BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் த...
தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! - கவனிப்பார்களா?
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது.
இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் கட்டடத்திற்கு தர சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியானது அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 8 மாதங்களாக இயங்கி வந்தது. கோயில் விழா நடத்துதல் போன்ற காரணங்களால் பள்ளியானது சாலையில் நடத்தும் அவநிலையும் ஏற்பட்டுள்ளது. பல அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு தற்போது பள்ளியானது சோழியவிளாகம் சமுதாயக் கூடத்தில் இயங்கி வருகிறது.


மேலும், சோழியவிளாகம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பால்வாடி மையமும் சிதிலமடைந்த நிலையில், பால்வாடியும் இடிக்கப்பட்டு, கடந்த ஓர் ஆண்டுக்காலமாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் பால்வாடியும் சமுதாயக்கூடத்தில் தான் இயங்கி வருகிறது. ஒரு சிறிய அளவிலான கட்டடத்தில் தான் 55-க்கும் மேற்பட்ட மாணவர்களை திணித்து வைத்து கல்வி கற்பிக்கும் சூழ்நிலையானது தற்போது நிலவி உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, "எங்க தலைமுறைல உள்ள நெறையா பேரு இந்த ஸ்கூல்ல தான் படிச்சோமே. இப்ப அந்த ஸ்கூலோட கட்டடம் அங்கங்க விரிசல் விட்டு, ரொம்ப மோசமா இருக்கு. மேல உள்ள செவுரு இடிஞ்சி விழுந்துடுச்சி. அதனால, பக்கத்துல உள்ள மாரியம்மன் கோயில்ல ஸ்கூல் நடந்துச்சி. அந்த கோயில் ரொம்ப விஷேசமான கோயில். அப்பப்ப நெறையா பூஜை பண்ணுவாங்க. நெறையா பேருக்கு குல தெய்வம் வேற.

அதனால, அந்த கோயில் எப்பவுமே பூச புணஸ்காரன்னு கூட்டமும் சத்தமாகவும் தான் இருக்குமே. இதுனால, பிள்ளைங்களோட படிப்பு வீணாப்போச்சி. ஒரு நாள் கோயில அலசி விட்டதுனால, பசங்க எல்லாம் உட்கார எடம் இல்லாமா, நடு ரோட்ல உட்காந்து பாடம் படிச்சாங்க. அத பாத்த எங்க ஊருல உள்ள எல்லாரும் கலெக்டர் ஆபீஸ்லாம் போயி மனு கொடுத்ததுக்கு அப்பறம், எல்லா அரசு அதிகாரியும் வந்து பாத்துட்டு, ஊருல உள்ள சமுதாயக்கூடத்துல பள்ளிக்கூடத்த நடத்த சொல்லி இருக்காங்க.
இந்த ஊரு உள்ள பால்வாடியும் இடிஞ்சதுல அங்க உள்ள பசங்களும் சமுதாயக்கூடத்துல தான் படிக்கிறாங்களே. ஒரு சின்ன ரூம்ல எல்லா பசங்களையும் அடச்சி வச்ச மாறி இருக்கு. அந்த குட்டியோண்டு எடத்துல பால்வாடி பசங்க ஒரு பக்கம், இந்த பசங்க ஒரு பக்கோன்னு உக்காந்து இருக்குறதே பாக்கவே கஷ்டமா இருக்கு. பால்வாடி பசங்க, ஓடி ஆடி வெளையாடுற பசங்க. அவங்களுக்கு இப்ப ஓடி ஆடலாம் எடம் இல்ல. உட்கார மட்டும் தான் எடம் இருக்கே. பால்வாடி பசங்க போடுற சத்ததுல. இந்த ஸ்கூல் புள்ளைங்க எங்க படிக்குதுங்க.

பால்வாடில குழந்தைக்கு எல்லாம் கத்துதும்மா படிக்க முடிலம்மா? மிஸ் சொல்றது காதுல விழல்லாம்மன்னு சொல்லுதுங்க? நாங்களும் சீக்கிரம் ஸ்கூல் கட்டிடு வாங்கப்பா கொஞ்ச நாளுதான்னு சொல்லி சமாளிக்கிறோம். இதுல வேற டாய்லெட் மட்டும் தான் இருக்கே. எல்லா சின்ன பசங்களா இருக்குறதுனால, அதுல யூரின் போக தெரியல, எங்க போறதுன்னு தெரியாமா வெட்ட வெளியிலையே போயிடுதுங்க.
பாவம் பால்வாடி கொழந்தைக்கும் இதே நெலமதான். பசங்களுக்கு தாகம் எடுத்தா குடிக்கிறதுக்கு தண்ணிக்கூட கெடையாது. தாகம் எடுத்தா அக்கம் பக்கம் வீட்கக்கு போயிதான் குடிக்கனுமே. இதுல அப்பப்ப நர்ஸ் வேற வந்து சொட்டு மருந்து போடுறது, செக்கப் பன்றதுன்னு எல்லாம் இந்த சமதாயக்கூடத்துலே தான் பண்ணுவாங்க. எங்க பிள்ளைகளோட படிப்பு இதுனால ரொம்ப பாதிக்கப்படுது" என்றனர் வருத்தத்துடன்.

