இந்தியில் பேச சொன்ன சூர்யா; 'எனக்கு இந்தி தெரியாது மச்சி!' என பதில் அளித்த வருண்...
மத்திய அரசின் நிதிப்பகிர்வு: தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன? | Full list
இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதையடுத்து இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
அந்தப் பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு நிதிப் பகிர்வு குறித்து தங்கம் தென்னரசு கூறியதாவது...
9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
> சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நடைமுறை (GST Compensation to States) முடிவடைந்ததால், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், மாநிலங்களின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

> ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயிலிருந்து முன்னறிவிப்போ அல்லது அரசுடன் கலந்தாலோசனையோ இன்றி, பெரும் தொகையான 1,709 கோடி ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள மாநில அரசின் கணக்கில் இருந்து ஒன்றிய அரசு 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிடித்தம் செய்தது.
இதனால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பின் கீழ் வருவாய்க் குறைவு ஏற்பட்டுள்ளதால், நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
> 2025-26-ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றிய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் 1,202 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
> அரசியல் சாசனப் பிரிவு 293-ன் படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு 16,290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்கவேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
அவ்வாறு வழங்க இயலாத நிலையில் மாநில அரசிற்கு அனுமதிக்கப்படும் கடன் உச்சவரம்பிலிருந்து அத்தொகை கழிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு 413 கோடி ரூபாய் மட்டுமே உள்ளபடியான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் நிபந்தனை, நடப்பு ஆண்டில் மாநில அரசிற்கு 15,877 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.
> மாநில அரசுகளின் செலவினங்கள் ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மாநில அரசுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3.548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் இயக்கத்திற்கு 3,112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2,246 கோடி ரூபாய் ஆகியவை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளவற்றில் உள்ளடங்கும்.
> சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான செலவினத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் 50:50 என மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், அதன்படி மாநில அரசிற்கு கிடைக்கப் பெறவேண்டிய பலன்கள் இன்றளவும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.
இதன் காரணமாக, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான சுமார் 9,500 கோடி ரூபாய், மாநில அரசின் மொத்த நிலுவைக்கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்து காணப்படுவது மட்டுமல்லாமல், மாநிலத்திற்கு உரிய கடன் திரட்டும் திறனையும் பாதித்துள்ளது.
இதனால், மாநில அரசின் பணப்புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை செவிமடுத்து, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளத் தவறியுள்ளது" என்று பேசி...
"எனினும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு வழங்க மறுக்கும் நிதி, அனுமதி மறுக்கப்படும் நலத் திட்டங்கள் என பல தடைகளைத் தாண்டியும், தமிழ்நாடு சாதனைகள் பல புரிந்து வருவதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்" என்று திமுக அரசைப் பாராட்டி முடித்தார்.













