செய்திகள் :

புதுப்பேட்டை : முதிர்ச்சியின்மையும் வன்முறையும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 13

post image
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!

தமிழ் சினிமா வரலாற்றில், இப்படி ஓர் இடத்தில் ஒரு படத்தின் கதை தொடங்கியிருக்குமா என்பது சந்தேகம்தான். ப்ளஸ் டூ படிக்கும் குமாரும், அவனது அம்மாவும் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். அவனது அப்பா சேகர் ஒரு ரவுடி. எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவான். அவனுக்கு இன்னொரு மனைவி, அவளுடைய பிள்ளைகள் என்று இன்னொரு குடும்பமும் இருக்கிறது. ஒருநாள், குமார் சினிமாவுக்குப் போய்விட்டு இரவு வீடு திரும்பும் போது, ஒரு பெரிய தயக்கத்தோடு சேகர் கதவைத் திறக்கிறான். உள்ளே போனால் அம்மா, கழுத்தறுபட்டு இறந்துகிடக்கிறாள். பதற்றத்திலும், பாசத்திலும் அவன் அழுகிறான்.

அப்பாவும், அவனது நண்பர்களும் அம்மாவின் பிணத்தைக் கட்டிக்கொண்டு போய் கடலில் வீசிவிட்டு வந்த பின்னும் அவனது அழுகை நிற்கவில்லை. அப்போது, அப்பாவின் நண்பன் ரகசியமாக, ‘இவனை இப்படியே விட்டா போலீஸ்ல உளறிடுவான். நீ ஜெயிலுக்குப் போகிறதுக்குதான் வாய்ப்பு அதிகம். உன் பிள்ளைதான், ஆனா அவன் வேணுமா வேண்டாமான்னு நீதான் முடிவு செய்யணும்.’ என்று சொல்லிவிட்டுச் செல்லுகிறான். அதை ஒட்டுக் கேட்டுவிடும் குமார் ஆடிப்போகிறான். சேகர் அவனைக் கொல்லவேண்டும் என்று எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், கட்டிய மனைவியைக் கொல்லுபவனுக்கு, பிள்ளை எம்மாத்திரம்? பயத்தில் நடுங்கிப்போய் வீட்டை விட்டே ஓடிப்போகிறான் குமார்.

புதுப்பேட்டை

அப்படிப்பட்ட தந்தையைத்தான் பின்னாளில், குமார் ஒன்றுமில்லாத ஒரு காரணத்துக்காக உயிரோடு மண்ணில் புதைத்துக்கொல்லுகிறான். அது நடக்காமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்.

உளவியலாகப் பாதிக்கப்பட்ட சைக்கோபாத்களின் கதைகளை நிறைய பார்த்திருக்கிறோம். அந்தச் சிக்கலோடு வன்முறையும் சேரும் போது அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர்கள்தான் சிந்தனையில் முதிர்ச்சி ஏற்படாத, பண்படாத மனிதர்களும். அவர்கள் வன்முறையைத் தேர்ந்தெடுக்கும் போது அது எவ்வளவு ஆபத்தானதாக மாறிவிடுகிறது என்பதைத்தான் இந்தப் புதுப்பேட்டை என்ற படம் பேச முயலுகிறது.

தாயை இழந்து, தந்தைக்குப் பயந்து ஓடிப்போகும் குமாருக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. பசியால் வாடி, பிச்சை எடுக்கிறான். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு ரவுடி கும்பலில் மாட்டிக்கொள்ளுகிறான். போதை மருந்து விற்கிறான். அடிதடி, வெட்டுக்குத்து என சீக்கிரமே பழகிக்கொள்கிறான். மிக விரைவாகவே கொலைகள் செய்யவும் தயாராகிவிடுகிறான். அந்தக் குழுவிலிருக்கும் யாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு இவனிடம் இருக்கிறது. அது, அவனுக்குப் பயமே இல்லை.

காரணம் கொக்கி குமாரிடம் இழக்க ஒன்றுமேயில்லை, உயிரைத் தவிர! அவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காகவும், அவன் வாழ்வதற்காகவும் யாரையும், எத்தனை பேரையும் கொன்றுபோடவும் அவன் தயங்குவதில்லை. அதனால் மிக வேகமாக வளர்கிறான். துணிச்சலால் அவன் அதைச் செய்யவில்லை. முதிர்ச்சியற்ற, முரட்டுத்தனத்தால் அதைச் செய்கிறான். அவன் தாக்கப்பட வாய்ப்பிருக்கும் போதெல்லாம் சற்று முந்திக் கொள்கிறான். இவ்வளவு வேகமாக வளர்ந்தவன், பின்னால் எதிலெல்லாம் சிக்கிக் கொள்கிறான், இறுதியில் என்னவாகிறான் என்பதுதான் கதை!

