செய்திகள் :

தென்காசி வழக்கறிஞர் கொலை; குற்றவாளியை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்!

post image

தென்காசி மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் நடுபல்க் சிக்னல் அருகே ஊர்மேல் அழகியான் பகுதியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவரின் சட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வைத்து நேற்று (3.12.2025) காலை 10.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து, அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை சரமாரியாக வெட்டித் தாக்கிக் கொடூரமாகப் படுகொலை செய்த நிகழ்வு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அலுவலக அறையில் இருந்த முத்துக்குமாரசாமியை கூர்மையான ஆயுதத்தால் பல இடங்களில் வெட்டிய குற்றவாளி, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வழக்கறிஞர்கள் பேரணி

வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பல்வேறு சொத்து தகராறு வழக்குகளில் ஈடுபட்டு வந்ததாகவும், அதில் ஏதோ ஒரு வழக்கு தொடர்பாக இந்தப் படுகொலை நடந்திருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், சரியான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொடூரப் படுகொலையை அடுத்து, நேற்று (3.12.2025) மாலை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தென்காசி நகரில் கொலைக் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று (4.12.2025) காலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 300க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து, கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்தனர். தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட பார் கவுன்சில் உறுப்பினர்கள் என பலரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஆட்சியர் பேச்சுவார்த்தை

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை சந்தித்து கோரிக்கைகளை வைத்தனர். அதில் கொலைக் குற்றவாளியை 24 மணி நேரத்திற்குள் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். குற்றவாளி மீது குண்டாஸ் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையில் பரிந்துரை செய்ய வேண்டும். வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசியதாவது: "வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி படுகொலை செய்யப்பட்டது மிகவும் வருத்தமான விஷயம். குற்றவாளியைக் கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

திருச்சி: ``இருட்டில் சந்தை, திருட்டு ஆடுகளை விற்க ஏற்பாடு?'' - போராட்டத்தில் குதித்த விசிக-வினர்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை காலம் காலமாக நடைபெறுவது வழக்கம். அதிகாலை 3 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தை மதியம் 2 மணி வரை நடைபெறும். இங்கு, திருச்சி மாவட்டத்தை ச... மேலும் பார்க்க