தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! ...
திருவாரூர் மாவட்டம், மதுரமாணிக்கம் திரியம்பகேஸ்வரர்: ஜோதிர்லிங்கங்களுக்கு இணையான திரியம்பகபுரம்!
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. காலவெள்ளத்தில் எதிர்கொண்டு நிலைத்து நின்றவை 1307 பாடல்களே.
அருணகிரிநாதர் முருகப்பெருமான் கோயில்கொண்டுள்ள தலங்களுக்கு எல்லாம் சென்று முருகப்பெருமானைத் தரிசித்துப் பாடியுள்ளார். அவற்றுள் பல தலங்களின் பெயர் இருந்தாலும் அவை எங்கிருக்கிறது என்கிற தகவல்கள் இல்லாமல் இருந்தன.
திருப்புகழைப் பாடுவதிலும் திருப்புகழைப் பதிப்பிப்பதிலும் ஆர்வம் கொண்ட திருப்புகழ் அமுதன் என்று போற்றப்படும் வலையப்பேட்டை கிருஷ்ணன் திருப்புகழ் தலங்களைத் தேடிப் பதிவு செய்யும் ஆய்வைத் தொடங்கினார்.
அப்படி அவர் திருப்புகழ் தலங்களைத் தேடி அலைந்த அனுபவங்களை சக்தி விகடனில், 'கண்டுகொண்டேன் கந்தனை' என்கிற தலைப்பில் தொடராகவும் எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட அன்பர் சுட்டிக்காட்டிய ஒரு அற்புதத் திருப்புகழ் தலமே திரியம்பகபுரம்.

இந்தத் தலத்தில் அருளும் முருகப்பெருமானை, ‘கனமுறும் த்ரியம்பகபுர மருவிய கவுரிதந்த (அ)றுமுக என இரு கழல் பணிந்து நின்றமரர்கள் தொழவல பெருமாளே’ என்று அருணகிரிநாதர் தம் திருப்புகழில் போற்றிப் பாடியிருக்கிறார்.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில், பெரும்பண்ணையூரிலிருந்து ஒரு கி.மீ. தூரத்திலும் சேங்காலிபுரத்திலிருந்து ஒரு ஒரு கி.மீ. தூரத்திலும் திரியம்பகபுரம் கோயில் அமைந்துள்ளது.
நாச்சியார் கோயில், நன்னிலம் வழியில் திருவிடைச்சேரி எனும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. பயணித்தால் திரியம்பகபுரத்தை அடையலாம்.
முன்னொருகாலத்தில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களைத் தரிசிக்க ஆவல் கொண்டு மகாலிங்கம் என்ற அன்பர் மகாராஷ்டிரத்தில் உள்ள ‘திரியம்பகம்’ எனும் தலத்துக்குச் சென்றார். தாம் செய்து வந்த தொழிலுக்காக வாங்கிய கடன் தொல்லையும், வர வேண்டிய பாக்கியும் அவரை மனநிம்மதியில்லாமல் சஞ்சலப்பட வைத்தது.
இந்நிலையில் திரியம்பகம் சென்று திரியம்பகேச்வரரைத் தரிசித்துவிட்டு வரும் போது அங்கே முகலிங்கம் ஒன்றை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்யத் தொடங்கினார். நாளாக ஆக ஏதோ ஒரு வகையில் அவருக்கு மன நிம்மதி கிடைத்தது.
ஒருநாள் இரவு அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றி, ‘`திருவாரூர் பக்கத்தில் ‘முக்கண்ணன் ஊர்’ என்று சிவபிரானை தரிசித்து விட்டு வா. உனது பிரச்னைகள் தீரும்” என்று தெரிவித்தாராம். அது முதல் தாம் சந்தித்த நண்பர்கள், கோயில் குருக்கள் என்று பலரிடமும், ‘முக்கண்ணன் ஊர் என்பது எது?' என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே ஒருநாள் அவர் நண்பருடன் திருப்புகழ் பஜனை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு முதியவரிடம் இதைப்பற்றிக் கேட்டபோது அவர் சற்றும் யோசிக்காமல், ‘முக்கண்ணன் ஊர் என்றால் அது திரியம்பகபுரம்தான். அம்பகம் என்றால் கண். திரியம்பகம் என்றால் முக்கண்' என்று கூறி திரியம்பகபுரம் தலக்குறிப்பை திருப்புகழ்ப் புத்தகத்தில் காட்டியுள்ளார்.
ஆனால் அந்தத் தலத்தில் சென்று பார்த்தால் ஆலயம் முழுவதும் சிதிலமடைந்து, திரியம்பகேஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்ட இறைவனின் சிவலிங்க மூர்த்தம் மட்டும் சதுர வடிவ ஆவுடையாருடன் முட்புதர் ஒன்றின் மேட்டின் மீது இருந்தது. மற்றபடி வேறு எந்த தெய்வ மூர்த்தங்களும் காணப்படவில்லை.
அதன்பின் அந்தத் தலம் மீண்டும் புதுப்பொலிவு பெறவேண்டும் என்ற ஐயனின் திருவுள்ளப்படி, அன்பர்களின் பெரும் முயற்சியால் புனரமைக்கப்பட்டது. ஆலயத்தில் ஐயன் திரியம்பகேஸ்வரருடன், அம்பிகை அருள்மிகு சௌபாக்ய கௌரி ஆகியோர் பிரதான தெய்வங்களாக எழுந்தருளினர்.
விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், அருணகிரிநாதர் ஆகியோருக்கும் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டு மகா மண்டபத்துடன் கோயில் அழகுற அமைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான திரியம்பகம் சென்று வழிபட்ட பலனை அருளக்கூடியது இந்தத் திரியம்பகபுரம். மூன்று கண்களை உடையவர் என்ற பொருளில் சிவனாருக்கு இந்தத் திருப்பெயர் அமைந்தது. தமிழகத்தில் திரியம்பகபுரம் என்ற பெயரில் அமைந்திருக்கும் தலம் இது ஒன்றுதான் என்கிறார்கள்.
தன்னை நாடிவந்து தரிசிக்கும் அனைவரின் வாழ்விலும் நல்ல மாற்றங்களைத் தருகிறார் திரியம்பகேஸ்வரர். அன்னை சௌபாக்ய கௌரியைத் தரிசனம் செய்தாலே மனத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடிவிடும். வீட்டில் மங்கலங்கள் தொடர்ந்து நிகழும் என்கிறார்கள் பக்தர்கள்.

அதற்கேற்ப திருப்புகழ் பஜனையில் முதியவரின் வழிகாட்டுதலின்படி, இத்தலத்துக்கு வந்து திரியம்பகேஸ்வரரை மனமுருக வழிபட்ட, அன்பர் மகாலிங்கத்தின் வாழ்விலும் பல நன்மைகள் விளைந்தன. அவருக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் கிடைக்கப் பெற்று, மிகுந்த மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அடைந்தார்.
இப்படிப்பட்ட அருணகிரிநாதர் பாடிப்பரவிய இந்தத் தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை வந்து வழிபட்டுச் செல்லுங்கள். திரியம்பகேஸ்வரர் உங்கள் வாழ்விலும் அற்புதம் நிகழ்த்துவார். தற்போது அந்த ஊருக்கு, 'எருமைத்தலை' என்கிற பெயரும் வழங்கப்படுகிறது.




















