2021 - 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?
"தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது எதிர்ப்பதற்கு?" - அமைச்சர் ரமேஷ் கிண்டல்
த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று முழுதாக மூன்று மாதங்கள் முடியவில்லை. அதற்குள்ளாக பல்வேறு துறை சார்ந்த சர்ச்சைகளும் சலங்கை கட்டி ஆடுகின்றன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் நடப்பு அரசியல் குறித்தான கேள்விகளை முன்வைத்தோம்..!
"பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், வெறுமனே அரசு அதிகாரிகளை மட்டுமே பலிகடாவாக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?"
"முதலில், சம்பந்தப்பட்ட இடம் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என்று எந்த அதிகாரியை வைத்து நிர்ணயித்தார்கள்? அந்த இடத்தின் கைடுலைன் வேல்யூ என்பதே 16 கோடிதான். சந்தை விலை என்று நீங்கள் மூன்று மடங்காக்கினால்கூட 48 கோடி ரூபாய்தான் வரும். ஆக, என் மீது களங்கம் சுமத்தவேண்டும் என்ற காரணத்துக்காகவே இப்படியொரு திட்டமிட்ட பிரசாரத்தை செய்துவருகிறார்கள்.
இந்த மோசடி எங்கள் கவனத்துக்கு வராமலேயே நடந்திருக்கிறது என நான்தான் சொல்லியிருந்தேன். காரணம்... சம்பந்தப்பட்ட இடத்தை ஏற்கெனவே சிலர் மோசடியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றுள்ளனர்.

இதையறிந்ததும், 'மடத்துக்குச் சொந்தமான இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது' என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததோடு, பத்திரப் பதிவுத்துறைக்கும் கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால் அதையும் மீறி கடந்த ஜூலை 6-ம் தேதி அதிகாரிகளின் திட்டமிடலோடு நிலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்று வருகிறது."
"அரசியல்வாதிகள் துணையின்றி வெறுமனே அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படியொரு மோசடியை செய்திருக்க முடியுமா...?"
"அதிகாரிகள் மட்டுமே தன்னிச்சையாக இந்த காரியத்தைச் செய்திருக்க முடியாது. இதன் பின்னணியில் கடந்த ஆட்சியாளர்களும் இருக்கிறார்களா அல்லது வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டறிவதற்காகத்தான் நானே முதல்வரிடம் நேரடியாகப் பேசி, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் மாற்றி உத்தரவிட்டிருக்கிறோம். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்!"
"கரூரில் கோயில் நிலத்தை, 'இனாம் நிலம்' எனக்கூறி வாக்கரசியலுக்காக பொதுமக்களுக்குத் தாரை வார்த்துவிட்டதாக த.வெ.க அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?"
"25 கோடி ரூபாய் மதிப்புடைய கோயில் நிலத்தை வாக்கரசியலுக்காக மக்களுக்குத் தாரை வார்த்துவிட்டார்கள் என எதிர்க்கட்சிகள் எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றன. கோயில் நிலத்தை எப்படி தனிநபர்களுக்கு பட்டா கொடுக்க முடியும்? இது ஆகப்பெரிய பொய்.
கடந்த 15 வருடங்களாக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சொந்தமான மக்களிடம் 'நாங்கள் உங்களோடு நிற்கிறோம்' என பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மாறி மாறி ஜெயித்துவந்த தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஆக, வாக்கரசியலுக்காக இந்தக் கட்சிகள்தான் கரூர் மக்களை இதுநாள்வரையிலும் ஏமாற்றி வந்திருக்கின்றன. குறிப்பாக அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலேயே 'இனாம் நிலத்தை மக்களுக்கு பட்டா எழுதித்தருகிறோம்' என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஜெயித்திருக்கிறார்கள்.
இந்த சூழலில், த.வெ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்தோம்.
அதில் இனாம் நிலத்தை, 'கோயிலுக்குச் சொந்தமான இடம்' எனக்கூறி, 471 சர்வே நம்பர்களை கடந்த ஆட்சியாளர்கள் ப்ளாக் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே ப்ளாக் செய்து வைக்கப்பட்டிருந்த ரிலீஸ் செய்த முதல்வர், அவற்றை தனிநபர்களுக்கு பட்டா வழங்கவும் அனுமதி அளித்தார்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது... சம்பந்தப்பட்ட இடத்தில் அரசு நிறுவனங்களும் அமைந்திருக்கின்றன. இதற்காக சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு அரசுத்தரப்பில் இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்பட்டிருக்கிறது. நில உரிமையே இல்லாத ஒருவருக்கு அரசு எப்படி இழப்பீடு வழங்கும்?
