செய்திகள் :

கருணாநிதி, ஜெயலலிதா ராஜினாமா; அதிமுகவின் அசுர பாய்ச்சல், அனுதாப அலையால் வீழ்ந்த திமுக | 1991 ஆடுபுலி

post image

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமா? என்று அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதற்கு முன்னதாக, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரண்டிலும் வெற்றி பெற்றதும், ஒரே தேர்தலில் வெற்றி பெற்று, ஒரே நேரத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ததும் 1991 சட்டமன்றத் தேர்தல் வரலாற்றின் அரசியல் ஆடுபுலி ஆட்டங்களில் நடந்தேறியது.

இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்ட, நெருக்கடி நிலையின் தொடர்ச்சியாக, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையிலான மத்திய அரசால், 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது. அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

எம்ஜிஆரின் மரணம் வரையிலும் அதிமுக ஆட்சி தொடர்ந்தது. வீழ்த்த முடியாத கட்சியாக அதிமுக விளங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என்று திமுக வெற்றியை ருசித்தாலும், முதலமைச்சராக எம்ஜிஆரையே மக்கள் தேர்வு செய்தனர். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று ஆனது. ஜானகி அணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் ஆளுநரின் அறிக்கையின் பேரில் தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டது. ஜெயலலிதா அணிக்கு மத்திய அரசும், பிரதமர் ராஜீவ் காந்தியும் ஆதரவாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அடுத்து வந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல், காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்

ஓராண்டு காலம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் ஆட்சியின் மூலம் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களையும், மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துச் சொல்லி காங்கிரஸ் கட்சி மீண்டும் காமராஜர் ஆட்சி முழக்கத்தை முன்வைத்தனர். 1967ல் விட்டதைப் பிடிக்க காங்கிரசும், 1977ல் விட்டதைப் பிடிக்க திமுகவும் 1989ல் தீவிரமாக களத்தில் இருந்தனர்.

கருப்பையா மூப்பனார் முதலமைச்சர் ஆனால், தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்று மறைமலைநகர் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் ராஜீவ் காந்தி உறுதி கொடுத்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சியையும், ஓராண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் ஆளுநரின் செயல்பாடுகளையும் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர். அதிமுகவில் உட்கட்சி குழப்பங்கள் தொடர்ந்தது.

1989 ஜனவரி 21 அன்று நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுக மாபெரும் வெற்றி பெற்றது. 202 இடங்களில் போட்டியிட்ட திமுக 146 இடங்களில் வென்றது, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15, ஜனதா தளம் 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 4, தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் 1 தொகுதிகளில் வென்றன. அதிமுக ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவர் ஆனார் ஜெயலலிதா. துறைமுகம் தொகுதியில் கருணாநிதி, போடி தொகுதியில் ஜெயலலிதா, பாபநாசம் தொகுதியில் கருப்பையா மூப்பனார் வெற்றி பெற்றனர்.

எம்ஜிஆர் வென்ற ஆண்டிபட்டி தொகுதியில் ஜானகி ராமச்சந்திரனால் வெற்றிபெற முடியவில்லை. அதிமுக ஜானகி அணியில் சேரன்மகாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியன் மட்டுமே வென்றார். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று களம் கண்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் மட்டுமே வென்றது.

மாற்றம் வேண்டுமென முழக்கமிட்ட சிவாஜி கணேசன் கட்சி அத்தேர்தலில் காணாமல் போனது. திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட தமிழக முன்னேற்ற முன்னணி தலைவர் சிவாஜி கணேசன் கூட வெற்றி பெற முடியவில்லை.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஜெயலலிதா, ஜானகி இருவருமே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தனர். ஆனால், பல்வேறு தரப்பினர் முயற்சியால் 1989 பிப்ரவரி 10 அன்று அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தனர். அதிமுகவிற்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அடுத்த ஒரு மாதத்தில், மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக திமுக இருந்த போதிலும், இடைத்தேர்தலில் எதிர்கட்சியான அதிமுக வென்றது. இந்த இடைத்தேர்தலில் சேலை, வேட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால், அதிமுகவினருக்கு இடைத்தேர்தல் வெற்றி உற்சாகத்தைக் கொடுத்தது. ஜெயலலிதாவிற்கு நம்பிக்கையை அதிகரித்தது.

ஜெயலலிதா தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறிய நிலையில், சசிகலா கணவர் நடராஜன் பாதுகாத்து வைத்திருந்த அந்தக் கடிதம் 1989 மார்ச் 19 அன்று திடீரென பத்திரிகைகளில் வெளியானது. கடிதம் வெளியாக கருணாநிதிதான் காரணமென்று புகார் சொன்னார் ஜெயலலிதா.

அடுத்த சில நாட்களில் சட்டமன்றம் கூடியது. 1989 மார்ச் 25 சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி நிதி நிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கினார். எதிர்கட்சி வரிசையில் இருந்து, “பட்ஜெட் உரையைப் படிக்கக் கூடாது” என்று ஜெயலலிதா குரல் எழுப்பினார்.

