செய்திகள் :

பாதிக்கப்பட்டவரை நோக்கி விரல் நீட்டும் சமூகம் நீதியைக் கோரவில்லை; காரணங்களை தேடுகிறது #HerSafety

post image

நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கணக்கிடவே முடியாத பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கோவையில் 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் இன்னொரு புதிய சேர்க்கை.

அது ஒரு குற்றம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களிலும் நிகழ்வதுபோல ஒரு பெண்ணின் உடல் எப்படி உடனடியாக பொதுவில் ஒரு போர்க்களமாக மாறிவிடுகிறது என்பதை கடுமையாக, எந்த மேற்பூச்சும் இல்லாமல் காட்டும் இன்னொரு அப்பட்டமான உண்மை.

Sexual Harassment (Representational Image)

பாதிக்கப்பட்டவரையே குற்றம்சாட்டுவது, காட்சிப்பொருளாக்குவது பிறகு திசைதிருப்புவது என்கிற வழக்கமான, நைந்துபோன உத்திகளை சமூகம் இந்த முறையும் கையிலெடுத்திருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு எதிராக வன்முறை நடக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணும் அவளுடன் நிற்பவர்களும் அந்த வன்முறைக்கு எதிராக மட்டுமல்லாமல் அவர்களைப் பற்றிய சமூகத்தின் மோசமான மதிப்பீடுகளுக்கும், கருத்தாக்கங்களுக்கும் எதிராகவும், கூடுதலாகவும் போராட வேண்டியிருக்கிறது.

இதில் நமக்கெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதிய அளவில் வழக்குகளாவதில்லை என்று அங்கலாய்ப்பு வேறு.

கோவைக் குற்றத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பெண்ணை வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவரில் இருவர், ஏற்கெனவே கொலைக்குற்றம் உள்பட பல குற்றங்களைச் செய்த குற்றவாளிகள்.

பாதிக்கப்பட்ட பெண் ஏன் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியவர்கள் யாரும் அந்த குற்றவாளிகள் எப்படி அங்கு உலவிக் கொண்டிருந்தார்கள் என்று கேட்கவில்லை.

இந்த சமூகத்தில் ஒரு குற்றவாளிக்கு இருக்கும், வழங்கப்படும் சுதந்திரமும் சந்தேகத்தின் பலனும்கூட ஒரு நாளும் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கப்போவதில்லை.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

இந்தக் கேள்விகளோடு அந்தப் பெண்ணின் உடைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளும் ஒரு விஷயத்தைத் தெளிவுப்படுத்துகின்றன. இந்தக் கேள்விகள் சமூகத்தின் மிக அப்பட்டமான வாக்குமூலமாக நம் முன் நிற்கின்றன. எதன் பக்கம் நிற்கிறோம் என்பதை சமூகம் இந்தக் கேள்விகள் மூலமாக நிறுவுகிறது.

சமூகத்தின் பார்வையும், வாதமும் குற்றம் செய்தவர்களை நோக்கியோ, அல்லது அந்தக் குற்றங்களை சாத்தியப்படுத்திய அமைப்புகளை நோக்கியோ, குற்றவாளிகளைச் சுதந்திரமாக உலவவிட்டதோடு அல்லாமல், அவர்களை இன்னும் குற்றம்புரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த, அதன் தோல்விகளை நோக்கியோ இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியதாக இருக்கிறது. அவரது உடல் சாட்சியாகிறது. அவரது இருப்பு சந்தேகத்திற்குரியதாகிறது. அவரது மாண்பு சமரசத்துக்குள்ளாக்கப்படுகிறது.

அதற்கு முன்பும் அதற்கு பின்பும் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகள் நடந்திருந்தாலும் இந்தியாவின் ஆன்மாவை உலுக்கிய ஒரு வன்முறையாக இன்றளவும் நிர்பயா இருக்கிறது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

ஆணையங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தன. சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் பற்றிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அனுமதி (consent) பற்றிய உரையாடல்கள் இன்று பரவலாகிவிட்டன. ஆனால், நிர்பயாவுக்கு பிறகான இந்த பத்து, பதினைந்து வருடங்களில் பெரிதாக என்ன மாறிவிட்டது? சட்டங்களை மாற்ற முடிந்த நம்மால் குற்றங்களை அனுமதிக்கும், ஊக்குவிக்கும் அமைப்புகளை மாற்ற முடிந்திருக்கிறதா?

