செய்திகள் :

‘மழை… டீ… மியூசிக்’ என உருகுபவர்களே, பாதுகாப்பு + முன்னெச்சரிக்கைக்கு முதல் மரியாதை செய்யுங்கள்!

post image

வெயிலில் இருந்து ஓர் இளைப்பாறல் கொடுப்பதால், பலரும் இங்கு மழை விரும்பிகளே. மனங்களைக் கிளர்த்தும் மண்வாசம், மண்ணில் பரவும் புது பசுமை, காற்றில் தங்கும் ஈரம் என மழைக்காலம் என்பது பூமிக்கு ஒரு சூரிய விடுமுறை. கூடவே, நோய்கள் முதல் சாலைக்குழிகள் வரை இக்காலத்தின் ஆபத்துகளும் பல. அக்டோபர் 1 - 25 வரை, தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 31. எனவே, முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே மழை மாதங்களைப் பாதுகாப்பாகக் கடக்க வைக்கும்.

மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உண்டாகும். வீட்டின் சுற்றுப்பகுதி, மாடி என எங்கும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழையில் நனையும் ஆசையை எல்லாம், சளி, காய்ச்சல் என அதற்குப் பின்னான அவஸ்தைகளை நினைத்து, தள்ளிவைக்க வேண்டும். காற்றில் ஈரம் அதிகமிருப்பது கிருமிப் பெருக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதால், தேவைப்படும்போதெல்லாம் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது நல்லது.

வழுக்கும் வகையிலான வழவழப்புத் தரையில் வேக நடை, ஓட்டம் எல்லாம் காயம் முதல் எலும்பு முறிவு வரை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இரட்டை கவனத்துடன் இருக்க வேண்டும்.

விஷப்பூச்சிகள் முதல் பாம்புகள் வரை வீடு நோக்கி வந்து அண்டக்கூடும். எனவே, வீட்டுச் சுற்றத்தை புல், புதர், இழைக் கழிவுகள், குப்பை இன்றி வைத்துக்கொள்ள வேண்டும். ஜன்னல், கதவுப் பகுதிகளில் கொசுவலை பொருத்திக்கொள்வது கொசுவிடமிருந்து மட்டுமல்லாது, மற்ற பூச்சிகளின் படையெடுப்புகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்.

மழையும் இரவும் ஆபத்தான இணை. அதுவும், பள்ளம் விழுந்து, குழி வெட்டப்பட்டு, மின் வயர்கள் அறுந்து விழுந்து என்றிருக்கும் நம்மூர் சாலைகளில் ஒவ்வோர் அடியும் கவனமுடன் எடுத்து வைக்கப்பட வேண்டும். தரையை மூடியிருக்கும் தடுப்புகளை நம்பி அதன் மேல் கால் வைத்து நடக்கக் கூடாது. இரவு வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்ப்பதும், அவசியமான சூழலில் டார்ச் உடன் செல்வதும் முக்கியம்.

வானிலை, மின்தடை அறிவிப்புகளை அறிந்திருக்க வேண்டும். மழை, வெள்ள எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதே புத்திசாலித் தனம். இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியிலோ, திறந்தவெளியிலோ நிற்காமல், பாதுகாப்பான கட்டடங்களில் தஞ்சமடைய வேண்டும். வீட்டில் உள்ள மின்சாதன வயர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மின்சாதனப் பொருள்களின் மீது மழை ஈரம் படுவதோ, ஈரக்கையால் அவற்றை கையாள்வதோ கூடாது.

மழை, இயற்கையின் தழுவல்தான். அதன் அழகை, நம் பாதுகாப்பை உறுதி செய்தபடியே ரசிப்போம், கடப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்