எதிர்கட்சி உறுப்பினர்களில் ஒருவர் முதலமைச்சர் கருணாநிதி கையில் இருந்த நிதி நிலை அறிக்கையை பிடித்து இழுத்தார். முதலமைச்சர் கருணாநிதியின் முகத்தில் குத்துவதற்கும், தாக்குவதற்கும் அதிமுக உறுப்பினர்கள் முயன்றதாக, முதலமைச்சரின் மூக்கு கண்ணாடி உடைந்ததாக திமுக உறுப்பினர்கள் புகார் கூறினர்.

எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்து விட்டதாக அதிமுக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. காங்கிரஸ் தலைவர்களும் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்தனர். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமைந்தது.

1989 நவம்பர் 22 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு தொகுதி தவிர 37 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. திமுக அங்கம் வகித்த தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத திமுகவிற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முரசொலி மாறன் அமைச்சர் ஆனார்.

கருணாநிதி
கருணாநிதி

ஆனால், மத்தியில வி.பி.சிங் அரசு நீடிக்கவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியது, அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சனைகள் வி.பி.சிங் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியது. ஆளுங்கட்சியின் 54 எம்பிக்கள் சந்திரசேகர் தலைமையில் தனியாகப் பிரிந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்ற வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்தார். காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த 11 அதிமுக எம்பிக்களின் ஆதரவு பிரதமர் சந்திரசேகருக்கு தேவைப்பட்டது.

இதற்கிடையே, இலங்கையிலிருந்து சென்னை வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்கச் செல்லாத முதலமைச்சர் கருணாநிதி, ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து கொண்டே ரகசியமாக இலங்கை சென்று வந்த வைகோ, ஒடிசாவில் இருந்து ரகசியமாக சென்னை வந்த பத்மநாபா படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் திமுக அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியது. விடுதலைப் புலிகளை ஒடுக்க முதலமைச்சர் கருணாநிதி தவறிவிட்டார் என்று குற்றச்சாட்டுடன், 1991 ஜனவரி 30 அன்று திமுக அரசு கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட போது, அனுதாப அலையால் மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனது போல, கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்ட போதும், தமிழக மக்களிடையே அனுதாப அலை உருவானது. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும், கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர் திமுக தொண்டர்கள்.

இதற்கிடையே மத்திய அரசுக்கு காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் பிரதமர் சந்திரசேகர் ராஜினாமா செய்தார். காபந்து அரசாக மாறியது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் உடன், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அதிமுக, காங்கிரஸ் கூட்டணியே தொடர்ந்தது. சென்னை மெரினா கடற்கரையில், 1991 ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் ஒரே மேடையில் தோன்றி எழுச்சியுரை ஆற்றினர்.

ராஜிவ் காந்தி
ராஜிவ் காந்தி

1991 மே 20 அன்று முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. மூன்று கட்டமாக நடந்த தேர்தலில், மே 26 இறுதிக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு அறிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிமுக 166 இடங்களிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். திமுக 168 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள சட்டமன்றத் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தனர்.

காங்கேயம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தார். திமுக தலைவர் கருணாநிதி துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார். காங்கேயம் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறி, பர்கூர் தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட்டார். ஒரே தேர்தலில் காங்கேயம், பர்கூர் இரண்டு தொகுதிகளிலும் ஜெயலலிதா களம் கண்டார். அதிமுகவில் இருந்த பி.எச். பாண்டியன், திருநாவுக்கரசர் இருவரும் திமுக கூட்டணி வேட்பாளர்களாக இருந்தனர். முதன் முதலாக மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் களம் கண்டது. சட்டமன்ற தேர்தல் களம் திமுகவிற்கு சாதகமாகவும், நாடாளுமன்றத் தேர்தல் களம் காங்கிரசுக்கு சாதகமாகவும் இருப்பதாக தமிழக அரசியல் நிலவரம் எடுத்துக் காட்டியது.

இந்தியா முழுவதும் தேர்தல் பரப்புரைக்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த ராஜீவ் காந்தி, இந்திராகாந்தியின் நெருங்கிய நண்பரான ஸ்ரீபெரும்புத்தூர் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதற்காக சென்னை வந்தார். 1991 மே 21 அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, கருப்பையா மூப்பனார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்திக்கு வரவேற்பளித்தனர். சென்னையிலிருந்து, போரூர், பூந்தமல்லி வழியாக தொண்டர்களை சந்தித்து வாக்குகேட்டு விட்டு, இரவு 10 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட வளாகத்திற்கு வந்தடைந்தார் ராஜீவ்.

கூட்டணிக் கட்சித் தலைவரான ஜெயலலிதா அந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி, கருப்பையா மூப்பனார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் மரகதம் சந்திரசேகர் உள்ளிட்டோர் சற்றுத் தொலைவில் தலைவரை வரவேற்க காத்திருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராத பெருந்துயரமாக மனித வெடிகுண்டு வெடித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. இலங்கை பிரச்சனையை முன்வைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக அன்றே செய்தி பரவியது. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று ஆட்சி கலைக்கப்பட்ட திமுக கடும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது. திமுகவினரின் வீடுகளும், சொத்துக்களும் சூறையாடப்பட்டன. திமுக நிர்வாகிகளும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராஜீவ் படுகொலை சம்பவம் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தையும் அப்படியே புரட்டிப் போட்டது. ஆட்சி கலைக்கப்பட்ட கருணாநிதி பற்றி யாரும் கவலைப்படவில்லை. ராஜீவ் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அடுத்து நடைபெற வேண்டிய இரண்டு கட்டத் தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டது.