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

இந்த அமைப்புகளை மாற்றுவதற்கு தேவை அரசியல் உறுதி. குற்றங்கள் நடந்த பிறகு வினை புரியாமல் நடப்பதற்கு முன்பு தடுக்கத் தயாராக இருக்கும் ஒரு முறை. இவற்றுக்கு அடிப்படையாக, பாலின வன்முறையை அதன் வேர்களில் வெட்டிச் சாய்க்கும் சமூக மாற்றம். அதுஇல்லாமல் சட்டம் வெறும் அட்டைக் கத்தி மட்டுமே.

இதை வெறும் காவல்துறையின் தோல்வி என்று மட்டும் சொல்லிவிட முடியுமா? இது சமூகத்தின் தோல்வி. ஒரு சமூகமாக நம்மை நோக்கி நாம் சில கேள்விகளை எழுப்பிக்கொள்வோம்.

சில வழக்குகள் மட்டும் ஏன் நம்மை உலுக்குகின்றன? பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சோகால்ட் ‘நிர்ணயங்களுக்கு’ ஓரளவு ஒத்து வரும் பெண்களுக்காக, நகரங்களின் வெளிச்ச உமிழ்வுகளில் நிகழும் குற்றங்களுக்காக, அல்லது பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டால் மட்டுமே நம் தேசம் ஏன் கொந்தளித்து எழுகிறது? கிராமங்களில், தலித் பெண்கள் மீது, புலம்பெயர் பெண்கள் மீது தினந்தோறும் ஏவப்படும் சமூக வன்முறை ஏன் பொது மனநிலையை உலுக்கவில்லை? நமது கூட்டு மனநிலை அனுதாபம் (collective empathy) தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருப்பதால் அவர்களது வலி சிறியதாக இருக்கிறது.

இந்தத் தேர்வு என்பதும் இயற்கையானது அல்ல. அது உருவாக்கப்பட்டது. சமாளிக்கக்கூடிய சில பிரச்னைகளை அரசுகள் பெரிதாக்கிக்காட்டுகின்றன. விரைவாக முடியக்கூடிய வழக்குகளை காவல்துறை முன்னிறுத்திக்காட்டுகிறது. பரபரப்பை கூட்டுமென்பதற்காகவே சில வழக்குகளை கையிலெடுக்கின்றன ஊடகங்கள்.

இங்கு உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நீதி மீது யாருக்கு அக்கறை இருக்கிறது? இதற்கிடையில் அமைப்பு ரீதியிலான அநீதிகள் – அது குற்றவாளிகள் உலவிக்கொண்டிருப்பதாகட்டும், பாதுகாப்பற்ற நகரங்களாகட்டும், போதுமான காவல்துறையினர் இல்லாதிருப்பதாகட்டும் – கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டோமென்று தமிழ்நாடு அரசும் மார்தட்டிக்கொள்ள முடியாது. பாதுகாப்பை குற்றத்திற்குப் பிறகு அளவிடுவது சரியில்லை. குற்றப் பின்ணனி கொண்ட நபர்கள் எப்படி சுதந்திரமாக உலவ முடிகிறது? 2025லும் கூட பெண்களுக்கு தேவைப்படும்போது மட்டும் சிசி டிவிக்கள் எப்படி வேலை செய்யாமல் போகிறது? இப்படி எண்ணற்ற கேள்விகளை எழுப்ப முடியும்.

ஆனால் அரசைக் குற்றம் சொல்லி அல்லது இதை ஒரு அரசியல்ரீதியிலான திசைதிருப்பலாக மட்டும் அணுகி சரி செய்துவிடமுடியாது.

கோவையும் கோவை சம்பவம் போன்ற எண்ணற்ற பெண்கள் மீதான வன்முறைகளும் ஏற்கெனவே சொன்னதுபோல ஒரு சமூகமாக நம் தோல்வி. வன்முறையை சாத்தியமாக்கும் பழக்கவழக்கங்களை விட்டொழிப்பதிலிருந்து இந்தத் தோல்வியை சரி செய்ய வேண்டியிருக்கிறது.

