மைதானத்தில் திடீரென தாக்கிய மின்னல்; சுருண்டு விழுந்த வீரர் மரணம்... நெஞ்சை பதற...
Keralam: ஸ்வேதா மேனன் வழங்கும் 'ஓண கிட்' வாங்க மறுக்கும் நடிகைகள்; 'அம்மா' அமைப்பில் தொடரும் விவாதம்
படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பின் அப்போதைய தலைவரான நடிகர் மோகன்லால் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.
அதன்பின்னர் நடந்த தேர்தலில் ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகைகள் அணி வெற்றிபெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற ஸ்வேதா மேனன் தலைமையிலான நிர்வாகத்தில் சில பிரச்னைகள் எழுந்தன.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் பொதுக்குழுவில் நடந்த விவாதத்தைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன் தலைமையிலான நிர்வாகிகள் ராஜிநாமா செய்தனர். ரமேஷ் பிஷாரடி தலைமையில் தற்காலிக நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, ராஜிநாமாவை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் தலைவராகத் தொடருவதாகவும் ஸ்வேதா மேனன் கூறினார். அதற்கு ரமேஷ் பிஷாரடி எதிர்ப்பு தெரிவித்தார். பொதுக்குழுவில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என நிரூபித்த பிறகே வெளியேறுவேன் என்று கூறிய ஸ்வேதா மேனன், ரமேஷ் பிஷாரடியின் தற்காலிகக் குழு விதிகளுக்குப் புறம்பானது எனக் கூறி நீதிமன்றத்தை அணுகினார்.
பழைய நிர்வாகக் குழு தங்களின் ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்காததால் சட்டச் சிக்கல் எழுந்தது. சங்க விதிகளைப் பரிசீலித்த நீதிமன்றம், அடுத்த தேர்தல் நடக்கும் வரை ஸ்வேதா மேனன் மற்றும் குக்கு பரமேஸ்வரன் அடங்கிய பழைய குழுவே தொடரலாம் என இடைக்கால உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக ரமேஷ் பிஷாரடி தற்காலிகக் குழுவிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை நெருங்குவதை ஒட்டி அம்மா அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஸ்வேதா மேனன் தலைமையிலான நிர்வாகக் குழு 'ஓண கிட்' என்ற பெயரில் பரிசுகள் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம், சினிமா நட்சத்திரங்கள் பலர் அந்த ஓணக் கிட்டுகளைப் பெற மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரமேஷ் பிஷாரடியின் தற்காலிகக் குழு தொடர்ந்து செயல்படக் கூடாது என்று மட்டுமே நீதிமன்றம் கூறியுள்ளதே தவிர, ஸ்வேதா மேனன் குழு நிர்வாகத்தைத் தொடரலாம் என்று சான்றளிக்கவில்லை எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம்.

மலையாள நடிகைகளின் வாட்ஸ்அப் குழுவான 'பெண்மக்கள்' குரூப்பில் உள்ள சில உறுப்பினர்கள் ஸ்வேதா மேனனின் செயல்பாடுகளுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகவும், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே ஓண கிட்டுகளைப் பெறச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரமேஷ் பிஷாரடியின் தற்காலிகக் குழுவைத் தடை செய்த நீதிமன்றத் தீர்ப்பு, ஸ்வேதா மேனன் குழுவுக்கு முழு அதிகாரம் அளித்துவிட்டதாக அர்த்தமாகாது என்பதே எதிர்ப்பாளர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.
அம்மா சங்கத்தின் நிர்வாக அதிகாரம் யாருக்குச் சேரும் என்பது தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், அமைப்பில் நிலவும் தொடர் குழப்பத்தைத் தீர்க்க ரெஜிஸ்டாரின் நேரடி நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினர் சில நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர். இதனால் அம்மா அமைப்பில் விவாதம் நீடித்துவருகிறது.


















