TN Elections 2026: திமுக VS அதிமுக VS நாம் தமிழர் VS TVK; Whose Manifesto Best? ...
நாகர்கோவில்: "தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசி வருகிறார்" - ஸ்டாலின் பேச்சு
நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைவரும் சூரிய உதயத்தைப் பார்க்க மக்கள் எல்லாம் வரக்கூடிய மாவட்டம் கன்னியாகுமரி.
அப்படிப்பட்ட மாவட்டத்தில் உதயசூரியன் ஆட்சி உதிக்க வேண்டும் என்று ஆதரவு கேட்டு உங்களையெல்லாம் நான் பார்க்க வந்திருக்கிறேன். குமரிக்கு நான் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் ஓடோடி வந்து பார்த்திருக்கிறேன்.
அதேபோல் 2025 புது வருடம் அன்று, அதற்கு முதல் நாளே நம்முடைய திருவள்ளுவர் சிலையினுடைய வெள்ளி விழா கொண்டாட இங்கேதான் நான் வந்தேன். இப்போது கூட கடந்த பிப்ரவரி மாத கடைசியில் நாகர்கோவிலுக்கு நான் வந்தேன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்க ரெடியா? திராவிட மாடல் 2.0-க்கு குமரி மாவட்டம் ரெடியா? 200 தொகுதிகளுக்கு மேல வெற்றி பெற்று திராவிட மாடல் நல்லாட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றால் குமரி மாவட்டத்துல இருக்கக்கூடிய எல்லா தொகுதிகளிலும் நம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆகவேண்டும்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆர். மகேஷ், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஆஸ்டின் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோருக்கு கை சின்னத்திலும், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆர்.செல்வசுவாமி-க்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் உங்களுடைய வாக்குகளை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குமரிக்கு சுற்றுலா பயணிகளைச் சுண்டி இழுக்கக்கூடிய வகையில வள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையும் இணைக்க அமைக்கப்பட்டிருக்கக்கூடிய கண்ணாடிப் பாலம். குளச்சல், பத்மநாபபுரத்தில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகஸ்தீஸ்வரம் வட்டத்துல தொழில்நுட்பப் பூங்கா விரைவில் அமைய உள்ளது.
வாணியக்குடியில புதிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் குளச்சல் துறைமுகம் விரிவாக்கத்திற்கு அடிக்கல் நான் நாட்டியிருக்கிறேன். இனி மீன்பிடித் தடைக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை மாதம் 8000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாய் வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை மாதம் 6000 ரூபாயில் இருந்து 9000 ரூபாயாக வழங்கப்படும். ஆனால், வெளியுறவுக் கொள்கையை கையில வைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, கடல் கடந்து மீன்பிடிக்கப் போகும் நம் மீனவர்களைக் காக்கத் தவறிவிட்டது.
வெளியுறவுக் கொள்கையில தோல்வி அடைந்துள்ளது. சிறிய அண்டை நாடுகளிடம் கூட இந்தியாவுக்குச் செல்வாக்கு இல்லாத நிலையை பிரதமர் மோடி உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைத்து பா.ஜ.க அரசு அக்கறை செலுத்துவதில்லை. அதன் விளைவுதான் நம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல்கள் நடத்திக்கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் என்ற பலவீனமான பிரதமர் ஆளுகிற காரணத்தால்தான் நம்ம மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது, பலமான பிரதமராக நான் வந்தால் நடக்காது என மோடி சொன்னார். இப்போதான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஏற்றுக்கொள்வாரா?
இப்போது புதிதாக ஒரு பிரச்னை கிளம்பியிருக்கிறது. சிறுபான்மையின மக்களை, குறிப்பாக கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து வெளிநாட்டு நிதிப் பங்களிப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் இந்த ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன். இரண்டு நாள் முன்பே இதைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.
நேற்று மீண்டும் பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்தச் சட்டத் திருத்தத்தால் இந்தியா முழுக்க கிறிஸ்தவச் சமுதாய மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். சான்றுகளைச் சமர்ப்பிப்பதில் சிறிய தாமதம் உள்ளிட்ட பிற காரணங்களைச் சுட்டிக்காட்டி ஒரு அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அவர்களிடம் உள்ள நிதியையும் சொத்தையும் பறிக்க இந்தக் கொடுங்கோல் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சொத்து என்றால் மக்களுக்குச் சேவையாற்றுகிற மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள் இவற்றைதான் பறிப்பார்கள். இதுதான் மோடியின் உண்மையான முகம். மதவெறிப் பார்வையோடு மனிதநேயச் செயல்பாடுகள் மேல் தொடுக்கக்கூடிய இந்தத் தாக்குதல் ஒரு மதத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே எதிரானது.