துன்புறுத்தலை (harassment) இயல்பாக்கும் நகைச்சுவைகள், அக்கறை என்கிற பேரில் முன்வைக்கப்படும் தார்மீக காவல்ரீதியிலான கேள்விகள் (moral policing), பிறகு ஆண்களின் வன்முறையை விட்டுவிட்டு பெண்களின் உடல்களை பேசும் நம் அவ்வளவு எளிதான இயல்புகள். இதையெல்லாம் எங்கிருந்து மாற்றத் தொடங்குவது?

பெண்ணின் இருப்பைப் பற்றியும் உடையைப் பற்றியும் கேள்வியெழுப்பும் ஒவ்வொருவரிடமும் நான் கேட்க விரும்புவது இதைத்தான். அந்தக் குற்றவாளிகளுக்கு பதிலாக நீங்கள் அங்கிருந்திருந்தால் அந்தக் குற்றத்தை செய்திருப்பீர்களா?

Sexual harassment
Sexual harassment

ஒரு குற்றத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதிலிருந்துதான் குற்றங்கள் தொடங்குகின்றன, தொடர்கின்றன, பாதுகாக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவரை நோக்கி விரல் நீட்டும் சமூகம் நீதியைக் கோரவில்லை; காரணங்களைத் தேடுகிறது.

அது நிகழ்ந்து கொண்டிருக்கும்வரையில், இந்தச் சமூகத்தை எந்தச் சட்டமும், எந்த அரசு உத்தரவும், எந்த நீதிமன்றமும் பெண்களுக்கான பாதுகாப்பான ஒன்றாக மாற்ற முடியாது.

கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு மட்டுமல்ல, சமூகம் கண்டுகொள்ளாத வலிகளைச் சுமக்கும் எண்ணற்றப் பெண்களுக்கும் நாம் கண நேர கோபத்தைவிட, அடுத்த பிரச்னை வரும்வரையிலான கவனத்தைவிட அதிகம் தர வேண்டியிருக்கிறது.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

சந்தர்ப்பங்களை சார்ந்திருக்காத பாதுகாப்பைத் தர வேண்டியிருக்கிறது. சமூக மாற்றத்தைத் தர வேண்டியிருக்கிறது.

அது முழுமையாக நிகழும்வரையில், நமது மௌனமும் அனைத்துக் குற்றங்களுக்கும் உடந்தையாக இருக்கும். நமது அறச்சீற்றம் அரங்கத்துக்கானதாக மட்டுமே நிற்கும்.

- கவிதா முரளிதரன்

கோவை சம்பவம் : `பாலியல் வன்கொடுமையை கூட நார்மலைஸ் செஞ்சிடுவீங்களா?’ - பதறும் 2K கிட்ஸ் | #HerSafety

சமீபத்திய கோவை பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாது, உங்கள் நினைவுக்குத் தெரிந்து நடந்த பாலியல் வன்கொடுமைகளைப்பற்றிய உங்கள் கருத்துகளை விகடனிடம் சொல்லுங்கள் என சில கல்லூரி மாணவர்களிடம் கேட்டோம். வெடித்துத் ... மேலும் பார்க்க

'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety

ரெண்டு, மூணு பசங்க சேர்ந்து இருந்தா... தண்ணீ அடிச்சிருந்தா... பொண்ணுங்க அரைகுறையா டிரஸ் பண்ணியிருந்தா தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்னு சொல்ல முடியாது. இது எதுவுமே இல்லாத போது தான், எனக்கு... மேலும் பார்க்க

`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' - பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புகள் | #HerSafety

பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்க... மேலும் பார்க்க

கோவை மாணவியின் கண்ணீரே கடைசியாக இருக்கட்டும்! | #HerSafety

கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ஆம் தேதி இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி பெண்களுக்கு எதிரா... மேலும் பார்க்க

'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கருத்து? |#HerSafety

மீண்டும்... மீண்டும்...கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் ப... மேலும் பார்க்க

`இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety

'கல்லு, கண்ணாடி... முள்ளு, சேலை... ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான்' என்கிற போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற புத்தம் புதிய கருத்தை, சமூக வ... மேலும் பார்க்க