Roman Telescope: பிரபஞ்சத்தின் இருண்ட ரகசியங்களைத் தேடும் நாசாவின் $4 பில்லியன் ...
மதுரை: மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற மகன்; அடித்துக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்
மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி அய்யம்மாள்(50). இவரது கணவன் உயிரிழந்த நிலையில் தனது மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார். ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் அய்யம்மாள் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று தனது மகனைக் கொன்று விட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் அளித்த புகாரில் கருப்பாயூரணி காவல்துறையினர் அய்யம்மாளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “கடந்த 3 மாதத்திற்கு முன்பு தனது மகன் ராஜா மதுபோதையில் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்து தகராறு செய்து ஆபாசமாகப் பேசி தாக்கியதோடு தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்.
மேலும் மகன் ராஜா தொடர்ந்து தன்னைத் தாக்க முயன்றபோது மதுபோதையில் இருந்த மகன் ராஜாவைக் கீழே தள்ளிவிட்டு கீழே கிடந்த கம்பியை எடுத்து அவனது தலை, கை மற்றும் உடல் முழுவதும் மாறி மாறி அடித்து கொன்றுவிட்டேன். இதையடுத்து ராஜாவின் உடலைத் தனது வீட்டில் பாத்ரூம் கட்டுவதற்காக வீட்டின் இடதுபுற வாசல் அருகே தோண்டிவைத்திருந்த குழியில் ராஜாவின் உடலைப் புதைத்து மூடி அதன் மீது விறகுக் கட்டைகளை வைத்து மறைத்து விட்டேன்” எனத் தெரிவித்தார்,

தொடர்ந்து காவல்துறையினர் அய்யம்மாளை வீட்டிற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்று ராஜாவைப் புதைத்த இடத்தில் உடலை வருவாய்துறை அதிகாரிகள் முன்பு உடற்கூராய்வு நடத்தப்படவுள்ளது.
மகனைக் கொன்றதாகக் கூறிய அய்யம்மாள் சில நாள்களாக அண்டை வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மகன் இல்லை எனவும் புலம்பிவந்துள்ளார். இந்த விவகாரம் ஊர் முழுக்க தெரியவந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று அய்யம்மாள் தனது மகனைக் கொலை செய்து புதைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மதுரையில் தாயிடம் தவறாக நடக்க முயன்ற மகனை அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டின் பின்புறம் புதைத்து வைத்து மூன்று மாதமாக மறைத்து வீட்டிலேயே தங்கியதாக தாயார் அளித்த வாக்குமூலம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