நாடாளுமன்றமே முடங்கக்கூடிய அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன சொல்லுங்க பழனிச்சாமி அவர்களே. இந்தச் சட்டத் திருத்தத்தை பழனிச்சாமி நீங்க ஆதரிக்கிறீங்களா? இல்லை குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு சட்டத் திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்குத் துரோகம் பண்ணியது போன்று கிறிஸ்தவ மக்களுக்குத் துரோகம் பண்ணத் தயாராகிவிட்டீங்களா? சிறுபான்மை மக்களை கண் இமை காப்பது போல் அ.தி.மு.க காக்கும் எனப் பழனிசாமி நேற்று ஒரு கூட்டத்தில் சொல்கிறார்.
இப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? அ.தி.மு.க என்ற கட்சி பா.ஜ.க-வின் கொத்தடிமைக் கூட்டமாக மாறிப் போயிருக்கிறது. ஷார்ப்பாக சொல்லவேண்டுமானால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்ற நேம் போர்டை காப்பாற்றிக்கொள்ள அவர் டெல்லிக்குக் காவடி தூக்குகிறார்.

நேற்று நெல்லை பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் குறித்த பழனிசாமியின் தரங்கெட்ட பேச்சைக் கண்டித்து நான் பேசியிருந்தேன். அதைக் கேட்டு தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய கட்சிக்காரர்கள் போனிலும், சமூக வலைத்தளங்கள்லயும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துட்டாங்க. 'எங்க மனசுல இருந்ததைப் பேசிட்டீங்க, எங்க மனசுல என்னென்ன இருந்துச்சோ அதெல்லாம் பேசிட்டீங்க தலைவரே' எனச் சொன்னார்கள்.
மறைந்த தலைவர்களைப் பற்றி இப்படித் தவறாகப் பேசுவது அரசியல் மாண்பு கிடையாது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரை எதிர்த்து, அவரது ஆட்சியின் குறைகளை எதிர்த்து நாம் நேரடியாக அரசியல் செஞ்சிருக்கோம். ஆனால் அவர் மறைந்த பிறகு உச்சபட்ச அரசியல் நாகரிகத்தை நாம இன்றைக்கும் கடைபிடிச்சுக்கிட்டு இருக்கோம்.
திண்ணையில கிடந்தவனுக்குத் திடுக்குன்னு யோகம் அடிச்ச மாதிரி பழனிசாமிகிட்ட இந்த நாகரிகத்தை எதிர்பார்க்க முடியுமா? தமிழ்நாட்டு மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பாங்களே தவிர, வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டாங்க. 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள்லயும் கொடுத்த வாக்குறுதிகளை அ.தி.மு.க நிறைவேற்றவில்லை.
அந்த வாக்குறுதிகளை நான் வாசித்தால் அது பழனிசாமிக்கு ஞாபகம் வராது. ஆனால், தி.மு.க வாக்கு கொடுத்தால் எப்படியாவது செய்து முடிப்போம். அப்படி இந்தத் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார்தான் தி.மு.க தேர்தல் அறிக்கை. ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இனி மாதம் 2000 ரூபாயாக வழங்கப்படும்.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித் தொகை இனி 1000-த்திலிருந்து மாசத்துக்கு 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என எல்லா உதவித் தொகைகளும் டபுள் மடங்காக உயர்த்தி வழங்கப்பட இருக்கின்றன. தி.மு.க-வின் நட்சத்திரப் பரப்பரையாக 8000 ரூபாய் கூப்பன் மாறியிருக்கிறது. நாங்கள் சொன்னதைச் செய்வோம். ஏன், செய்வதைத் தான் சொல்வோம்.
தமிழ்நாட்டை எப்படிப்பட்ட ஆபத்து சூழ்ந்திருக்கிறது என நான் சொல்லியிருக்கிறேன். இதிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேணும் என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்தாகணும். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா? இது தர்ம யுத்தம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அமையவிருக்கக் கூடிய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கக் கூடிய வகையான ஒரு ஆட்சியை வழங்குவோம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "இல்லத்தரசி கூப்பன் அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் ரொம்ப பிரமாதமான வரவேற்பு இருக்கிறது. தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் இல்லத்தரசி திட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
நாங்கள் பெரும்பாலான தொகுதியில் ஜெயிக்க மாட்டோம் எதிர்கட்சிகள் என சொல்வதாக நீங்கள் கேட்கிறீர்கள். அதனால் தான், தோல்வி பயத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இப்போது தரக்குறைவாகப் பேசி வருகிறார்" என்றார்.












