, “ஜெயிலர்” போன்ற படங்களையும் முதல் காட்சி பார்த்தேன். ஒரு மாற்றம்.. இந்த படங்களுக்கு, என் மாமாப்பெண், அண்ணன் பெண், மாமாப்பையன்(தீவிர ரஜினி ரசிகர்), அவர் மனைவி என்று கூட்டமாக செல்லும் அளவிற்கு வந்து விட்டோம். ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்.. இப்போதெல்லாம் திரையரங்குகள் சில கண்டிப்பான விதிமுறைகளை பின்பற்றி (மது, புகையிலை, சிகரெட் தவிர்ப்பதை சோதனை செய்து அனுமதி அளிப்பது) பாதுகாப்பாக இருப்பதாலேயே பெண்களாலும் முதல் காட்சிக்கு செல்ல முடிகிறது.

கபாலி

முதல் முறை இவ்வாறு சேர்ந்து போக கிளம்பிய போது, என் மாமா அவர்கள், மாமாப்பெண்ணிடம்,

 “யூ டூ (you too) பா” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாங்களாம். (ஏன்னா…. எங்க மாமாப்பையன், காலையிலேயே படத்துக்கு போறதுக்கே திட்டுவாங்க..)

 இதற்கு என்ன பதில் சொல்லணும்?

 “எஸ் பா”, “நோ பா” இந்த மாதிரி ஏதோ ஒன்னு தான சொல்லணும். அதை விட்டுட்டு ஆப்ஷன்லயே இல்லாத பதிலான 

“சியாமியும் வருதுப்பா” அப்படின்னு சொன்னுச்சாம். 

அதை என்னிடம் சொல்லி ஒரே சிரிப்பு.. 

“நானும் படத்துக்கு வர்றத பத்தி உன்னைய மாமா கேட்டாங்களாப்பா?” என்று நான் கேட்டேன். “அப்படி சொல்லவும் தான், வேற எதுவும் சொல்லாம போயிட்டாங்க” ன்னு சொல்லி சிரித்ததெல்லாம் நினைவில் நிற்கும் சந்தோஷச் சித்திரம். 

நான் இந்த முதல் காட்சிகளில், படம் பார்த்ததைவிட, ரஜினியின் ரசிகர்களையே அதிகம் வியந்து பார்த்திருக்கிறேன். படத்துக்கு நடுவில் வரும் கமெண்ட்டுகள், இடைவேளையின் போது காதில் விழும் சிலாகிப்புகள், வயது கருதாமல் எழுந்து நின்று நடனமாடி, ஆர்ப்பரித்து, உற்சாக கூச்சலிட்டு கொண்டாடும் சந்தோஷங்கள், உள்ளார்ந்த உணர்ச்சிவசங்கள், என்று அந்த சந்தோஷங்ளை சிரிப்புடன் வெகுவாக ரசித்தேன். இப்பவே இப்படி இருக்கே… 80, 90 களில் வந்த படங்கள், “பாட்ஷா” படத்திற்கெல்லாம் எவ்வளவு கொண்டாட்டங்கள் இருந்திருக்கும் என்று தோன்றுவதுண்டு. 

எங்க பெரிய மாமா “நீயும் படம் பார்க்க போனியாமேப்பா?” என்று என்னிடம் கேட்ட போது, நான் இப்படித்தான் சொன்னேன்.. “அந்த கொண்டாட்டத்தை சந்தோஷ ஆர்ப்பரிப்பை நேர்ல பார்க்கணும் என்று எனக்கு ரொம்ப ஆசை மாமா.. அது ஒரு வித்தியாசமான அனுபவமா, நல்லா இருந்துச்சு.” அது வேற லெவல் வைப்ரேஷன் தான். இந்த ஆர்ப்பரிப்பிலிருந்தும், கொண்டாட்டங்களிலிருந்தும் ஒரு ஆற்றலை உருவாக்க முடியும் என்றால் அது மிகப் பெரிய சக்தியாக இருக்கும் என்று தோன்றியது.

நடிகர் ரஜினிகாந்த்

இன்றைய காலகட்டத்தில், வலிந்து உருவாக்கப்படும் கூட்டம், புகழ் மற்றும் கொண்டாட்டங்களை காணும் போது, தலைமுறைகள் தாண்டியும், எதிர்பார்ப்பில்லாத, யாரிடமும் நிரூபிக்கும் நிர்பந்தமில்லாத, பாசாங்கில்லாத, அரிதாரம் பூசாத, அலாதி அன்பு கொண்ட கோடானுகோடி ரசிகர்களைப் பெற, “என்ன தவம் செய்தாரோ? என்ன தவம் செய்தாரோ?” என்றே தோன்றுகிறது.  உலகில் எத்தனைப் பேருக்கு, இப்படி அறிமுகமற்ற மக்களிடமிருந்து இவ்வளவு மட்டற்ற அன்பும், மாறாத நேசமும் கிடைத்திருக்கும்? 

“என்னோட ராசி நல்ல ராசி!! அது எப்போதும் பெரியவங்க ஆசி!!” ஆம்!! பெரியவர்களின் ஆசியும், எத்தனை உயரத்திற்கு சென்றாலும் மற்றவர்களிடம் நீங்கள் காட்டும் பணிவு கலந்த நேசத்திற்கும், முக்கியமாக, இந்தப் பேரன்பு மற்றும் புகழின் கணத்தை தலைக்கு ஏற்றாத தன்னடக்கத்திற்கும் “என்றுமே ராஜா நீ ரஜினி!!” தான். காலங்கள் தாண்டியும் நிலைக்கும் ரசிகர்களின் அன்பெனும் சாம்ராஜ்ஜியத்தின் “மன்னன்” தான்!! நீண்ட நீண்ட காலம் நீடு வாழ, வேண்டி, வாழ்த்தும் சாதாரண கடைக்கோடி ரசிகையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி சார்!! வாழ்க நலமுடன்!! வாழ்க வளமுடன்!!

என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கந்தன் மலை: ``34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம்!'' - ஹெச்.ராஜா

ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'கந்தன் மலை' என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார். இத்திரைப்படத்தின் ட... மேலும் பார்க்க

Netflix: BatMan முதல் Ben10 வரை - வார்னர் ப்ரோஸை வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்; ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம்!

திரைத்துறை வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரியின் (Warner Bros Discovery) தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ஸ்டுடியோக்களை, அதன் ஸ்ட்ரீமிங் பிரிவுடன் சேர்த்து 72 பில்லிய... மேலும் பார்க்க

Vedan: ICU-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராப் பாடகர் வேடன்; துபாயில் தீவிர சிகிச்சை!

மலையாள ஹிப்-ஹாப் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றவர் ராப் பாடகர் வேடன். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயின் குசைஸில் நிகழ்ச்சி நடத்... மேலும் பார்க்க