America: தப்பிய ஆய்வகக் குரங்குகள்; பிள்ளைகளைக் காக்க குரங்கை கொன்ற தாய்; சர்ச்ச...
"திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - ஜி.கே.வாசன் ஆருடம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் முறையாக இயங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொள்முதல் நிலையங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு வென்றதாகச் சரித்திரம் கிடையாது. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக தி.மு.க கூறும் கருத்துக்களை வாக்காளர்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தி.மு.க, தோல்வி பயம் காரணமாகத்தான் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கின்றனர். பீகாரில் என்.டி.ஏ ஆட்சி மீண்டும் மலர பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாகவே உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டுள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். காரணம், போதைப்பொருள்தான். போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிகார வர்க்கத்திற்குப் பயந்துதான் தி.மு.க கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. தேர்தல் பயத்தின் காரணமாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
வெற்றி பெறும் மாநிலத்திற்கு ஒரு சட்டம், தோல்வி அடையும் மாநிலத்திற்கு ஒரு சட்டம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அது, நடக்காது. பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் தான் கூறின.
தேர்தல் ஆணையம் கூறவில்லை. பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் வெற்றி பெற வியூகத்தை வகுத்து வருகிறார்கள்.
தி.மு.க-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தற்போதைய சூழலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது" என்றார்.


















