`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' - திமுக தட்டி தூக்கிய பின்னணி
திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோதனை செய்த பொழுது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது. ஆனால், அதற்குள் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துச் சென்றுவிட்டனர்.

இது சம்பந்தமாக உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், துவாக்குடி போலீஸார் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு துவாக்குடி காவல் நிலையத்திலிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது.
அதில், துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த காரை மறித்து சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், நந்தகுமாரும், செந்திலும் அந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் இரண்டு பையில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் திருவெறும்பூர் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், பாபாரோ பக்கீர் ராம்கிர் மகன் ரமேஷ் பாபாரோ (54), அனுமன் ராம் மகன் நாராயண ராம் (34) என்றும் தெரிய வந்தது. மேலும், போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபரிடம் மூன்று லட்சம் கள்ள நோட்டுகளை மாற்றியதாகவும், அதன் பிறகு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் சென்று விட்டு வந்தபோது தான் பிடிபட்டதாகவும் கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் 8,37, 800 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
அனைத்தும் 200 ரூபாய் நோட்டுகளாகவும், நூறு தாள்கள் எண்ணிக்கை கொண்ட 41 கட்டுகளும், மற்றொரு கட்டில் 89 தாள்களும் இருந்துள்ளது. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. அதன்பிறகு, அவர்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை முறையாக விசாரித்தால் மட்டுமே இவர்கள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் யாரிடம் கள்ள நோட்டுகளை மாற்றினார்கள், இந்த கள்ள நோட்டுகளை திருச்சியில் மாற்றப் போகிறார்களா அல்லது வேறு எதேனும் மாவட்டங்களில் சென்று மாற்ற போகிறார்களா, இவர்கள் எவ்வளவு கள்ள நோட்டுகளுடன் தமிழகத்திற்கு வந்தார்கள், இவர்கள் கள்ள நோட்டு மாற்றுவது இதுதான் முதல் முறையா அல்லது ஏற்கனவே இதுபோல் தொடர்ந்து பலமுறை மாற்றி வருகிறார்களா என பல கோணங்களில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


















