மனிதனை மீண்டும் மனிதனாக்கும் 'ஓய்வு' – டிஜிட்டல் யுகத்தில் நாம் தொலைக்கும் அமைதி
பட்டுப்பூச்சி வளர்ப்பு – பெண்களின் சுயசார்பையும் தன்னம்பிக்கையையும் நெய்யும் அமைதியான புரட்சி!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒரு பட்டுச் சேலையை கைகளில் ஏந்தும்போது, அதன் மென்மையையும் நேர்த்தியான கலை வடிவத்தையும் மட்டுமே நாம் உணர்கிறோம். ஆனால் அந்தப் புடவையின் ஒவ்வொரு இழையிலும் ஒரு பெண்ணின் வியர்வை, பொறுமை, உழைப்பு, கனவு ஆகியவை பின்னிப் பிணைந்திருக்கின்றன. வயலில் மல்பெரி மரத்தை வளர்ப்பதில் தொடங்கி, பட்டுப்பூச்சியை பராமரித்து, பட்டுக்கூடுகளில் இருந்து நூலைப் பிரிப்பது வரை நீளும் இந்தப் பயணத்தில், பெண்களின் கைகள் அமைதியாக ஒரு சமூக மாற்றத்தையும் நெய்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் பட்டு வளர்ப்பு (Sericulture) இன்று ஒரு தொழிலாக மட்டுமல்ல, பெண்களின் வாழ்க்கையை மாற்றிய ஒரு சமூக மாற்றிய பயணமாகவும் உருவெடுத்துள்ளது. மல்பெரி மரம் வளர்ப்பது முதல் பட்டுப்பூச்சி பராமரிப்பு, பட்டுக்கூடுகள் அறுவடை, பட்டு நூல் எடுப்பு, நெசவு வரை ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

பட்டு வளர்ப்பு பெண்களுக்கு ஏற்ற தொழிலாகக் கருதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. வீட்டிற்கு அருகிலேயே மேற்கொள்ளக்கூடிய வேலை என்பதால் குடும்பப் பொறுப்புகளையும் தொழிலையும் சமநிலைப்படுத்த முடிகிறது. மேலும், குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்தத் தொழில், சீரான வருமானத்திற்கும் வழிவகுக்கிறது.
அந்த வகையில் நாமக்கல்லைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண் விவசாயி கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பட்டுப்புழு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பட்டுப்புழு விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் வருமானம் பெருகி வருவதாகவும் கூறுகிறார்.
கால நிலை மாற்றம், பூச்சி வெட்டு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் கூட தனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதர்வால் இந்த விவசாயத்தில் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
பல பகுதிகளில் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். அரசுத் துறைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும் தொழில்நுட்பப் பயிற்சிகள், வங்கிக் கடன்கள் மற்றும் மானியத் திட்டங்கள் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
தனியாகச் செயல்படுவதைவிட குழுவாகச் செயல்படுவதால் சந்தை அணுகலும், வருமானமும் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

முன்பு தினக்கூலிக்காக மட்டுமே வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது நாங்களே திட்டமிட்டு உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார் மற்றொரு பெண் விவசாயி.

"பெண்கள் மிகவும் பொறுமையுடனும் கவனத்துடனும் பட்டுப்பூச்சிகளை பராமரிக்கிறார்கள். அதனால் தரமான பட்டுக்கூடுகள் கிடைக்கின்றன," என்று தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தியாளர் நலசங்க உறுப்பினர் பிரபு தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி, பெண்களின் ஈடுபாடே இந்தத் துறையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல, இந்தத் தொழில் பெண்களின் தன்னம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது. குடும்ப முடிவுகளில் அவர்களின் கருத்துக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது, கடன் பெறுவது, தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பது போன்றவற்றில் பெண்களின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது.

"பயிற்சிகள் கிடைக்கின்றன. ஆனால் சந்தையை நேரடியாக அடையவும், எங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் இன்னும் அதிக ஆதரவு தேவை," என்று ஒரு பெண் தொழில்முனைவோர் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
பட்டு வளர்ப்பு என்பது வெறும் வேளாண்மை சார்ந்த தொழில் அல்ல. அது பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும், சமூக அங்கீகாரத்தையும், தன்னம்பிக்கையையும் நெய்துக்கொண்டிருக்கும் அமைதியான புரட்சி. அந்தப் புரட்சியின் ஒவ்வொரு இழையிலும், ஒரு பெண்ணின் எதிர்காலம் ஒளிர்கிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ


















