செய்திகள் :

``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?

post image

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களின் கருத்தை பார்க்கலாம்.

திருப்பரங்குன்றத்தில் உச்சி பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட மகாதீபம்
திருப்பரங்குன்றம்

பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்:

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோத திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். "காலங்காலமாக கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றப்பட்டு வந்த, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்" என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், கோவில் மரபுகளை காக்க வேண்டிய, திருவிழாக்களை முறைப்படி நடத்த வேண்டிய கோவில் நிர்வாகமே, "தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்" என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது.

அதை ஏற்காத உயர்நீதிமன்றம், "தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தது. ஆனாலும், தீபம் ஏற்ற கோவில் நிர்வாகமும், மாநில அரசின் இந்து சமய அறநிலைத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உதவியுடன் தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. அப்படி சென்ற மனுதாரர்களையும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரையும் தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு இல்லாமல் காவல்துறை இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. எதற்கெடுத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று முழங்குகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் காவல்துறை நடத்திய பேயாட்டத்தின் மூலம், திமுக அரசு இந்து விரோத அரசு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளுக்காக பெரும்பான்மையின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி உள்ளது. இந்துக்கள் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள்.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
திருப்பரங்குன்றம்

மற்ற மதத்தினர் மதத்தின் அடிப்படையில் வாக்களிப்பார்கள். எனவே, அவர்களின் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்துக்களை, இந்து கடவுள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவமதித்துள்ளார்.

நடப்பவை எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தகவல் தொழில்நுட்ப யுகம். களத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் நன்கு அறிவார்கள். இந்து விரோத திமுக அரசுக்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை:

திருப்பரங்குன்றத்தில் அமைதியாக நடந்திருக்க வேண்டிய.. கார்த்திகை தீப விழா... தன்னுடைய சுயநலத்திற்காக கூட்டணி கட்சி வெங்கடேசன் சொன்னதைப் போலவே கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட இவ்வளவு போராட வேண்டி இருக்கிறது.

கம்யூனிஸ்டுகளை திருப்தி படுத்த காவலர்களை ஏவி விட்டு பாஜக மற்றும் இந்து முன்னணி சகோதர சகோதரிகளைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாது இந்துக்களின் எழுச்சி திமுகவின் வீழ்ச்சியாக அமையும்.

நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாய் இருந்தால் அது ஒப்புக் கொள்வதும் தங்களுக்கு சாதகம் இல்லை என்றால் நீதித்துறையே கேள்வி கேட்பதும், திமுகவின் கட்டுக்கடங்காத இந்து எதிர்ப்பின் வெளிப்பாடு.

தமிழிசை சௌந்தராராஜன்
தமிழிசை சௌந்தராராஜன்

வேறு எந்த மாநிலத்திலும் இந்துக்கள் இந்த அளவிற்கு போராட வேண்டி இல்லை. திமுக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் 2026 -ல்.

திருப்பரங்குன்றம் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் திருப்பத்தை ஏற்படுத்தும். இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாத வேற்றுமையை விதைத்துக் கொண்டிருப்பது INDI கூட்டணி தான்.

இந்துக்களின் உரிமையை பறிப்பதை அரசாங்கம் சரியாக செயலாற்றுகிறது என்று பாராட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளை கூட வைத்திருப்பதற்கு திமுக மிகப்பெரிய விலையை 2026-ல் கொடுக்க வேண்டி இருக்கும்.

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை:

சனாதன தர்மத்திற்கான DMK அரசின் விரோதம் ஒரு விளக்கத்தின் விஷயம் இல்லை; அது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்து பக்தர்களுக்காக சேவை செய்ய வேண்டிய இந்து மத & தன்னாட்சி அறக்கட்டளை துறை (HR&CE), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றத் தடை செய்த நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மேல் முறையீடு செய்துள்ளது. இது நம் மக்களின் விசுவாசத்தின் இதயத்தையே தாக்கும் செயல்.

அண்ணாமலை

இன்று நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி, பக்தர்கள் மத சார்ந்த வழிபாட்டைச் செய்ய உடல் ரீதியாகத் தடுக்கச் செய்ததன் மூலம், DMK ஆட்சியின் முழுமையான தனியுரிமை அரசியலும், சமாதானப்படுத்தும் (appeasement) போக்கும் வெளிப்படையாகியுள்ளது.

சனாதன தர்மத்தை மீண்டும் மீண்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது?
இந்த அரசுக்கு நீதிமன்ற உத்தரவுகள் மீது எந்த மதிப்பும் இல்லையா?

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றானது திருப்பரங்குன்றம். அதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றிட அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தத் தீர்ப்பு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சாதகமான தீர்ப்பு என்றே கருத வேண்டும். எனவே, இதில் கோயிலுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கியவுடன், அரசுக்கு இதில் மாற்றுக் கருத்து இருந்தபட்சத்தில், உடனடியாக அன்றே இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அதை விடுத்து கோயில் நிர்வாக அதிகாரியை வைத்து முறையீடு செய்ததும், நீதிமன்ற விசாரணையின்போது அவர் பின்வாங்கியதும் புதிராக உள்ளது.

மேலும் மேல்முறையீடு செய்வதென்றால் அங்குள்ள தர்கா நிர்வாகம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் பிரச்னை பெரிதாக எதுவும் எழுந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், 144 தடை உத்தரவு பிறப்பித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் வழக்கம் போல மோட்சத் தூணில் மட்டும் ஏற்றியது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும்.

தமிழ் கடவுள்களில் முதல் கடவுளாகக் கருதப்படும் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி, 144 தடை உத்தரவு விதித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை செய்து பிரச்னையைப் பெரிதாக்கியது ஏற்புடையதல்ல!

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு மதிப்பளித்திருக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பில் பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் தற்போது அவரைச் சிலர் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அரசு அதை வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்திற்குரியது.

Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?

இனி உற்பத்தியாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் 'சஞ்சார் சாத்தி' ஆப்பை ப்ரீ-இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் - இது சமீபத்தில் வெளியான மத்திய அரசின் உத்தரவு. ஏற்கெனவே உற்... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ப. சிதம்பரத்தின் திட்டமும் ஐவர் குழு சந்திப்பும்; அறிவாலயத்தில் நடந்தது என்ன?!

காங்கிரஸ் Vs தி.மு.ககடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு... மேலும் பார்க்க