தொடர்ந்து பேசியவர்கள், ``இப்ப பள்ளிக்கூடத்த வேதா ராஜி-ஜீன்னு ஒருத்தர்தான் நடத்திட்டு இருக்காரு. அவரு வாங்கி நாளு வருசம் ஆகுது. அவரு இந்த பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலேயே ஸ்கூல் கட்டனுன்னு இடத்தையும் வாங்கி இருக்காரு. ஆனா, அவரு இப்ப அந்த இடத்துல கட்டமாட்டாராம். அவரு ஸ்கூல் இங்கதான் இருந்துச்சி இங்கதான் கட்டுவன்னு சொல்றாரு.
அவரு இந்த இடத்துல கட்டி இந்த இடத்தையும் எடுத்துக்கலான்னு பாக்குறாறு. அவரு அவரோட இடத்துல ஸ்கூல கட்டி நடத்துறதா இருந்தா நடத்தட்டும். இல்ல, அரசே பள்ளிக்கூடத்த கட்டி முழுசா அரசு பள்ளியா மாத்தி அரசே நடத்தட்டும். எங்க புள்ளைங்க படிக்கிறதுக்கு சரியான இடம் இல்லாமா, அவங்க படிக்கிறதே கேள்விக்குறியா ஏனோ தானோன்னு போகுது. சீக்கிரம் எங்க பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து அவங்களோட அடிப்படை கல்விய இடையூறு இல்லாம கொடுங்க, பால்வாடிதான் இடிஞ்சி போயிட்டுன்னு அப்டே விட்டது எல்லாம் போதும் அந்த பால்வாடியையும் சீக்கிரம் கட்டிக்கொடுத்துடுங்க" என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வேதா ராஜிடம் பேச முயன்றபோது, `வேலையாக இருக்கிறேன். மீண்டும் அழைக்கிறேன்' என நம் அழைப்பைத் துண்டித்தார்.
இது குறித்து சோழியவிளாகம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.சி.பி லெனின், "காந்தி உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியானது 70 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில், மாணவர்கள் கிடைக்கும் இடங்களில் கல்வி கற்கும் நிலை உருவாகி, தற்போது ஒரு மாதக் காலமாக சமுதாயக்கூடத்தில் கல்வி பயிலுகின்றனர்.

இதே சமுதாயக்கூடத்தில் தான் பால்லவாடியும் இயங்கிக்கொண்டிருக்கிறது. 20×30 என்ற சிறிய இடத்திலேயே 55-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை அடைத்து வைத்து பாடம் நடத்தும் அவலநிலையானது உருவாகியுள்ளது. அப்பள்ளியின் தாளாளர் பள்ளியினை அவரின் சொந்த இடத்தில் கட்டித்தர வேண்டும். இல்லையெனில், அரசு அவரின் உரிமத்தை ரத்து செய்து முழுமையாக அரசு பள்ளியாக மாற்றி புதிய பள்ளிக்கூடத்தை விரைவில் கட்டித்தர வேண்டும்.

அரசா? தாளாளரா என்பதற்கிடையில் மாணவர்களின் ஆரம்பக் கல்வி தத்தளித்துக் கொணடிருக்கிறது. உயர்கல்விதுறை அமைச்சரின் சொந்த தொகுதியிலே பள்ளிக் கட்டடத்திற்கு இடம் இல்லை என்பது வருத்ததிற்குரிய ஒன்றாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் முதல் பல அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்ட போதிலும் தஞ்சையின் கடைசி எல்லை என்பதாலோ என்னவோ இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமலே உள்ளது. அரசு விரைந்து புதிய பள்ளிக்கட்டடத்தினை கட்டிக்கொடுத்து மாணவர்கள் ஆரம்பக் கல்வியை சிறப்பாகப் பெற்றிட வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபியிடம் பேசியபோது, ``புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எஸ்டிமேட் அனுப்பி இருக்கிறோம்" எனக் கூறிவிட்டு நம் அழைப்பை துண்டித்து விட்டார்.
அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் புதிய பள்ளிக் கட்டடம் அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

















