``நடந்தே பிரசாரம், காரிலேயே சாப்பாடு, 2 மணி நேர தூக்கம்; வெற்றிக்கொடி நாட்டும் செந்தில்பாலாஜி!''
கொங்கு மண்டலம் இந்தமுறை தங்கள் வசப்படும் என்று உறுதியாக நம்புகிறது திமுக தலைமை. காரணம், செந்தில் பாலாஜி. அவரின் ஓயாத களப்பணியும், அசராத உழைப்பும்தான் அந்த நம்பிக்கைக்கான ஆதாரமாக இருக்கிறது. `மிஸ்டர் பழனிசாமி செந்தில் பாலாஜி கோவைக்கு அவரா வரல. நான்தான் வர வெச்சிருக்கேன். கரூரில் திமுகவின் வெற்றி கன்ஃபார்ம், கோவையிலும் வெற்றியை உறுதி செய்யத்தான் நான் அவருக்கு கோவையில் டியூட்டி போட்ருக்கேன்' என்று மு.க.ஸ்டாலின் தில்லாக சவால் விடுவதிலிருந்து, திமுக தலைமை செந்தில் பாலாஜியை எவ்வளவு நம்புகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதைமெய்பிக்கும் வகையில் இருக்கிறது செந்தில் பாலாஜியின் களப்பணி. கடந்த தேர்தலில் 10 தொகுதியும் அதிமுக வென்ற கோவையில் தற்போது திமுகவின் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்திருக்கிறது.

வீடுவீடாக பயணம்....
வேட்பாளர்கள் பலரும் சொகுசு வாகனங்களில் பிரசாரம் செய்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில்பாலாஜி தன் தொகுதியில் பெரும்பாலும் நடந்தே பிரசாரம் செய்திருக்கிறார். செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்கான வரவேற்பு என்பது பலமாக இருக்கிறது. ' வீடுவீடாக போய் ஓட்டுக் கேட்கும்போதுதான் மக்களிடம் நெருக்கமாக பழக முடியும். அவர்கள் குறைகளை கேட்க முடியும். அதுமட்டுமல்ல, எல்லோர் வீட்டிலும் ஆரத்தி எடுக்கிறாங்க. ஆரத்தி தட்டோட பெண்கள் கீழே நிக்கும்போது, நாம் வேனில் போனால் நல்லா இருக்காது. அவங்க அன்புக்கு மதிப்பு கொடுக்கணும்' என்று அவர் கொடுக்கும் விளக்கம் தொகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

தன் தொகுதி மட்டுமல்லாது தன் பொறுப்பில் உள்ள மற்ற தொகுதிகளையும் பலப்படுத்த வேண்டியிருப்பதால் கரூர், நாமக்கல் என மேற்கு மண்டலத்தின் பல மாவட்டங்களுக்கும் இரவு பகல் பயணித்துக்கொண்டிருக்கிறார். `இவரால் எப்படி முடிகிறது?' என்று எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் இருக்கிறது அவரது தேர்தல் பணி. அதுகுறித்து அவரிடம் கேட்டால், `என்னை நம்பி பொறுப்பு கொடுத்திருக்காங்க. அதை முடிக்கணும்ல.' என்று கூலாக பதில் சொல்கிறார்.
அவர் தீவிரமாக பணியாற்றுவதால் அவர்மீது எதிர்க்கட்சியினர் கடுமையான விமசர்னங்களை முன்வைக்கின்றனர். குறிப்பாக, கரூர் சம்பவத்தால் அங்கே வெற்றிபெற முடியாது என்று பயத்தில் இங்கே வந்துவிட்டார் என்பதில் தொடங்கி பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எந்த விமர்சனத்தையும் ஒதுக்கித்தள்ளாமல் எல்லாவற்றும் பத்திரிகையாளர்களிடம் தெளிவாக பதில்கொடுத்துவிட்டு மக்களை சந்திக்கச் சென்றுவிடுகிறார்.

பொறந்த வீடு, புகுந்த வீடு...
செந்தில்பாலாஜியை வீழ்த்தவேண்டும் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் பல்வேறு அஸ்திரங்களுள் ஒன்று அவர் வெளியூர்க்காரர் என்று பிரசாரம் செய்வது. ஆனால், அதனை முறியடிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் `செந்தில்பாலாஜிக்கு கரூர் பொறந்த வீடு என்றால் கோவை புகுந்த வீடு மாதிரி. கரூரை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றாரோ அதேபோல, கோவையையும் பார்த்துக்கொள்வார்' என்று பதில் கொடுத்துள்ளார். சமீபத்தில் கோவையில் பிரசாரம் செய்த உதயநிதியும் அதே கருத்தைச் சொல்ல எதிர்க்கட்சியினரின் பிரசாரம் தவிடுபொடியாகியுள்ளது. இன்னொரு பக்கம் செந்தில்பாலாஜியும், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு பூர்வீக ஊர் கோவையா? அவரும் வெளியூரிலிருந்து இங்கே வந்து செட்டில் ஆனவர்தானே... அவர் கொஞ்சம் முன்வே வந்துவிட்டார் நான் கொஞ்சம் லேட்டாக வந்திருக்கிறேன். இதுவும் என் ஊர்தான்" என்று சொல்ல மக்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

``ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத போதிலும்...."
செந்தில்பாலாஜியின் வியூகமும் பிரசாரமும் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் அதற்கு வலுசேர்க்கும் வகையில் இருக்கிறது திமுக அரசு கோவைக்கு செய்துள்ள திட்டங்கள். செம்மொழி பூங்கா, பெரியார் அறிவுலம், ஜிடி நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம், தங்க நகை பூங்கா, பில்லூர் 3-ம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதிய தொழில் பூங்காக்கள்னு ஏராளமான திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வதுடன், ``கடந்த முறை கோவையில் நாங்கள் பத்து தொகுதியில் ஒருதொகுதிகூட வெல்லாத போதிலும் கோவைக்கு சிறப்பு கவனம் எடுத்து முதலமைச்சரிடம் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். கோவையில் நாங்கள் வென்றால், உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வருடத்துக்கு 5,000 கோடி ரூபாய் வீதம் 5 வருடத்தில் ரூ 25,000 கோடி அளவுக்கான நிதியை கொண்டு வந்து கோவையை ஹை-டெக்கான நகரமா மேம்படுத்தணும் என்பது என் கனவு'' என்கிறார் செந்தில்பாலாஜி.

அத்துடன் நிறுத்திக்கொள்வதில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் வாக்கு கேட்டுச் செல்லும்போது அங்கிருக்கும் பிரச்னைகளை கவனமாகக் கேட்டுக்கொள்கிறார். எந்தப் பகுதியில் சாக்கடை பிரச்னை இருக்கிறது, எந்தப் பகுதியில் சாலை பிரச்னை இருக்கிறது. யாருக்கெல்லாம் பட்டா தேவை எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டு, மீண்டும் நம்ம ஆட்சி அமைந்ததும் நிச்சயமா பண்ணித் தர்றோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார். அதை நம்பும் மக்கள், `உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு' என்று உறுதியுடன் சொல்கிறார்கள். கோவையின் நம்பிக்கையாக செந்தில்பாலாஜியை பார்க்கிறார்கள்!