புதுப்பேட்டை!

குமார், கிருஷ்ணவேணி எனும் பாலியல் தொழிலாளி ஒருத்தியைக் காதலிக்கிறான். வலிகளுக்கும், வேதனைகளுக்கும் ஊடாக வாழும் வேணிக்கு, குமாரின் அன்பு கிடைத்தற்கரிய ஒன்றாக இருக்கிறது. குமாருக்கு பணம், செல்வாக்கு, மரியாதை மட்டுமல்ல, வேணியும் அந்த அவனது வன்முறையால் கிடைத்த பலன்தான். அதனால், அவனுக்கு அவற்றின் உண்மையான பொருளோ, அவற்றைக் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்பதோ தெரியாது.

அவனது வலக்கையாக இருக்கும் ஓர் அடியாளான மணியின் தங்கை திருமணத்துக்குச் செல்லும் குமார் அந்தப் பெண்ணின் அழகில் மயங்குகிறான். தாலி எடுத்துக்கொடுக்கையில் யாரும் எதிர்பாராதவண்ணம் அவனே அவளுக்குத் தாலியைக் கட்டிவிடுகிறான். எத்தனையோ கனவுகளைக் கண்டுகொண்டிருந்த கிருஷ்ணவேணி அங்கிருந்து கண்ணீரோடு கிளம்பிவிடுகிறாள். ஓரிரு நாட்களில் அவள் ஊரை விட்டே செல்லப்போவதாக சொல்லிச்செல்ல வருகிறாள். அப்போதுகூட அவளது வலி எதையும் புரிந்துகொள்ளாத அவன், அவளிடம் பணம் வேண்டுமா என்று கேட்கிறான். இந்த நிலையில் பணம் வேண்டுமா என்று ஒரு பாலியல் தொழிலாளியைப் பார்த்துக் கேட்பது எத்தனை துயரத்தைத் தரக்கூடியது? எதையும், யாரையும் கொக்கி குமார் புரிந்துகொள்வதுமில்லை, அதற்கான அவசியமும் அவனுக்கில்லை.

அண்ணன் செல்வராகவன் படமான துள்ளுவதோ இளமையில் நடிகராக அறிமுகமாகி, காதல் கொண்டேன் படம் மூலமாக அடையாளம் காணப்பட்டவர் தனுஷ். அதன்பின் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. அறிமுகமாகி சுமார் 4 வருடங்கள்தான் ஆகியிருந்தன. அவருக்குப் பள்ளி மாணவன் போன்ற உடல்வாகு. கொக்கி குமாராக, தனுஷை வேறு யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. அப்படியொரு மிக வலுவான பாத்திரம் தனுஷுக்கு!

செல்வராகவனுக்குத் தம்பி மீது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றியிருந்தார் தனுஷ். இதன் மூலம், தமிழில் தானொரு தவிர்க்க முடியாத நடிகர் எனும் அசைக்க முடியாத இடத்தையும் உருவாக்கிக் கொண்டார். இதுவே அவர் பின்னாளில், ஆடுகளம், ஷமிதாப், வடசென்னை, அசுரன், தி கிரே மேன் எனும் உயரங்களுக்குச் செல்ல ஓர் அடித்தளமாக அமைந்தது.

சிநேகாவின் கேரியரில் புதுப்பேட்டை மிக முக்கியமான படமாக அமைந்துபோனது. கிருஷ்ணவேணி எனும் பாலியல் தொழிலாளியாக அந்த வேதனையையும், குமார் மூலமாகக் கிடைத்த எதிர்பாராத வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அவனை முழுதுமாக நம்பும் போதும், பின்னர் அவனே அவளைத் துச்சமாக நடத்துகையில் உடைந்துபோவதுமாக சிறப்பாக நடித்திருந்தார்.

குமார் கல்யாணம் செய்துகொள்ளும் பெண்ணாக, செல்வி எனும் பாத்திரத்தில் சோனியா அகர்வால், நல்ல பங்களிப்பைக் கொடுத்திருந்தார். அவன் தூங்கும் போது அவளால் மட்டுமே அவனைக் கொல்லமுடியும் எனும் சூழ்நிலை, அது நியாயமானதும் கூட, ஆனாலும் அதைச் செய்யும் துணிவில்லாமல், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகளிலேயே அவனை அவள் நைச்சியமாய் அவமானப்படுத்துகிறாள். அந்தக் காட்சிகள்தான் அவனை ஓரளவுக்காவது சிந்தனைக்குள் தள்ளுகின்றன. உறவுகளின் அருமையை உணருகிறான். இன்னும் அழகம்பெருமாள், பாலா சிங், நிதிஷ் வீரா, மூணார் ரமேஷ் உட்பட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கொக்கி குமாரின் அடியாள் கூட்டத்தில் ஒருவராக விஜய் சேதுபதியின் தலையும் தென்படுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா. இவரும், செல்வராகவனும் பல படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். காதல் காட்சிகளையும், ஹீரோயின்களையும் படம்பிடிப்பதில் தனித்துவமானவர் அரவிந்த். ஆனால், இந்தப் படத்தில் அதற்கான வேலையில்லை. ரத்தமும், வன்முறையும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் கதையின் ராவான தன்மையையும் தன்னால் சிறப்பாகப் படமாக்க முடியும் என்பதைச் செய்துகாட்டியிருந்தார்.

