தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கை...
தங்க நகை அடமானத்தில் இருந்து மீட்கக் கடன்... பீதியைக் கிளம்பும் புது வகை மோசடி... உஷாரய்யா உஷாரு!
ஒரு காலத்தில் `உங்கள் ATM கார்டு முடக்கப்படும், OTP சொல்லுங்கோ, டிஜிட்டல் அரெஸ்ட்' என்று பொதுமக்களைக் குறிவைத்து ஏமாற்றிய மோசடி கும்பல்கள், இப்போது தங்களின் இலக்கை மாற்றியிருக்கின்றன. காரணம், பொதுமக்கள் பலர் விழித்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால், மோசடிக்காரர்களின் புத்தி மட்டும் அங்கேயே நின்றுவிடவில்லை. காலத்திற்கு ஏற்ப தங்களையும் அப்டேட் செய்து மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அவர்கள் குறிவைப்பது வணிகர்களை.
குறிப்பாக, "நகையை மீட்டு மீண்டும் அடகு வைக்க பணம் தருகிறோம்", "நகையை மீட்டு விற்பனை செய்ய நிதி உதவி" போன்ற சேவைகளை வழங்கும் தொழில்முனைவோர்களை இந்த புதிய மோசடிக் கும்பலின் முக்கிய இலக்காக மாறியுள்ளனர்.
அண்மையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு சாட்சியாக உள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை வடமாநில நபர் ஒருவர் தொடர்பு கொள்கிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.5.60 லட்சம் மதிப்புள்ள நகையை அடகு வைத்திருப்பதாகவும், மே 25ம் தேதியுடன் அடகு காலம் முடிந்ததாகவும், நகையை மீட்க பணம் இல்லாததால் உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறார்.
"நீங்கள் பணம் கொடுங்கள்... நகையை மீட்டவுடன் உங்களிடமே விற்றுவிடுகிறேன். உங்களுக்கு ஏற்ற லாபமும் கிடைக்கும்" என்று நம்பிக்கை விதைக்கிறார்.
இதோடு அவர் நிற்கவில்லை. வங்கியின் அடகு ரசீது, அடையாள ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் கொடுக்கிறார். அவற்றைப் பார்த்தால் சாதாரண மனிதர் மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த வணிகருக்குக்கூட சந்தேகம் வராது.
இந்த ஆவணங்கள் உண்மையானவை என்று நம்பிய அந்தத் தொழிலதிபர், ரூ.5.60 லட்சத்தைக் கொடுத்துவிடுகிறார்.
மறுநாள் காலை, "நான் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அந்த வங்கியில்தான் இருக்கிறேன்... டிமாண்ட் டிராஃப்ட் எடுக்கச் சொன்னார்கள்... அதைத்தான் எடுத்துக் காத்திருக்கிறேன்" என்று கூறி, வரைவோலையின் புகைப்படத்தையும் அனுப்புகிறார்.
எல்லாம் சரியாக நடக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலதிபருக்கு, நேற்று தியாகராய நகர் கிளையில் நகை உள்ளது என்று சொன்னவர் தற்போது ஏன் சைதாப்பேட்டை கிளையில் இருக்கிறார் என்கிற சந்தேகம் எழுகிறது.

உடனே சென்னையில் இருந்த தனது நண்பர்கள் மூலம் வங்கியில் விசாரித்தபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. அந்த பெயரில் யாரும் வங்கிக்கு வரவில்லை. அனுப்பப்பட்ட வரைவோலையும் போலி. அடகு ரசீதும் போலி. ஆதார் அட்டையும் போலி. மொத்தமாக, ஒரு திட்டமிட்ட நாடகம். அதற்குள் ரூ.5.60 லட்சம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எங்கோ போய்விட்டது.
இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட ஏமாற்று நிகழ்வாக மட்டுமே பார்க்கப்படக்கூடாது. இது, வணிகர்களைக் குறிவைத்து செயல்படும் புதிய மோசடியின் முன்னோட்டம்.
இன்றைய தொழில்நுட்ப உலகில் போலி ஆவணங்களை உருவாக்குவது மிக எளிதாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (AI), உயர் தர கிராபிக்ஸ் மென்பொருட்கள், டிஜிட்டல் எடிட்டிங் கருவிகள் ஆகியவற்றின் உதவியுடன், உண்மையையும் போலியையும் பிரித்தறிவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.

எனவே, எந்தவொரு ரசீதையும் கண்ணால் பார்த்த மாத்திரத்தில் நம்பாதீர்கள்; அதை வழங்கிய நிறுவனத்திடம் உறுதிப்படுத்துங்கள். ஒரு அடையாள அட்டையை நம்பாதீர்கள்; அதன் உண்மைத்தன்மையை சரிபாருங்கள். ஒரு தொலைபேசி அழைப்பை நம்பாதீர்கள்; நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்துடன் பேசுங்கள்.
ஒரு மோசடியில் ஏமாந்தால் அது தனிநபரின் இழப்பு மட்டுமல்ல; அதே உத்தியால் நாளை இன்னும் பலர் பாதிக்கப்படலாம். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் மௌனமாக இருப்பதை விட உடனடியாக காவல் துறை மற்றும் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்க வேண்டும்.
மோசடிக்காரர்கள் தினமும் தங்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் விழிப்புணர்வைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறினால், அடுத்த செய்தியின் தலைப்பு நாமாகிவிடலாம். உஷாரய்யா உஷாரு!
- கலியமூர்த்தி
முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!




















