புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?
'எத்தனை நாளுக்குதான் சேகர் பாபுவே.!' - அங்கலாய்த்த திமுக எம்.எல்.ஏ; சட்டமன்ற ஹைலைட்ஸ்!
சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி சட்டமன்ற வளாகத்தில் இன்றைய நாளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே.!

> திமுக-வினர் கருப்பு சட்டையுடன் சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர். சேகர்பாபு, சிவசங்கர், தங்கம் தென்னரசு என திமுகவின் எம்.எல்.ஏக்கள் எல்லாரும் முன்பே வந்து நான்காம் எண் நுழைவு வாயிலுக்கு வெளியே உதயநிதிக்காக காத்திருந்தனர். அவை 9:30 கூடும் எனும் நிலையில் 9:20 மணிக்கு வந்து சேர்ந்தார் உதயநிதி.
> எம்.எல்.ஏக்கள் புடைசூழ அவரும் கருப்பு டீசர்ட்டோடு வர, பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். 'உள்ள போயிட்டு வந்து பேசுறேன்' எனக் கூறிவிட்டு அவைக்குள் சென்றார். பெரிய ஆக்சன் ப்ளாக் இருக்கிறது போல...என பத்திரிகையாளர்கள் ஆர்வமாக வழிவிட்டனர். ஆனால், அப்படி எதுவும் அமலி துமளியாக நடக்கவில்லை.
> சி.வி.சண்முகம் சட்டமன்றத்துக்கு எப்போதுமே 'Late Comer' கேட்டகரிதான். அவை ஆரம்பித்து 20-30 நிமிடங்கள் கழித்துதான் வருவார். இன்றும் அப்படியே வந்தார். அதுவும் தனியாக தன்னந்தனியாக வந்தார். அவை முடிந்த பிறகு அமைச்சர் ஆனந்தை சி.வி.சண்முகம் சந்தித்திருந்தார். வெளியே வந்தவரிடம் எடப்பாடியை சந்தித்தீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்க, 'நான் ஏன் ஈ.பி.எஸ் யை சந்திக்கணும்...' என சிவந்த கண்களோடு கேட்டு 'சண்டை இன்னும் முடியவில்லை' என்பதை உறுதிப்படுத்திவிட்டு சென்றார்.
> சி.வி.சண்முகத்தோடு எஸ்.பி.வேலுமணியும் அமைச்சர் ஆனந்தை சந்தித்திருந்தார். அவர் கொஞ்சம் உஷார். 'அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக அமைச்சரை சந்தித்தேன்' என நேக்காக பூ சுற்றினார். 'இவர்கள் விரும்பினாலும் ஆளுங்கட்சி இப்போதைக்கு அவர்களை கூடாரத்துக்குள் சேர்க்கும் எண்ணத்தில் இல்லை' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.
> பாமகவின் சௌமியா அன்புமணி சட்டமன்ற நிகழ்வுகளில் கூடுதல் ஆர்வமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கின்றனர். அவை முடிந்த பிறகும் பொதுவாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி முடித்துவிட்டு, தனியாக பைட் கேட்கும் அத்தனை செய்தியாளர்களுக்கும் தனியாக பேட்டி கொடுத்துவிட்டே செல்கிறார். இன்றும் அப்படியே செய்தார். உதவியாளர்கள் நேரமாகிறது என குறுக்கிட்டாலும் பொறுமையாக அரைமணி நேரத்துக்கு மேல் நின்று பேட்டியளித்து விட்டே செல்கிறார்.
> எடப்பாடி பழனிசாமி இன்று தனது காரில் ஏறுவதற்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் காரில் தவறுதலாக ஏற முயன்றார். கடந்த சில ஆண்டுகளில் எடப்பாடி இப்படி உதயநிதி காரில் ஏற முயல்வது இது இரண்டாவது முறை. 'இன்னோவாக்கும் டிபண்டருக்கும் வித்தியாசம் தெரியலயா சாரே...' என சட்டமன்ற வளாகத்தில் ஜாலியான கமெண்ட்களை கேட்க முடிந்தது.
> அவையை முடித்துவிட்டு முக்கிய தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அவர்கள் பக்கத்தில் ப்ரேமில் தெரியும்படிக்கு நிற்க பெரிய போட்டியே நடக்கும்.
அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள், தவெக என எந்த கட்சிக்கும் இதில் வித்தியாசமில்லை. உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு வரும் முன்பே ஓடி வந்து திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் மைக் முன்பு இடம்பிடித்து நின்று விட்டார்.

நின்றவர் ஒரு ப்ளோவில், 'அண்ணே.. இங்க வாங்க.. எத்தனை நாள் தான் சேகர்பாபுவே...' என அங்கலாய்த்தப்படி கூறி விட்டு கேமராக்களை பார்த்து நாக்கை கடித்து மாட்டிக் கொண்டார். அதற்குள் உதயநிதி வர உடன் சேகர்பாபுவும் வந்துவிட சங்கட சிரிப்போடு பத்திரிகையாளர் சந்திப்பில் போஸ் கொடுத்து கொண்டிருந்தார் துரை சந்திரசேகர்.