இசை யுவன்ஷங்கர் ராஜா. அடுத்தடுத்து, காட்சிகள் பரபரவென நகர்ந்துகொண்டே இருக்கும் இந்தப் படத்துக்குப் பொருத்தமான பின்னணி இசையைக் கொடுத்திருந்தார். அப்பாவியான, பயம் கொண்ட குமாரின் எண்டூரன்ஸ், போஸ்டர் ஒட்டப்படுவதால் நடக்கும் தாக்குதல் காட்சியில் முதல்முறையாக வெளிப்படுகிறது. பின்னர் அவனுக்குக் கிடைக்கும் மரியாதை, அதன் பின்பு கிருஷ்ணவேணிக்காக அன்புவைக் கொலை செய்யும் இடம் என அவனது வளர்ச்சி படிப்படியாக நடக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும், குமாருக்கான எலிவேஷனை காட்சிகளோடு கூடவே பின்னணி இசையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதை நம்மால் உணரமுடியும்.

பாடல்கள் நா.முத்துக்குமார். ‘நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும், கத்தி கண்ணின் இருபுறம் தெரியும்’ எனும் பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தார். தனது படங்களுக்கானப் பாடல்களைத் தாண்டி, பிறர் படங்களில் கமல்ஹாசன் பாடுவது மிக அரிதான நிகழ்வு. இந்தப் பாடல், ஒரு கேங்கின் ஓரங்கமாக இருக்கும் கொக்கி குமார் எப்படி தனி கேங்ஸ்டராக உருவெடுக்கிறான் என்பதன் சுருக்கமான வெளிப்பாடாக படத்தில் மிகப் பொருத்தமான இடத்தில் வருகிறது. ’ஒரு நாளில் வாழ்க்கை’ பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடியிருந்தார்.

படத்தின் வசனத்தை எழுதியிருந்தது எழுத்தாளர் பாலகுமாரன். பாலகுமாரனின் கடைசிப் படம் இது. சுஜாதாவைப் போலவே பாலகுமாரனும் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இருவரும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்திருக்கின்றனர். சுஜாதா, கே.பாலசந்தரின் 1979-ல் நினைத்தாலே இனிக்கும் படத்தில், முதல் முறையாக வசனம் எழுதுகிறார். பாலகுமாரன் 1981-ல் கமல்ஹாசனின் ராஜபார்வையில் சினிமாவுக்குள் வருகிறார். விக்ரம், இந்தியன், முதல்வன், என சுஜாதா தொடர்ந்து வெற்றிப்படங்களில் பங்களித்து அவரது மரணத்துக்குப் பின் வெளியான எந்திரன் வரை சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தார். அதுபோலவே பாலகுமாரனும், நாயகன், குணா, பாட்ஷா போன்ற மிகவும் குறிப்பிடத்தக்க படங்களில் பணியாற்றி, தன் இறுதிக்காலத்தில் எழுதிய புதுப்பேட்டை வரை சினிமாவில் வெற்றிகரமாக இயங்கினார்.

பாலகுமாரன்

புதுப்பேட்டையைத் தயாரித்திருந்தது லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்காக முரளிதரன் மற்றும் சாமிநாதன். கதை, திரைக்கதை எழுதி, படத்தை இயக்கியிருந்தது செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி வரிசையில் தனித்துவமான ஒரு ஹீரோ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இதன் கதையை எழுதியிருந்தார். சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு பிழைத்திருக்கும் (Survival of the Fittest) ஒரு மனிதனின் கதை இது.

வன்முறைப் பாதையில் மிக வேகமாக வளரும் ஒருவனின் வாழ்க்கையை நம்பும்படியாக நிஜத்துக்கு நெருக்கமான படமாக உருவாக்கியிருந்தார். அன்பு, மூர்த்தி என குமார் அவனுக்கு முன்பாக இருக்கும் தடைகளையெல்லாம் தகர்த்து ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைக்கு நெருக்கமான இடத்தை அடைகிறான். பணம், செல்வாக்கு என எல்லாவற்றின் உச்சம் அது. ஆனால், அங்கு சென்றபிறகும் அவனது வேகம் குறையவில்லை. வரவிருக்கும் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் கேட்கிறான். அப்போதுதான், அந்த உச்சக் கட்டத்தில்தான் அவனுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களான நமக்கும் தெரிகிறது, அங்கே அவனுக்கு முன்பாக எத்தனைக் கொக்கி குமார்கள் அதற்காகக் காத்திருக்கிறார்கள் என்பது! அங்கே வீழ்கிறான் அவன்.

