அரசியல்வாதிகள் - போலீஸ் கூட்டணி: தொழிலதிபர்களை மிரட்டி ரூ.100 கோடி சேர்த்த உ.பி....
``திமுக கூட்டணியில் திருமாவளவன் ஏன் இருக்கிறார்? அவர்களிடம் சமூகநீதியே இல்லை’’ - அன்புமணி
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று இரவு நடைபயணம் மேற்கொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அரூர் பேருந்து நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டின் முதன்மை ஆறு காவிரி. தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறு ஓடுகிறது. வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இரண்டு பெரிய ஆறுகள் ஓடுகின்ற இந்த மாவட்டத்தில் மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை என்றால், எதற்கு முதலமைச்சராக இருக்கிறீர்கள்? எதற்கு அமைச்சர்கள், எதற்கு அதிகாரிகள்? எவ்வளவு வெட்கக்கேடு இது!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் நான்கரை லட்சம் கோடி. அதில், இங்கு நீர் மேலாண்மை திட்டங்களைக் கொண்டுவருவதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது? ஏன் செய்ய மறுக்கிறீர்கள்? தருமபுரி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இன்று வரை... நான்கு மாதங்களில் 50 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குப் போய் இருக்கிறது. நான் கேட்பது, வெறும் 100 டி.எம்.சி தண்ணீரை நீரேற்று மூலமாகக் கொண்டுவந்து தருமபுரி மாவட்டத்தில் இருக்கின்ற 800 ஏரி, குளம், சிற்றணைகளில் நிரப்பினால், உங்கள் நிலத்தில் 40 அடியில் தண்ணீர் கிடைக்கும். இதுதான் திட்டம். இதில் தானே முதலீடு வேண்டும். பிச்சை போடாதே? காலையில் பெண்களுக்கு நீ கொடுக்கின்ற ஆயிரம் ரூபாய், மாலையில் டாஸ்மாக்கிற்குப் போய்விடுகிறது.
இந்த கையில் போட்டு அந்தக் கையில் வாங்கிவிடுகிறீர்கள். இதனால், பெண்கள் முன்னேறப் போகிறார்களா அல்லது அவர்களின் குடும்பம்தான் முன்னேறப் போகிறதா? ஒகேனக்கல் காவிரி-தருமபுரி உபரிநீர் திட்டம் என்ற இந்த ஒரு திட்டம் நிறைவேறினால், தருமபுரி மாவட்டத்தில் 80 விழுக்காடு மக்கள் பயன்பெறுவார்கள். இதுகூடத் தெரியாத ஒரு முதலமைச்சரைப் பார்க்கும்போது வெட்கக்கேடாக இருக்கிறது.
அரூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு என்மேல் என்ன கோபம்? என் மேல் உங்களுக்கு என்ன வருத்தம்? உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்திருக்கிறேன்? மற்ற தொகுதிகளில் எனக்கு வாக்களித்தார்கள். நீங்கள் ஏன் எனக்கு வாக்களிக்கவில்லை? அப்படி நான் என்ன தவறு செய்தேன்? நான் எல்லோருக்கும் பொதுவானவன் தானே.
நான் 5 ஆண்டுகாலம், உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, இந்த மாவட்டத்தில் ஏதேனும் சிறிய பிரச்னை இருந்ததா? அப்படி சிறிய பிரச்னை வந்தாலும் நான் தானே முதல் ஆளாக வந்து தீர்க்கிறேன். குறிப்பாக, நான் கேட்பது, பட்டியலின மக்களுக்கு நான் என்ன தவறு செய்திருக்கிறேன்? பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காரணமே சமூக நீதி.
பா.ம.க கொடியில் மூவர்ண கலர் இருக்கிறது என்றால், மேலே இருக்கும் நீலக்கலர் அம்பேத்கர் கொடுத்தது. தி.மு.க, அ.தி.மு.க உட்பட வேறு எந்தக் கட்சியிலாவது நீலக்கலர் வைத்திருக்கிறார்களா? பா.ம.க-வின் முன்னோடிகள் யார்? அண்ணல் அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ், தந்தை பெரியார். அந்த கொள்கையில்தான் நாங்கள் வந்தோம். எங்களுக்குக் கிடைத்த முதல் அமைச்சர் பதவியை பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலைக்குத் தானே கொடுத்தோம். உணர்வுப்பூர்வமாக அவருக்குப் பதவி கொடுத்தோம்.