உண்மை இப்படியிருக்க.... இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சி செய்தவர்கள், 1912-ல் உள்ள கோயில் ஆவணங்களை வைத்துக்கொண்டு இ.ஓ மூலமாக, 'இது கோயில் நிலம்' என பொய்யாக ஒரு வழக்கைத் தொடுத்து ஒட்டுமொத்தமாக சம்பந்தப்பட்ட இடங்களை பட்டா பரிமாற்றம் செய்ய முடியாதபடி ப்ளாக் செய்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆட்சியாளர்களிடம் முறையிடும்போது, குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு என்.ஓ.சி கொடுத்துவிடுவதாகக்கூறி பேரம் பேசி மிரட்டி வந்திருக்கிறார்கள். கரூர் மட்டுமல்ல... தமிழ்நாடு முழுக்கவே இதுபோன்ற பிரச்னைகள் இருக்கின்றன."
"உங்கள் மீது தூசுகூட விழாமல் பாதுகாப்பேன் என்று தேர்தலின்போது வாக்களித்தவர் விஜய். இன்று அவரது ஆட்சியில் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்கிறபோது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகூட தெரிவிக்கவில்லையே?"
"சட்டம் ஒழுங்கு விவகாரத்தை மிகவும் ஆழமாக சிந்திக்கக்கூடிய மனிதர் நமது முதல்வர். அந்த வகையில், காவல் மரணங்களை தடுப்பதற்காக அவர் இதுவரை எத்தனை அதிகாரிகளோடு பேசியிருக்கிறார், எத்தனை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார் என்பதெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும். 'இனிமேல் இப்படியொரு சம்பவம் நிகழக்கூடாது' என்ற நோக்கில், அதைத் தடுப்பதற்கான பணிகளில் அவர் தீவிர கவனம் செலுத்திவருகிறார். எனவே, இந்த விவகாரங்களை முதல்வர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இப்படித்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன என சொல்லிக்கொண்டே இருந்தார்கள். உடனே, 'சிங்கப்பெண் அதிரடிப்படை'யை ஆரம்பித்து, குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்தார் முதல்வர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போதை கலாச்சாரம், காவல்துறை மரணம் போன்றவை த.வெ.க ஆட்சிக்குப் பிறகு மட்டுமே நடைபெறுகிற விஷயமல்ல... கடந்த 50 ஆண்டுகால ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டுப்போன விஷம். இந்த 50 ஆண்டுகால விஷத்தை, ஆட்சிக்கு வந்த உடனேயே முறித்துவிட முடியாது.
காவல் மரணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வெறுமனே வார்த்தைகளில் ஆறுதல் கூறுவதைவிட, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தருவதுதான் உண்மையான ஆறுதல். அதற்கான முயற்சிகளில் முதல்வர் தீவிர கவனம் செலுத்திவருகிறார். "
"பா.ஜ.க-வை கொள்கை எதிரி என அறிவித்த த.வெ.க., களத்தில் பா.ஜ.க-வை நேரடியாக எதிர்க்கத் தயங்குவது ஏன்?"
"முதலில், தமிழக அரசியல் களத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது? 'பா.ஜ.க-தான் எங்கள் கொள்கை எதிரி' என த.வெ.க-வைத் தவிர வேறு எந்தக் கட்சியினராவது தமிழ்நாட்டில் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்களா? அதேசமயம் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை, திட்டத்தைப் பெறுவதற்காக, நாங்கள் மத்திய பா.ஜ.க அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறோம். கடந்த தி.மு.க அரசைப்போல், கண்மூடித்தனமாக எதிர்க்கமாட்டோம்."
"அப்படியென்றால், கடந்த தி.மு.க ஆட்சியாளர்கள் மத்திய பா.ஜ.க-வை கண்மூடித்தனமாக எதிர்த்த ஒரு விஷயத்தைக் குறிப்பிடுங்களேன்...?"
"கடந்த தி.மு.க ஆட்சியின்போது, 'மது போதையைக் கட்டுப்படுத்த வேண்டும்' எனக்கூறி அன்றைய தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தினார். ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க-வும் அதற்கு எதிர்வினை ஆற்றியது.
'தைரியமிருந்தால் கமலாலயத்துக்கு வா... அறிவாலயத்துக்கு வா' என இரு தரப்புமே மாறிமாறி சவால்விட்டுக்கொண்டு வெறுமனே அரசியல் மட்டும் செய்துவந்தார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இவர்கள் இருவரும் நினைத்தால், கூட்டு நடவடிக்கையாக மது போதையைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்தானே? அதைவிட்டுவிட்டு நடு ரோட்டில் நின்றுகொண்டு ஏன் இப்படி கண்மூடித்தனமான அரசியல் எதிர்ப்பை செய்துவந்தார்கள்? இதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்."