அவனது வீழ்ச்சியோடு, மனைவி, பிள்ளை மட்டுமல்லாது இதுவரை அவன் சேர்த்த அத்தனையையும் இழந்து நிற்கிறான். தாயின் இறப்புக்குப் பின்னர், ஒரு உறவுக்காக, அவன் பெற்ற பிள்ளையைக் காப்பதற்காக முதன்முறையாகக் கண்ணீர் சிந்துகிறான். இறுதியில், கைது செய்யப்பட்டு நிரந்தரத் தனிமைச் சிறைக்குச் செல்கிறான் கொக்கி குமார். அங்கே முடிகிறது படம்.

புதுப்பேட்டை

ஆனால், இயக்குநர் ஒரு ஃபேண்டஸிக்காகவோ அல்லது சமூகத்தின் மீதான சர்காஸ்டிக் விமர்சனமாகவோ படத்தின் முடிவை அதற்கு மேலும் நீட்டித்து, குமாரை எதிர்க்கட்சிக்காரர்கள் சிறையிலிருந்து மீட்டு பதவி கொடுத்து அரவணைத்து, எம்.எல்.ஏ சீட் கொடுத்துப் பரஸ்பரம் உதவிக்கொள்கிறார்கள் என்பதாக முடித்திருக்கிறார்.

ஒரு டாக்டர், ஒரு வழக்கறிஞர், ஒரு தொழிலதிபர்… அவ்வளவு ஏன் ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொண்டால்கூட அவர்கள் எப்படி வாழ்க்கையில் சிறுகச்சிறுக நகர்ந்து மிகப்பெரிய இடத்துக்குப் போகிறார்கள், அவர்களுடைய பயணம் எப்படிப்பட்டது என்பதை நம்மால் ஊகித்து உணரமுடியும். ஆனால், ஒரு ரவுடி, கேங்ஸ்டர் என்பவன் எப்படி உருவாகிறான், அதன் பின்னணியில் எத்தனைக் கயமையும், முதிர்ச்சியின்மையும், ஆபத்தும் அடங்கியிருக்கிறது என்பதை அழுத்தமாகக் கோடிட்டுக் காண்பிக்கிறது இந்தப் புதுப்பேட்டை.!

(தொடரும்)

"அலைஞ்சதுக்கு கூலி கிடைக்காத வருத்தத்தை அவருடைய 4 பாட்டு போக்கிடும்!" - 'கண்ணதாசன் நர்சரி' சரவணன்

'கவியரசு கண்ணதாசன் நர்சரி கார்டன்' என்ற போர்டு மாட்டிய தனது மாட்டு வண்டியை சென்னை சூளை பகுதியின் தெரு ஒன்றின் ஓரமாக நிறுத்துவிட்டு, எதிரே இருந்த டீ கடையில் போய் ஒரு டீ குடித்து விட்டு வந்த அந்த முதியவ... மேலும் பார்க்க

Sarathkumar: "நீதான் இறுதிவரை என் அன்புக் காதலி ராதிகா!" - சரத்குமார் ஜாலி டாக்

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த விருது நிகழ்வின் காணொளிகள் அடுத்தடுத்து நம் சினிமா விகடன் சேனலில் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்வில், சிறந்த ... மேலும் பார்க்க

Dhanush: "அதுதான் சந்தோஷமான நாள்கள் என அப்போ எனக்கு தெரியல"- தனுஷ் ஷேரிங்

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Dhanush: "தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்" - நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Kollywood: அஜித் டு கார்த்திக் சுப்புராஜ்; களைகட்டும் அப்டேட்கள் - இது கோலிவுட் புதிய அறிவிப்புகள்!

கடந்த மூன்று நாட்களாகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, புதிய படங்களின் அறிவிப்பு எனப் பல அப்டேட்கள் அ... மேலும் பார்க்க

Dhanush: 'தனுஷ் ப்ளாக்' - படித்த பள்ளிக்கு கட்டிட உதவி செய்து கொடுத்த தனுஷ்!

நடிப்பைத் தாண்டி பொதுச் சேவைகளையும் தற்போது நடிகர் தனுஷ் அதிகமாகவே செய்து வருகிறார். அன்னதானம், ரத்த தான உதவி எனச் சமீபத்தில் தனுஷ் ரசிகர்கள் நடத்திய நிகழ்வுகள் அனைத்தும் பேசுபொருளாயின. தற்போது தான் ப... மேலும் பார்க்க