UAE: `கிரிப்டோ மோசடி' பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி - நடந்...
முகவாதம்; வராமல் இருக்க, வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? கம்ப்ளீட் கைடன்ஸ்!
குளிர் காலங்களில், வயதானவர்களுக்கும், நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் ’முகவாதம்’ (Facial Palsy) வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
முகவாதம் என்றால் என்ன; முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா; இது ஏன் ஏற்படுகிறது; வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்; வந்துவிட்டால் என்ன செய்வது என விளக்கமாக சொல்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வுகளைத் தரும் முக நரம்புகளில், (Facial Nerves) உள் காயம் ஏற்பட்டாலோ, வைரஸ் தொற்று ஏற்பட்டாலோ முகவாதம் வரலாம்.
முகவாதம் வந்தவர்களால், வாயைக் குவிக்க முடியாது, உதடு ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளும், ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது, வாய் வழி எச்சில் வடியும், சரியாக பேச இயலாமல் குழறும்.
முகத்திற்கு உணர்வளிக்கும் ஃபேஷியல் நரம்பில் ஐந்து முக்கிய கிளைகள் இருக்கின்றன.
டெம்போரல் கிளை (temporal) : நெற்றிப் பகுதியில் உள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்த கிளை பாதிக்கப்படுவதால் நெற்றியை சுருக்க இயலாமல் போகும்.
சைகோமேட்டிக் கிளை (Zygomatic) : இது கண்கள் மற்றும் கன்னப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. முகவாதத்தில், இந்தக் கிளை பாதிக்கப்படுவதால் கண்களை மூட இயலாமல் போகும். சிரிக்க இயலாமல் போகும்.
பக்கல் கிளை (Buccal) : இது பாதிக்கப்பட்டால், கன்னப்பகுதி உணர்வற்றுப் போகும். உணவை சரிவர மெல்ல இயலாது.
மார்ஜினல் மாண்டிபுலர் கிளை (Marginal mandibular): இது கீழ் உதடு மற்றும் தாடை தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளையாகும். இது பாதிக்கப்பட்டால், கீழ்வாய் தொங்கிப்போகும். கீழ் உதட்டில் இருந்து எச்சில் வடிந்தோடும்.
செர்விக்கல் கிளை (Cervical ): இந்த கிளை கழுத்தில் இருக்கும் ப்ளாடிஸ்மா தசைக்கு உணர்வூட்டுகிறது.
* தரையில் பாய், பெட்ஷீட் போன்றவற்றை விரிக்காமல் ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ச்சியான தரையில் வைத்துப் படுப்பதை தவிர்க்க வேண்டும்.
* தலையணை வைக்காமல் நேரடியாக டைல்ஸ்/ மார்பிள்/ கிரானைட் தரைகளில் தலையை வைத்துப் படுத்தால், முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம், ஜாக்கிரதை.
* கார், பேருந்து, ரயில் பயணங்களின்போது, குளிர்ந்த வாடைக் காற்று தொடர்ந்து காது மற்றும் கன்னப்பகுதியில் பட்டுக்கொண்டே இருந்தால், முகவாதம் ஏற்படலாம்.

* வீட்டிலும், உறங்கும்போது ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்தக் காற்று நேரடியாக முகத்தில் படுமாறு படுப்பதை தவிர்ப்பது நல்லது.
* ஏசி உபயோகிப்பவர்களும் குளிர் காற்று நேரடியாக முகத்தில் படாதவாறு படுப்பது நல்லது.
* எப்போதும் மிகக்கடினமான தலையணை உபயோகிப்பதைத் தவிர்த்து, லேசான தலையணை உபயோகிப்பது நல்லது.
கிடையாது. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்த நாள அடைப்பினால் அல்லது ரத்தக்கசிவால் ஏற்படும். ஆனால், முகவாதம் வந்தவர்களுக்கு மூளையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. முகத்துக்கு உணர்வுகளைத் தரும் நரம்பில் அழுத்தம் அல்லது அழற்சி அல்லது வைரஸ் தொற்று ஆகியவை தான் முகவாதம் வருவதற்கு காரணம்.

இந்தப் பிரச்னையில், முக நரம்புகளில் உள்காயம் எற்பட்டு, வீக்கமடைந்து இருக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
பொதுவாக இதுபோன்ற குளிர் சீதோஷ்ண நிலை மற்றும் அழுத்தத்தால் விளைந்த முக வாதம் குணமாக 2 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
* உள்காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்டீராய்டு மருந்தும் வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.
* கண்கள் திறந்தே இருக்கும் என்பதால் வறண்டுவிடாமல் இருக்க, மருத்துவரின் பரிந்துரையைக் கேட்டு சொட்டு மருந்து அல்லது ஆயின்மென்ட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். தவிர, கண்களுக்கு பகல் நேரத்தில் கண்ணாடியும், இரவு நேரத்தில் கண்களை மூடும் கவசமும் அணிந்துக்கொள்ளலாம்.

* மென்று உண்பது கடினம் என்பதால், உண்ணும் உணவு முழு திரவமும் இல்லாமல் முழு திட உணவாகவும் இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது. தவிர, எளிதாக மென்று விழுங்கக்கூடிய அளவில் சிறு சிறு கவளங்களாக உணவை உட்கொள்ள வேண்டும். உணவை நீண்ட நேரம் எடுத்து மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிட நினைத்தால் புரையேறும். இருமல் வரும்.
* வாய் வறண்டு இருக்கும் என்பதால், உணவில் வெண்ணெய் போன்றவற்றை வழ வழப்புக்காக கலந்துக்கொள்ளலாம்.
* உணவு உண்ணும்போதும், நீர் பருகும்போதும் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் முழுக் கவனமும் அவற்றில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நீரை பாட்டிலில் ஊற்றி பருகுவதை தவிர்த்துவிட்டு, சிறிய கப்பில் ஊற்றிப் பருகுவது நல்லது.
* பாதிக்கப்பட்டப் பகுதியில் வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜ் செய்ய வேண்டும். கூடவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிசியோதெரபி சிகிச்சையும் எடுக்க வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

