சிறிது இடைவெளிக்குப் பின்னர், இறுதிக்கட்டத் தேர்தலாக, தமிழ்நாட்டில் ஜூன் 16 அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. பெரும்பான்மை இடங்களில் வாரிச்சுருட்டியிருந்தது அதிமுக கூட்டணி. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காங்கேயம், பர்கூர் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இந்திய அளவிலும் முதற்கட்டத் தேர்தலை விட அடுத்து நடந்த இரண்டு கட்டத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்றது. தமிழகத்தில் திமுக ஒட்டுமொத்தமாக துடைக்கப்பட்டிருந்தது.

வேட்பாளர்கள் மரணம் காரணமாக சென்னை எழும்பூர், முசிறி தொகுதிகளைத் தவிர 232 தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியானது. 158 தொகுதிகளில் அதிமுகவும், அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட ஐந்து பேருமாக 163 இடங்கள் அதிமுகவிற்கு கிடைத்தன. 61 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தன. ஆர்.எம்.வீரப்பன் இத்தேர்தலில் போட்டியிடவில்லை அல்லது சீட் வழங்கப்படவில்லை என்றும் கூறலாம். தேனி தொகுதியில் நெடுஞ்செழியன், தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.டி.சோமசுந்தரம் வென்றனர்.

1991 தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார். சேப்பாக்கத்தில் அன்பழகன், திருவல்லிகேணியில் நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். திமுக கூட்டணியில் போட்டியிட்ட அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகத்தின் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இருவரும் வெற்றி பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜி.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வி.தம்புசாமி, ஜனதா தளம் கட்சியின் டாக்டர் குமாரதாஸ் ஆகியோர் திமுக கூட்டணியில் வென்றவர்கள். முதல் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனது வெற்றியை பதிவு செய்தது, பண்ருட்டி ராமச்சந்திரன் வென்றார். சுயேட்சை வேட்பாளர் தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா

தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் முதலமைச்சராக 1991 ஜூன் 24 அன்று ஜெ.ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். மலிவுவிலை மதுக்கடைகளை மூடுவதாக முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. மத்தியிலும் 224 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. பி.வி.நரசிம்மராவ் பிரதமர் ஆனார். முக்கியத் திருப்பமாக 119 இடங்களில் வென்ற பாரதிய ஜனதாக் கட்சி பிரதான எதிர்கட்சியாக நாடாளுமன்ற மக்களவையில் அமர்ந்தது.

அனுதாப அலையில் அதிமுக வென்றதாக திமுக விமர்சனம் செய்தது. காங்கேயம், பர்கூர் இரண்டு தொகுதிகளில் வென்றதால், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா. திமுகவின் தோல்விக்குப் பொறுப்பேற்று துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி. சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்து முடிந்த அடுத்த சில நாட்களில் 1991 ஆகஸ்ட் 24 அன்று காங்கேயம், துறைமுகம், எழும்பூர், முசிறி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

ராஜீவ் மரணத்தின் அரசியல் தாக்கம் குறைந்திருந்தது. எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி, துறைமுகம் தொகுதியில் திமுகவின் செல்வராசன், காங்கேயம் தொகுதியில் அதிமுகவில் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஒரு மரணம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலையே மாற்றி விட்டது என்பதற்கு உதாரணம் 1991ல் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள்.!

(ஆடுபுலி ஆட்டம் தொடரும் )

"நாடாளுமன்றத்தை 'லப்பர் ஸ்டாம்ப்' ஆக்கும் சதி" - சிறப்பு கூட்டத்தொடர் குறித்து பா.சிதம்பரம் காட்டம்

மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச்... மேலும் பார்க்க

நாகர்கோவில்: "தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசி வருகிறார்" - ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைவரும் சூரிய உதயத்தைப் பார்க்க மக்கள் எல்லாம் வரக்கூடிய மாவட்டம் கன்னியாக... மேலும் பார்க்க

"நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்குச் சொல்லிவிட்டேன்" - ஊகங்களுக்கு விளக்கமளித்த அண்ணாமலை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளரின் பட்டியல் நேற்று வெளியானது. அதில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கோவை சிங்காநல்லூர... மேலும் பார்க்க

மகளிர் இட ஒதுக்கீடு: `சமமான பிரதிநிதித்துவமா அல்லது தேர்தல் வியூகமா?' - விவாதப் பொருளாகும் திட்டம்!

பெண்களுக்கு இட ஒதுக்கீடுநாடாளுமன்றம்மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் க... மேலும் பார்க்க

குமரி: 6 வாக்காளர்களுக்காக 125 கி.மீ தூரம் பயணிக்கும் மின்னணு இயந்திரம்! ஏன் தெரியுமா?

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்களை நியமிக்கும்... மேலும் பார்க்க