ADMK பொதுச்செயலாளர் ஆகிறாரா S P Velumani? | Edappadi Palanisamy | C V Shanmugam ...
தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போட்டியா?
த.வெ.க அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்புவிடுத்த நிலையில், வி.சி.க சார்பில் அதன் தலைவர் திருமாவளவனே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க., ஐ.யூ.எம்.எல் என 121 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் த.வெ.க கூட்டணிக்குள் நுழைந்துவிட்ட நிலையில் மற்றவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் தி.மு.க கூட்டணியிலேயே தொடர்வதாகவும் அறிவித்தனர்.
ஆனால் 'த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு, தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறோம்' என திருமா அறிவித்ததை அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளே விரும்பவில்லை. எனவே தி.மு.க கூட்டணியா.. த.வெ.க கூட்டணியா.. என இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், "த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற வேண்டும் என்பதுதான் வி.சி.க உயர்நிலைக் குழுவின் விருப்பம். அதேபோல் தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே 75% அக்கட்சியினர் வேண்டுகோள்.
கட்சியினர் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்ட திருமா, கடந்த மே 16-ம் தேதி ஆதவ் அர்ஜுனாவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

த.வெ.க தரப்பில், வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நீங்களே போட்டியிடுங்கள். எனவே நேரடியாக நீங்களே அமைச்சரவையில் இடம்பெற்றுவிடலாம் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் விஜய்யும் இதையே விரும்புகிறார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
கட்சியினரின் விருப்பம், த.வெ.க கோரிக்கைகளைப் பரிசீலித்த திருமாவளவன் கிட்டதட்ட சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், வன்னி அரசுதான் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமாவே அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் எனக் கசியும் தகவல்கள் தமிழ்நாடு அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அவ்வாறு நடந்தால் அவரது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவரும்" என்றனர்.
அமைச்சராகிறாரா திருமாவளவன்.. பொறுத்திருந்து பார்ப்போம்!

