எங்கள் மேல் குறைகள் இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், குறைவான குறைகள் உள்ள கட்சி தமிழ்நாட்டில் பா.ம.க ஒன்று தான். அந்தக் குறைகளையும் நான் சரிசெய்து வருகிறேன். மற்றக் கட்சிகளில் வெறும் குறைகள் மட்டுமே இருக்கின்றன. தி.மு.க-வில் மொத்தம் 125 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதில், 23 எம்.எல்.ஏ-க்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 21 எம்.எல்.ஏ-க்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டையும் சேர்த்தால், தி.மு.க-வில் 44 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு சமுதாயங்களுக்கு தி.மு.க ஏதாவது செய்திருக்கிறதா? ஒன்றும் கிடையாது.
எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தான். தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியினுடைய பொதுச்செயலாளராவது பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரா? தி.மு.க கொடுக்குமா? பொதுச்செயலாளரை விடுங்க. ஒரு பொருளாளர் பொறுப்பாவது கொடுப்பார்களா? எங்களைப்போல பட்டியலின மக்களுக்கு செய்ததை வேறு யாரேனும் பட்டியலிட முடியுமா? ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை நிறுவியவர் எங்களின் மருத்துவர் அய்யா. குடிதாங்கியில் பட்டியலினத்தவரின் பிணத்தை தோளில் சுமந்து அடக்கம் செய்தவர் அய்யா. பிறகு எதற்கு எங்களின் மீது கோபம்? அப்படி நான் என்ன செய்துவிட்டேன்?
தி.மு.க-வுக்கு பட்டியலின மக்களின் வாக்குகள் மட்டுமே வேண்டும். இந்த மக்களின் வளர்ச்சியைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. மேடையில் மட்டுமே சமூகநீதி பேசுவார்கள். அப்புறம் எதற்காக தி.மு.க கூட்டணியில் இருக்கிறீர்கள்? திருமாவளவனைப் பார்த்து கேட்கிறேன். இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் பட்டியலின மக்களுக்காக தி.மு.க என்ன செய்தது? ஒன்றே ஒன்றைச் சொல்லுங்கள். சண்டையை மூட்டிவிட்டதைத் தவிர வேறு எதையும் தி.மு.க செய்யவில்லை.

அனைத்துத் தரப்பு மக்களும் தி.மு.க மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தி.மு.க-வை விரட்டியடித்து வீட்டுக்கு அனுப்ப மக்கள் தேர்தலை எதிர்பார்த்துத் தயாராகிவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க-வுக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில், இந்த அலை பேரலையாக மாறி, சுனாமியாக வந்து தி.மு.க என்ற கொடுங்கோல் ஆட்சியை அழித்துவிடும்; ஒழித்துவிடும். நூற்றுக்கு நூறு இது உறுதி. இது எல்லாம் தெரிந்துதான் கொள்ளையோ கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வில் எல்லோரும் கம்பி எண்ணப் போகிறார்கள்.
இந்த ஆட்சியில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சாராயம், கஞ்சா என போதைப்பொருள்களை கொடுத்து உங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை நாசப்படுத்துகின்ற ஸ்டாலின் ஆட்சியை நீங்கள் மன்னிப்பீர்களா என்ன? என்னால் மன்னிக்க முடியாது. அடுத்த தலைமுறை சுயமரியாதையுடன் நன்றாக வாழ வேண்டும். 505 வாக்குறுதிகளை தி.மு.க கொடுத்தது. அதில், வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியிருக்கிறார்கள். அதிலும், சில வாக்குறுதிகளை அரைகுறையாகத்தான் செய்திருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு மறுபடியும் ஆட்சி செய்யத் தகுதி இல்லை. இவர்கள் ஆண்டதுபோதும். உங்களின் உரிமைகளை மீட்டெடுக்க எங்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ என்றார் ஆவேசமாக.
















