சர்ச்சை மேல் சர்ச்சை; மேலிடத்தை தூங்கவிடாமல் செய்யும் விருதுநகர் தவெக! - சாட்டை...
"அலைஞ்சதுக்கு கூலி கிடைக்காத வருத்தத்தை அவருடைய 4 பாட்டு போக்கிடும்!" - 'கண்ணதாசன் நர்சரி' சரவணன்
'கவியரசு கண்ணதாசன் நர்சரி கார்டன்' என்ற போர்டு மாட்டிய தனது மாட்டு வண்டியை சென்னை சூளை பகுதியின் தெரு ஒன்றின் ஓரமாக நிறுத்துவிட்டு, எதிரே இருந்த டீ கடையில் போய் ஒரு டீ குடித்து விட்டு வந்த அந்த முதியவரை நிறுத்தினோம்.
'கண்ணதாசனின் தீவிர ரசிகரா நீங்க' என்றதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கி விட்டார்.
''என் பேரு சரவணன். சென்னையில கோயம்பேடு பக்கம் வீடு இருக்கு. அப்பா தோட்ட வேலைக்காரர். வருஷம் நினைவுல இல்ல. தி.நகர் நடேசன் பூங்காவுல தோட்ட வேலை செஞ்சிட்டிருந்தார். எதுத்தாப்லதான் கவிஞர் வீடு. அதனால அப்பா முதல்ல கண்ணதாசனைச் சந்திச்சு அறிமுகமாகிறார். அவருடைய வீட்டுலயும் சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சிருக்கார் அப்பா.
அப்படி அப்பா கவிஞர் வீட்டுக்குப் போறப்ப கூடப் போய் நானும் அவரைப் பார்த்தேன். அதுக்கு முன்னாடில்லாம் எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கேன். அதுல நல்ல நல்ல பாட்டுகளைக் கேட்டிருப்பேன். ஆனா இவர் எழுதினதுனு தெரியாது.
அவரை நேரில் பார்த்த பிறகு அவருடைய பாட்டு மேலயும் ஒரு காதல் வந்திடுச்சு.

என் கல்யாணம் நடந்தப்ப அவருக்குப் போய் பத்திரிகை வச்சோம். நூறு ரூபாய் தந்தார். அவர் இருந்த வரைக்கும் அப்பப்ப போய் நேர்ல போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்திட்டிருந்தேன்.
எனக்கு பிள்ளைகள் பிறந்து அதுகளையெல்லாம் கட்டிக் கொடுத்து பேரன் பேத்திகள்லாம் எடுத்துட்டேன். பிள்ளைகள் பேசாம வீட்டோட இருக்க வேண்டிதானேனு சொல்லிப் பார்த்தாக. எனக்குத்தான் கேட்ட மனமில்லை. அதனால எனக்கு தெரிஞ்சு ஒரு வேலையைப் பார்ப்போம்னுதான் இந்த நர்சரி.
படப்பை போய் மொத்தமா வாங்கிட்டு வருவேன். அப்பா காலத்துல இருந்து உதவிய இந்த மாட்டு வண்டிதான் கடை.
நண்பர் ஒருத்தர்தான் 'கண்ணதாசன் நர்சரி'ன்னு போர்டு செஞ்சு தந்தார். நடமாடும் நர்சரி ரெடி.
வண்டியில செடிகளை எடுத்துகிட்டு மாட்டைப் பூட்டி ஒரு வாரத்துக்கு ஒரு ஏரியானு கிளம்பிடுவேன். சாப்பிட வீட்டுல ஏதாவது இருந்தா ஒரு பாத்திரத்துல எடுத்துக்கிடுவேன். மத்தியான நேரம் எங்காச்சும் மரத்தடியில மாட்டுக்கும் ஓய்வு கொடுத்துட்டு நானும் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் படுதது எழுந்து திரும்ப நாலு தெரு சுத்தினா அன்னைக்குப் பொழுது முடிஞ்சிடும்.
வண்டியில ஸ்பீக்கர் ஒண்ணு வச்சிருந்தேன். 'கட்டோடு குழலாட ஆட', 'அன்று வந்ததும் அதே நிலா', 'பேசுவது கிளியா'ன்னு அத்தனை கண்ணதாசன் பாட்டும் இருக்கும். சாப்பாட்டு நேரத்துல போட்டு கேட்டுகிட்டே சாப்பிட்டா அந்தப் பாட்டைக் கேக்கறதுக்குன்னே ரெண்டு பேர் வந்து ரெண்டு செடிகூட வாங்கிட்டுப் போவாங்க.
இப்ப அது ரிப்பேர் ஆகிடுச்சு. சீக்கிரம் சரி பண்ணணும். அது இல்லாம நாலு நாளா என்னவோ மாதிரி இருக்கு'' என்றவரிடம்
வியாபாரம் எப்படிப் போகிறது என்றோம்.

முப்பது ரூபாயில கிடைக்கிற துளசிச் செடியில் இருந்து ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் செடிகள் எங்கிட்ட இருக்கு. விலையுயர்ந்த செடிகளை வசதியானவங்க வாங்குவாங்க. வியாபாரம் ஏத்த இறக்கத்தோடயே இருக்கும். அதுபத்திக் கவலைப் படலை.
அலைஞ்சதுக்கு கூலி கிடைக்கலைன்னா கூட அன்னைக்கு வீடு திரும்பும்போது ரொம்ப பிடிச்ச அவருடைய நாலு பாட்டைக் கேட்டுட்டே போனேன்னா வருத்தமெல்லாம் பறந்துடும்'' எனச் சிரிக்கிறார்.




















