சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வ...
'நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியது ஏன்?' - இயக்குநர் களஞ்சியம் விளக்கம்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக இயக்குநர் களஞ்சியம் அறிவித்திருக்கிறார்.
தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்தவகையில் இன்று இயக்குநர் களஞ்சியம் நாதகவில் இருந்து விலகி இருக்கிறார்.
கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு களஞ்சியம் எழுதியிருக்கும் கடிதத்தில், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் உங்களோடு உங்களின் நம்பிக்கைக்குரிய தம்பியாகப் பயணித்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

"தமிழர் நலப் பேரியக்கத்தின்" தலைவராக நான் 2016-ஆம் ஆண்டு உங்களோடு இணைந்தது முதல், களப்பணி, தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் எனத் தங்களின் வழிகாட்டலில் கட்சியின் வளர்ச்சிக்காக எனது முழு ஆற்றலையும் அர்ப்பணித்துச் செயல்பட்டுள்ளேன்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி என்னை அழைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தீர்கள். அவ்வாறு 8-ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியில் இணைந்து, 2-முறை தேர்தலில் பங்கெடுக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்கு நன்றி அண்ணா.
தற்போது, இயக்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்கள், தனிநபர்கள் மீதான விமர்சனங்களின் தரம் குறித்து எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு.
தமிழ்த்தேசியக் கொள்கை என்பது வெறுப்பரசியலைக் கடந்தது; அது அனைவரையும் உள்ளடக்கிய அதிகார மாற்றத்திற்கான கருத்தியல் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.
ஆனால், அதற்கு நேர்மாறாக கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

விமர்சனங்கள் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் தாக்குதலாக இருக்கக் கூடாது என்பது எனது உறுதியான நம்பிக்கை. குறிப்பாக, நம்மோடு பயணித்தவர்கள் மற்றும் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீதான இழிவான விமர்சனங்கள், நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்று நான் கருதுகிறேன்.
எனவே, எனது அரசியல் புரிதலும் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளும் கட்சியின் தற்போதைய போக்கிலிருந்து மாறுபடுகின்றன. இருப்பினும், உங்கள் மீதான மரியாதையை நான் எப்போதும் கொண்டிருப்பேன்.
கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதால், நான் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்தும், நாம் தமிழர் கட்சியிலிருந்தும் முறைப்படி விலகிக் கொள்கிறேன். தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் ஒரு தம்பியாக எனது பயணம் தொடரும்" என்று விளக்கமளித்து விலகியிருக்கிறார் களஞ்சியம்.















